Published:Updated:

மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

 இதுவரை உங்கள் ராசிக்கு 8 - ம் வீடான மறைவு ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருந்தார். அவர் மட்டுமா மறைந்திருந்தார், நீங்களும்தான். உங்களை நீங்களே ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தீர்கள். திருவிழா, கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில்கூட நீங்கள் கடைசி வரிசையில்தான் அமர்ந்தீர்கள். அந்த நிலையெல்லாம் இனி மாறப்போகிறது. 

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9 - ம் வீட்டில் அமர்ந்துள்ளார். இந்த ஓராண்டு முழுவதுமே உங்களுக்கு அமோகமாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் எல்லாம் விரைந்து முடியும். எதிர்ப்புகள் யாவும் உங்களை விட்டு விலகும்.  தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேருவார்கள். 

கொடுக்கக்கூடாத இடத்தில் பணத்தைக் கொடுத்து அவஸ்தைப்பட்டு வந்த உங்களின் கைகளுக்கு அந்தப் பணம் வந்து சேரும். பொதுவாகவே இந்த ஓராண்டு முழுவதும் பணவரவு சிறப்பாக இருக்கும்.  

இதுநாள்வரை உங்கள் பேச்சுக்கு ஏட்டிக்குப்போட்டியாகப் பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்த பிள்ளைகள்  இனி உங்களின் பேச்சைக் கேட்பார்கள்.  குடும்பத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். பொருளாதார இழப்பு, வீண் சிரமங்கள், கஷ்டங்கள் இவை யாவும் விலகும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். 

சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் தீரும். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 

கணவன்- மனைவி இடையே  அன்யோன்யம் பெருகும். நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

வியாபாரிகளைப் பொறுத்தவரை உங்களின் கடையை விரிவுபடுத்தவும் பெரிய அளவில் முதலீடு செய்யவும் ஏற்ற தருணமிது. கடைவீதியின் முக்கியமான இடத்துக்கு ஒருசிலர் தங்களின் கடையை மாற்றுவார்கள்.புதிய பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். வியாபாரத்திலும் அமோகமான லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை அலுவலகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படாத நிலைமையே உங்களுக்கு இருந்து வந்தது. உங்களின் மூத்த அதிகாரி உங்களின் திறமையை அங்கீகரிக்காமல் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வந்தார். இனி உங்களின் திறமையையும், பணியையும் உணர்ந்து பல பேர் மத்தியில் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மாணவர்கள் தங்களின் தேர்வுகளில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது பதில் தெரிந்தும் அவற்றைச் சரியாக பதிவுசெய்யத் தவறிடும் நிலைமையே இருந்து வந்தது. இனி அந்த நிலைமை மாறும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோர்களுக்குப் பெருமையும் சேர்ப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு, குறிப்பாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகள் பெரிய அளவில் பேசப்படும். 

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தைத் தந்து உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம், வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். குழந்தை இல்லாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுங்கள். மேலும் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.