
கல்வி, செல்வம், வீரம் மூன்றும் ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகள். இவற்றில் முன்னணியில் இருப்பது கல்விதான். ஏனென்றால் கல்விச்செல்வம் இல்லாவிட்டால், மற்ற இரண்டு செல்வங்களும் இருந்தாலும் வீணாகத்தான் போகும்.
ஒருவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அவர்களுக்கு என்ன வகையான ஜாதக அமைப்பு இருக்கவேண்டும் என்பது பற்றி ஜோதிட நிபுணர் 'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணனிடம் கேட்டோம்.
''ஒவ்வோர் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு இப்போது சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, அவர்களுக்குக் கல்வியைப் பெற்றுத் தரவேண்டும் என்ற கவலைதான் மிகவும் அதிகம். அதில் சில நேரம், பெற்றோர் விருப்பம் ஒன்றாகவும் பிள்ளைகளின் விருப்பம் ஒன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு.
இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பிணக்குகளும் வர வாய்ப்பு உண்டு. பொதுவாகப் பிள்ளைகளின் விருப்பம் அவர்களின் ஜாதகக் கட்டங்களின்படியே இருக்கும். அதைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை விருப்பத்துக்கு மாறான துறைகளில் சேர்ப்பதுகூட பல வேளைகளில் தவறாக அமைந்து விடுவதுண்டு.
பொதுவாக, ஒருவருடைய ஜாதகத்தில் 5 - ம் வீட்டுக்கு உடையவன் கல்வி கேள்விகளுக்கும் வித்தைகளுக்கும் அதிபதி. அந்த 5 - ம் வீட்டின் அதிபதி ஒருவருடைய ஜாதகத்தில் கெட்டுப்போகக் கூடாது.
உதாரணமாக, மேஷ லக்னக்காரருக்கு 5-ம் வீட்டுக்கு உடையவர் சூரியன். 3, 6, 8 மற்றும் 12 -ம் வீடுகளில் அவர் மறையக் கூடாது. ஜாதகத்தில் சூரியன் நீசமடையக் கூடாது. நீசமடைந்த கிரகத்துடன் சேரக்கூடாது.
5 -ம் வீட்டுக்கு உடையவனை குரு பார்த்தால் அந்த ஜாதகர் நேர்மையான முறையில் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து சிறந்த கல்விமானாகத் திகழ்வார்.
'சரஸ்வதி கடாட்சம்' என்னும் 5 -ம் இடம், புத்திக்குத் தெளிவான சிந்தனையையும் பாதையையும் வகுத்துக்கொடுப்பது. இதற்குச் சூரியனும் புதனும் 5-ம் வீட்டில் இருப்பது 'புதாதிபத்ய யோகம்' ஆகும். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
லக்னத்துக்கு 2 - ம் இடம் என்பது ஆரம்பப் பள்ளிப் படிப்பைச் சேர்ந்தது. 4 - ம் இடம் என்பது உயர்நிலைப் பள்ளிப்படிப்பைச் சேர்ந்தது. 9 - ம் இடம் பட்டப்படிப்புக்கு உரியது. 11 - ம் இடம்தான் ஒருவர் படித்த கல்வியில் டாக்டர் பட்டம் பெறுவதைக் குறிக்கும். இந்த 2, 4, 9 மற்றும் 11 - ம் இடங்களில் ஏதேனும் ஓர் இடத்தை குரு பார்க்கவேண்டியது மிகவும் முக்கியம். அப்படிப் பார்த்தால்தான் அவர்கள் அந்தத் துறையில் சாதனைகளை நிகழ்த்த முடியும்.
லக்னத்துக்கு 2 - ம் இடத்தில் குரு, புதன் சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஆசிரியர் பணியில் அமர்வார். வாக்குஸ்தானத்துக்கு உரிய இடம் 2 - ம் இடம் என்பதால், இவர்களுடன் 5 - ம் இடத்து அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர் சிறந்த ஆசிரியராகத் திகழ்வார்.
பொறியியல் துறையில் சாதனைப் படைக்கவேண்டும் என்றால், செவ்வாய் 10 - ம் இடத்தில் இருக்கவேண்டும். 10- ம் இடத்துடன் குரு புதன், சேர்க்கையோ தொடர்போ ஏற்பட்டால் அவர்களுக்கு வங்கிப்பணி அமையும் வாய்ப்பு உண்டு.
சூரியன் செவ்வாய் சேர்ந்து 10 - ம் இடத்தில் இருந்தால், ஜாதகர் சிறந்த டாக்டராக இருப்பார். இவர்களுடன் ராகுவும் சேர்ந்திருந்தால் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பார். விருச்சிக ராசியில் சூரியன் ராகு சேர்ந்து இருந்தால் அவர்கள் டாக்டராக இருப்பார்கள்.
லக்னத்துக்கு 6 - ம் இடத்து அதிபதியுடன் குருவும் சேர்ந்து 2 - ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் வக்கீலாக இருப்பார். இவர்களுடன் 9 - ம் வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர்கள் நீதிபதிகளாக இருப்பார்கள்.
அரசுப்பணி அமையவேண்டுமானால், சூரியன், சனி சேர்ந்து 10-ம் இடத்தில் இருக்கவேண்டும்'' என்று கூறினார்.
கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ள கோணத்தை வைத்து, நீங்கள் எந்த வகை, உங்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுங்களேன்!