Published:Updated:

தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால், எந்த வகையிலாவது விதிவிலக்கு இருந்தால் அதை வைத்து உங்களுக்கு நல்லது செய்யவே பார்ப்பார்.

தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

குருப்பெயர்ச்சிப் பலன்கள், தனுசு. குரு பகவான்  உங்கள் ராசிக்கு 11 - ம் வீட்டில் இருந்துகொண்டு பல வித லாபங்களை உங்களுக்குத் தந்துகொண்டிருந்தார்.  இப்போது  அவர் விரயஸ்தானமான 12- ம் வீட்டில்  4.10.18 முதல் 28.10.19 வரை இருந்து பலன் தரவிருக்கிறார். வேலைச்சுமையும் அலைச்சலும் அதிகரித்தபடி இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால், எந்த வகையிலாவது விதிவிலக்கு இருந்தால் அதை வைத்து உங்களுக்கு நல்லது செய்யவே பார்ப்பார்.

12-ம் வீட்டுக்கு குரு வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எப்போது பார்த்தாலும், பணத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோமே இது சரியானதுதானா? என்று நின்று நிதானித்து யோசிக்கத் தொடங்குவீர்கள். நாம் யார், நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்றெல்லாம் யோசிப்பீர்கள். தன்னை உணர்வீர்கள். மனதில் மெய்ஞ்ஞானம் வளரும். 

உங்களுக்கு ஏற்கெனவே ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் கேதுவும்  உங்கள் ராசியில் வந்து அமர்கிறார். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து அதன் பிறகே செயல்படுங்கள். எதிலும் சிக்கனமாக இருங்கள். 

13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், கை, கால், மூட்டு வலி, மனக்குழப்பம் வந்து நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். 
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் உங்களுக்குள் எப்போதும் இருக்கும் உந்துசக்தி எப்படிச் செயல்படவேண்டும், எப்படி செயல்படக்கூடாது என்பதை உணர்த்திக்கொண்டே வழிநடத்தும்.

குரு 4 - ம் பார்வையாக  சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்களின் சுகத்துக்கு எந்தக் குறையும் வராது. தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் இருக்கும்.  

குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்குக் கெடுதல் செய்யும் மறைமுக எதிரிகள் ஏற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு விலகிடுங்கள்.

குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.இந்த குரு மாற்றம் இடமாற்றத்தையும் தர இருக்கிறது.  வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேறு சிலர் அங்கேயே செட்டிலாகியும் விடுவார்கள். 

பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களிடம் கனிவாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும்.முடிந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை 12- ம் வீடு அத்தனை சிறப்பானது கிடையாது. ஏற்றுமதி, இறக்குமதி வகையில் கவனம் செலுத்தினால், நல்ல லாபம் கிடைக்கும். உங்களிடம் பணி புரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மற்றபடி இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு லாபமும் இருக்காது நஷ்டமும் இருக்காது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். உங்களின் விளையாட்டுத்தனத்தை வகுப்பறையில் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம்,  அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களை ஒருமுறைக்கு இரண்டுமுறை எழுதிப்பாருங்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள்  தேடி வரும். உங்களின் திறமைக்கேற்ற படைப்புகள் வெளியாகும். மார்க்கெட்டில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி நல்ல அனுபவத்தையும் புதிய நம்பிக்கையையும் உங்களுக்குத் தரும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் கயிலாசநாதரை பிரதோஷ நாளில் சென்று வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வழிபட, நன்மைகள் அதிகரிக்கும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பிறக்கும்.