Published:Updated:

ஐப்பசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு

ஐப்பசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு
ஐப்பசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு

முதல் ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

துலாராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 1 -ல் சூரியன், சுக்கிரன்; 1, 2 -ல் புதன்; 2-ல் குரு; 3-ல் சனி; 4 -ல் செவ்வாய், கேது; 10-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் குரு, சுக்கிரன், ராகு, மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் நன்மை செய்வார்கள்.அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும்.  புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும்.

கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். கண்களில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 22, 23,  24, 25, 26, 31 நவம்பர்:1, 2, 3, 6, 7, 8, 11, 12

சந்திராஷ்டம நாள்கள்: அக்:27, 28 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: அப்பர் சுவாமிகளின் நமசிவாய பதிகத்தை தினமும் பாராயணம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 12 -ல் சூரியன், சுக்கிரன்; 12,1 -ல் புதன்; 1-ல் குரு; 2-ல் சனி; 3 -ல் செவ்வாய், கேது; 9-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் நன்மை செய்வார்கள். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் தடையின்றி கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 24, 25, 26, 27, 28, நவம்பர்:2, 3, 4, 5, 9, 10, 13, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: அக்:29,30 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: கந்தசஷ்டி கவசம், ஷண்முகக் கவசம் போன்ற முருகப் பெருமானின் துதிப்பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.


 

தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 11 -ல் சூரியன், சுக்கிரன்; 11, 12 -ல் புதன்; 12-ல் குரு; 1-ல் சனி; 2 -ல் செவ்வாய், கேது; 8-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் நன்மை செய்வார்கள்.வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.  

ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 20, 21, 27, 28, 29, 30 நவம்பர்:4, 5, 6, 7, 8, 11, 12, 16

சந்திராஷ்டம நாள்கள்: அக்:31 நவ:1 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் லலிதா நவரத்ன மாலை பாடல்களைப் பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் நன்மை தரும்.

மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10 -ல் சூரியன், சுக்கிரன்; 10, 11 -ல் புதன்; 11-ல் குரு; 12-ல் சனி; 1 -ல் செவ்வாய், கேது; 7-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், குரு, புதன் ஆகியோர் நற்பலன்களைத் தரவிருக்கிறார்கள்.வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, 31 நவம்பர்:1, 6, 7, 8, 9, 10, 13, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 2, 3 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: திருஞானசம்பந்தர் அருளிய, 'மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 9 -ல் சூரியன், சுக்கிரன்; 9, 10 -ல் புதன்; 10-ல் குரு; 11-ல் சனி; 12 -ல் செவ்வாய், கேது; 6-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் சுக்கிரன், சனி, ராகு, மாதப் பிற்பகுதியில் புதன் ஆகியோர் நன்மை செய்வார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். 

வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.  சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 20, 21 .24, 25, 26, 31 நவம்பர்:1,2,3,9,10,11,12, 16

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 4, 5 

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: 'ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்'  என்று தொடங்கும் குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
 

மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 8 -ல் சூரியன், சுக்கிரன்; 8, 9 -ல் புதன்; 9 -ல் குரு; 10-ல் சனி; 11 -ல் செவ்வாய், கேது; 5-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் குரு, சுக்கிரன், செவ்வாய், கேது, மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் நன்மை செய்வார்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும்.  செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

8-ல் இருக்கும் சூரியனால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். கேது சாதகமாக இருப்பதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில்  உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். 

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 

மாணவ மாணவியர்க்கு மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 22, 27, 28; நவம்பர்:2, 3, 4, 5, 11, 12, 13, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 6, 7, 8

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: 'முதுவாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு' என்று தொடங்கும் சுந்தரர் அருளிய திருக்கச்சூர் பதிகம் பாராயணம் செய்ய அளவற்ற நன்மைகள் ஏற்படும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு முல்லமலர்களால் அர்ச்சனை செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரரை வழிபடும் நன்மை தரும்.