Published:Updated:

சிம்ம ராசிக்காரர்களுக்கான கே.பி.வித்யாதரனின் குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

சிம்ம ராசிக்காரர்களுக்கான கே.பி.வித்யாதரனின்  குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video
சிம்ம ராசிக்காரர்களுக்கான கே.பி.வித்யாதரனின் குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

குருப்பெயர்ச்சிப் பலன்கள்! சிம்மம். சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் , பூர்வ புண்ணியாதிபதியாகவும் இருக்கும் குரு பகவான், இதுவரை உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்து அலைக்கழித்துக்கொண்டிருந்தார். 

எதைச் செய்தாலும், அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வந்த குரு பகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு 4 -ம் வீட்டில் அமர்கிறார். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தாயாரின் உடல்நலத்தில் நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தாயாரிடமும், தாய் வழி உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.  

வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு உள்ளது. வீடு, மனை வாங்கும்போது பத்திரங்களை கவனமாகப் பார்த்து வாங்குவது நல்லது. ஆனால், மனை வாங்கி வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். வாகனம் வாங்கும்போது உங்கள் பெயரில் வாங்காமல் இருப்பதுடன், வீட்டில் எவருக்கு யோக பலன் உள்ளதோ அவரின் பெயருக்கு வாங்குங்கள். நான்காம் இடத்தில் குரு இருப்பதால் ஒரு சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வரலாம்.  உறவினர்கள், அக்கம்பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  

உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொண்டு உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வீர்கள்.  4 -ம் வீட்டில் இருக்கும் குருபகவான் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால், ஒரு சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் கிடைக்கும்.  
10 - வீட்டைப் பார்ப்பதால், புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கும். நல்ல லாபமும் தொடர்ந்து கிடைக்கும்.
குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ்பெற்ற புண்ணியஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சிலர் குலதெய்வக் கோயிலுக்குப் போய் வருவீர்கள்.

குரு பகவான்   13.3.19 முதல் 18.5.19 வரை  அதிசாரத்தில் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்கிறார். அந்தக் காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் சிறப்பான பயன்களை அடையலாம். ஒரு சிலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையெல்லாம் கிடைக்கும். இதுநாள் வரை திருமணமாகாமல் இருந்த பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும்.  

வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப  புதிய முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய முதலீடு என்றதும் அதிகமாக முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். தேவைக்கேற்ப முதலீடு செய்யுங்கள்.       

உத்தியோகஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். ஆனாலும், சின்னச்சின்ன தொந்தரவுகள், இடமாறுதல் போன்றவை இருக்கும். மூத்த அதிகாரிகள் முதல் சக ஊழியர்கள் வரை அனைவரையும் அனுசரித்துப்போவது நல்லது. எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். கணவன் மனைவி உறவு பலப்படும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை   எழுதிப்பார்ப்பது நல்லது. வகுப்பறையில்  உங்களின் கவனத்தை முழுமையாகச் செலுத்துங்கள்.    

கலைத்துறையினருக்கு இந்த குரு மாற்றம் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். ஆனால், மார்ச் மாத மத்தியில் இருந்து மே மாதம் மத்திய பகுதி வரை உள்ள காலகட்டம்  உங்களுக்கு யோகமானது. நல்லமுறை யில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், வேலைப்பளுவையும், இடமாற்றங்களையும் தந்தாலும், கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும். ஆதரவற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள்.   
இந்த குரு மாற்றம் எல்லா வகையிலும் ஏற்றம் தரும் வகையில் அமையும்.