Published:Updated:

விருச்சிக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

விருச்சிக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
விருச்சிக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அதாவது 12 - வது இடத்தில் இருந்துகொண்டு குருபகவான் உங்களுக்கு ஏகப்பட்ட இன்னல்களைக் கொடுத்து வந்தார். சில நாள்களில் உங்கள் தூக்கம்கூட கெட்டுப்போயிருக்கும். இப்போது குருபகவான், 4.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்ந்திருக்கிறார்.

4.10.18 முதல் 20.10.18 வரை குரு பகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்திலும் 21.10.18 முதல் 19.12.18 வரை குரு பகவான் சனி பகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்கிறார். இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களுக்கும் இதுநாள் வரை இருந்த பாதிப்புகள் விலகி நல்லவிதமான மாறுதல்கள் நிகழும். கையில் ஓரளவு பணம் புழங்கத் தொடங்கும். தடங்கலான விஷயங்கள் நல்லவிதமாக நடக்கத்தொடங்கும். 

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார். கேட்டை நட்சத்திரக்காரர்கள், இந்தக் காலகட்டத்தில் தங்களின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உடற்சோர்வு, முன்கோபம், மன அழுத்தம் இதெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், அவர்கள் அவ்வப்போது உடற்பரிசோதனை, மருத்துவக் காப்பீடு  செய்துகொள்வது நல்லது. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 
ஏற்கெனவே உங்களுக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. கேதுவும் இரண்டாம் வீட்டுக்கு வரப்போகிறார். அதனால் உங்கள் வேலைகளை விரைவாகச் செய்து முடியுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாகவும், திட்டமிடலுடனும் காரியங்களைச் செய்யுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனதளவில் மிகவும் அன்பாகவே இருப்பார்கள். வார்த்தைகளாக வெளிவரும்போது அது கோபமாக வெளிப்படும். அன்பினாலும், அக்கறையினாலும்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர் வீட்டுக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம் . எப்போதுமே விருச்சிக ராசிக்காரர்கள் கோபக்காரர்கள் என்பார்கள். அதனால் உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அடிக்கடி கோயில்களுக்குச் சென்றுவாருங்கள். தியானம் செய்யுங்கள்.    
குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம்  சிலருக்குக் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். 
குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன் - மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டாலும் பாசம் குறையாது.குரு 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் ஏற்கெனவே இருந்த அளவு இப்போது உங்களுக்குக் கஷ்டத்தைத் தரமாட்டார். ஓரளவு பணவரவு இருக்கும். பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் வாங்குவீர்கள்.


வியாபாரிகளைப் பொறுத்தவரை, சந்தை நிலவரத்தை அறிந்துகொண்டு  முதலீடு செய்வீர்கள். பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வியாபாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நாளுக்கு நாள் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் சில நேரம் அன்பாகப் பேசுவார்கள். சில நேரம் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். இரண்டையும் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் உங்கள் கடமையில் கவனமாக இருங்கள்.  
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற பொழுதுபோக்குகளை அறவே தவிர்ப்பது நல்லது. அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினர் புதிதாக எதையும் செய்வோம் என்று இல்லாமல்  வழக்கமான உங்கள் பாணியிலேயே உங்களின் படைப்புகளை உருவாக்குங்கள். வெற்றி நிச்சயம்.
இந்த குருப்பெயர்ச்சி பல வகைகளில் சிரமங்களையும், ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், அனுபவ அறிவையும், தன்னைத் தானே உணரும் சக்தியையும் தரும்.
 

பரிகாரம்: சிவன் கோயில்களில் இருக்கும் சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு திங்கள்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபட, சிரமங்கள் குறையும். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.