Published:Updated:

கடக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

கடக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
கடக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

ங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான குரு பகவான் கடந்த 2 ஆண்டுகளாக 3-வது வீட்டிலும் 4 -வது வீட்டிலும் இருந்து பலவித தொல்லைகளைக் கொடுத்து வந்தார். இப்போது குரு பகவான் 4.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அமோகமான வாழ்க்கையைத் தரப்போகிறார். இந்த வருடம் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்கள் வாழ்வில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும்.

பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடி புகுவார்கள். பலவித பிரச்னைகளில் சிக்கி குழப்பத்தில் இருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். இனம் புரியாத மகிழ்ச்சியும், உற்சாகமும் தங்கும். எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 5 -ம் இடத்துக்கு குரு பகவான் வருவதால், பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் இந்த ஓராண்டில் கிடைக்கக் கூடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டி வியக்கத்தக்கச் சாதனைகள் படைப்பார்கள். சிலரது பிள்ளைகள் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாமல் இருந்த மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் அமைவார். உங்களைப் பார்த்தும் பார்க்காததுபோல பேசாமல் சென்றவர்களெல்லாம் மீண்டும் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் உங்களின் மதிப்பு உயரும்.

பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கு கிடைக்கும். அதை நல்ல முறையில் மராமத்து செய்து சீர்திருத்தம் செய்வீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்து வருமானமும் வரத் தொடங்கும்.

ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6 - ம் வீட்டில் மறையும்போது, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளவேண்டாம். இந்த 2 மாதங்கள் மட்டும் கவனமாக இருந்தால் போதும். அதன் பிறகு வரும் நாள்கள் அமோகமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு: பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். உங்களை எதிரியைப் போல பார்த்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொண்டு பதவி உயர்வு அளிப்பார். சக ஊழியர்களும் உங்களுக்கு முழுமையாக உதவுவார்கள்.வியாபாரிகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்த பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிய பணியாளர்களை நியமிப்பீர்கள். பங்குதாரர்களும் இனி ஆதரவாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு: இதுநாள் வரை இருந்த தொய்வான நிலைமை மாறும். மாமியார், நாத்தனார் வகையில் இருந்து வந்து தொந்தரவுகள் விலகும். கணவன்- மனைவி உறவு பலப்படும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய இடத்தில் வேலைக் கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் இதுவரை ஞாபகமறதியால் முதல் ரேங்க் வாங்க முடியாமல் கவலைப்பட்டிருப்பார்கள்.இனி வருத்தப்படாதீர்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, முதல் ரேங்க் வாங்குவீர்கள். உங்களுடைய நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: இந்த குருப்பெயர்ச்சி ஓஹோவென்று சொல்ல வைக்கும். உங்களின் முழுத் திறமையும் வெளிப்படும். எங்குச் சென்றாலும், உங்கள் படைப்புகள் பற்றிய பேச்சாகவே இருக்கும்.

பரிகாரம்: நல்ல பலன்களைப் பெற தூத்துக்குடி மாவட்டம், அங்கமங்கலம் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீநரசிம்ம சாஸ்தாவைச் சனிக்கிழமையில் சென்று வணங்கினால் எல்லாவிதத்திலும் வெற்றி கிட்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும்.