Published:Updated:

கும்ப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

கும்ப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
கும்ப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

குருப்பெயர்ச்சிப் பலன்கள், கும்பம். உங்கள் ராசிக்கு 9 -ம் வீட்டில் இருந்த குருபகவான் ஏராளமான செல்வங்களை வாரி வழங்கி வந்தார். ஒரு சிலருக்கு குழந்தைப் பாக்கியத்தையும், வேறு சிலருக்கு வீடு கட்டும் யோகத்தையும் தந்தார். அப்படிப்பட்ட குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை 10 - வீட்டில் அமர்ந்துள்ளார். இனி நீங்கள் ஓரளவு சிக்கனமாக  இருப்பது நல்லது. அத்தியாவசியச் செலவுகள் இனிமேல் உங்களுக்கு அதிகமாகும். அதனால் ஆடம்பரச் செலவுகளை இனி நீங்கள் குறைத்து முக்கியமான செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும்.

பாரம்பர்யமான நம் உணவு வகைகளை நீங்கள் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்தால் 'உணவே மருந்து... மருந்தே உணவு' எனும் அடிப்படையில் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்பற்றாக்குறை எதுவும் இருக்காது. பணவரவு ஓரளவு இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதற்குத் தகுந்த மாதிரி வந்துகொண்டே இருக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். 

10 -ம் இடத்தில் குரு இருப்பதால் யாரிடமும் உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  நீங்கள் ஒருத்தரை நம்பி  சொல்லி இருப்பீர்கள், கடைசியில் அவர் சர்வசாதாரணமாக மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டிருப்பார். அதனால், எவரிடமும் நேரிலோ தொலைபேசியிலோ உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த அதிகாரி வேறு இடம் மாறிப்போவார். உங்களுக்குப் பிடிக்காத அதிகாரி உங்களுக்கு மேல் அதிகாரி ஆவார். 'பத்தில் இருக்கும் குரு பவுசைக் குறைக்கும்' என்று சொல்வார்கள். உத்தியோகம் பற்றிய பயம் அவ்வப்போது வந்து போகும். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. அதனால் பயப்படத் தேவையில்லை.   

குரு 4 - ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் மேம்படும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். 

குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைக் கொடுத்து முடிப்பீர்கள். 10-ம் வீட்டில் குரு இருப்பதால், நீங்கள் யாருக்கும் ஜாமீன் 

கையெழுத்து போடுவது கூடாது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் அநாவசிய வாக்குறுதி தர வேண்டாம். 

கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப்  போனால், பெரிய பிரச்னைகள் உருவாகாது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். வேலையாள்கள் தங்களின் பணிகளை சரியாகச் செய்வார்கள். ஆனாலும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணியைத் தெரிந்து கொள்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

மாணவர்களுக்கு: படிப்பில் கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்படும். அதனால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். அவ்வப்போது ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பெண்கள்: இரவல் நகைகள் வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. 

கலைத்துறையினர்: பலவித தடைகள், போட்டியைத் தாண்டி தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள். பெரிய அளவில் வசூல் சாதனை புரியாவிட்டாலும் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். இந்த குருப்பெயர்ச்சி  சற்று அலைச்சல் திரிச்சல்களையும், மனஉளைச்சலையும் தந்தாலும், முடிவில் ஓரளவு வெற்றியாகவே அமையும்.

பரிகாரம்:  சென்னை அருகே மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் சிதம்பர சுவாமிகளை ஒரு வியாழக்கிழமையன்று தரிசித்து வழிபட சிரமங்கள் குறையும். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.