Published:Updated:

துலாம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

துலாம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
துலாம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

துலாம். உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக இருந்து ஓராண்டு காலம் குரு பகவான், உங்களைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்தார்.  உங்கள் கஷ்டங்களை வெளியில் சொன்னால் மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று உங்கள் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு துன்பப்பட்டீர்கள். அப்படிப்பட்ட  நிலையை மாற்றும் விதமாக 4.10.18 முதல் 28.10.19 வரை இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் அமர்கிறார்.

எப்போது பார்த்தாலும் கழுத்து வலி, கால் வலி எனப் பலவிதமான ஆரோக்கியத் தொந்தரவுகள். அதற்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடப் போக, அதனாலும் பல பிரச்னைகள். இந்த நிலையெல்லாம் மாறி உங்கள்  உடல் ஆரோக்கியம் மேம்படும். சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். 

கடந்த ஓராண்டாக நீங்கள் ஏதோ சொல்லப்போய் அதை மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொண்டு சொற்குற்றம், பொருள் குற்றம் பார்த்தார்கள். இனி அந்த நிலைமை இருக்காது. இனி உங்களின் பேச்சு கம்பீரமாகவும் சமயோசிதமாகவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். அவர்களுக்குள் அன்பும் பாசப் பிணைப்பும் உருவாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பின் காரணமாக விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். 

உங்களுடன் இருப்பவர்களில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு தெளிவான பாதையில் பயணிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு, நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்வார்கள்.

குரு பகவான் 2 - ம் வீட்டுக்கு வருவதால், இப்போது இருக்கும் வேலையில் இருந்துகொண்டே மேல் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வீர்கள். பணம் பல வழிகளில் வரும். இதுநாள் வரை இருந்த பொருளாதார வறட்சி நீங்கி, எப்போதும் கையில் பணம் இருந்துகொண்டே இருக்கும். 
மகளுக்கு வரன் அமையவில்லையே என்ற கவலை நீங்கி, நல்ல இடத்தில் வரன் அமையும்.

மகனுக்கு விரும்பிய கல்லூரியில் மேல் படிப்பில் இடம் கிடைக்கும். ஒரு சிலர் மேல் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்.
ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போயிருந்த வீடு கட்டும் வேலைகள் விறுவிறுவென நடைபெறும். போதுமான அளவு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் இருந்து வந்த சுணக்கமான நிலைமை மாறி விடும். இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சிலர் சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களைவிட வயதில் இளையவர்களிடமும், அனுபவம் குறைவானவர்களிடமும் பணிபுரிந்து அவமானங்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு, புதிய நிறுவனங்களில் வேலை அமையும். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனநிலை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு, படிப்பில் இருந்த உற்சாகமின்மை விலகும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். சக மாணவர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு, போட்டிகள் குறையும். தடைப்பட்ட வாய்ப்புகள் மறுபடியும் கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு நெற்குத்தி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று சென்று வழிபடுவது நன்மை தரும். இந்தக் குருப்பெயர்ச்சியில் தொட்டது துலங்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.