தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜூன் 19 முதல் ஜூலை 2 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன், 3 -ம் வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் உடனுக்குடன் முடிவடையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளை, அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்துச் சிக்கல்கள் முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தோற்றப்பொலிவு கூடும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைகளும் ஏமாற்றங்களும் ஏற்பட்டாலும் ஓயமாட்டீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்புள்ளதால், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். அலுவலகத்தில், பதவி உயர்வுக்காகச் செய்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

 கொடுக்கும் குணத்தால் பாராட்டப்படும் காலம் இது.

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன்  சாதகமாக இருப்பதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத்  திருப்பித் தருவீர்கள். நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும்.

தனம் மற்றும் பூர்வ புண்ணியாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தன்னம்பிக்கை அதிகமாகும். சகல காரியங்களிலும் சாதிப்பீர்கள். உற்றார் உறவினர் மத்தியில் புகழும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. 2-ம் வீட்டில் நிற்கும் சூரியன் சேமிப்புகளைக் கரைப்பார்; பணப்பற்றாக்குறையை ஏற்படுத்துவார்.

6-ம் வீட்டில் நிற்கும் குருவால் ஒருவித அலுப்பும் சலிப்பும் வந்துபோகும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எவருக்காகவும் பரிந்துரை செய்யவேண்டாம். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில், அதிரடியான நடவடிக்கைகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

நிதானத்துடன் செயல்படவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுக்கிரனும், குருவும் சாதகமான வீடுகளில் செல்வதால்  நினைத்தது நிறைவேறும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். சிலர், புது வாகனம் வாங்குவீர்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் தாமத மாக முடியும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில், பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் திறமை வெளிப்படும்; பாராட்டுகள் குவியும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

 புதன் 23 -ம் தேதி முதல், ராசியிலேயே நிற்பதால் பேச்சால் சாதிப்பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சுக்கிரன் வலுவாக நிற்பதால், எதிர்நீச்சல் போட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். ரசனைக்கேற்ப வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

ராசிக்கு 12 - ம் வீட்டில் சூரியன் நிற்பதால் முன்கோபம், தூக்கமின்மை, எதிர்பாராத செலவுகள்,  பயணங்கள் வந்துபோகும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். 6-ம் வீட்டிலேயே சனி நீடிப்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு பகவான் 4 - ம் வீட்டில்  அமர்ந்திருப்பதால், ஓய்வெடுக்க முடியாதவாறு கடுமையாக உழைக்கவேண்டி வரும். தாயாருடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். வியாபாரத்தில், நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றிச் செய்திகள் தேடி வரும் தருணம் இது.

ராசிபலன்

ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு அரசிடமிருந்து `திட்ட அனுமதி' கிடைக்கும். பழைய நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். உறவினர்கள் சிலர், உங்களிடம் உதவி வேண்டி வருவார்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் வி.ஐ.பி-கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். பிள்ளைகளின் கல்லூரி, பள்ளிச் சேர்க்கையை போராடி முடிப்பீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் வேலைகளை நீங்கள் எடுத்துச் செய்ய வேண்டியது வரும். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால் தடைகள் நீங்கும்; பதவிகள் தேடி வரும். சிலருக்கு, அயல்நாட்டில் வேலை அமையும். சனியால் வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர் வேற்றுமொழிப் பட வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், கௌரவமான பதவிக்குத் தேர்தெடுக்கப்படுவீர்கள். உறவினர் களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். புது நட்பு மலரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண விஷயம் சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

9 -ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தையின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். அவருக்கு வீண் டென்ஷன், வேலைச்சுமை வந்துபோகும். ஜன்ம குருவால் சோர்வு, அசதி வந்துபோகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் யோசித்து செயல்படுங்கள். சனி பகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்து  வைத்திருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை உண்டு. கலைத் துறையினர் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது.

சலிப்பு இல்லாமல் உழைத்து உயர வேண்டிய காலம் இது.

ராசிபலன்

புதன் வலுவாக நிற்பதால், பழைய நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். சூரியன் 8 -ம் வீட்டில் நிற்பதால் செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு வேலை சாதகமாகும். 12 -ம் வீட்டில் குரு நீடிப்பதால், அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் சாதகமாக அமர்ந்திருப்பதால் கோபம், டென்ஷன், அலைச்சல்  ஆகியன குறையும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நினைத்தபடி முடிவடையும். வீடு, வாகனத்தைச் சரிசெய்வீர்கள். உங்களில் சிலர், வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கல்யாண விஷயங்கள் கூடிவரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில், எதிர்பாராத வகையில் லாபம் வரும்; பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில், சக ஊழியர்கள் மத்தியில் மரியாதை கூடும். சக நண்பர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு, தடைப்பட்டிருந்த வாய்ப்பு இப்போது கைகூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

புதுப்புது எண்ணங்களால் புகழடையும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணம் வரும். ஆடை - ஆபரணங்கள் சேரும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும்.

சூரியன் 7 -ம் வீட்டில் நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை உடனடியாகச் செலுத்திவிடுவது நல்லது. ராகு 8-ம் வீட்டில் நிற்பதால், கொஞ்சம் அலைச்சல், டென்ஷன், மனஇறுக்கம் வந்து போகும். குரு லாப வீட்டில் நிற்பதால், செல்வம், செல்வாக்கு கூடும். அடுத்தடுத்த விசேஷங்களால் வீடு களை கட்டும். ஜன்மச் சனி தொடர்வதால்  உடல்நலனில் அக்கறைகொள்வது நல்லது.  வியாபாரத்தில், கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளிடம்  வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். கலைத் துறையினர், சக கலைஞர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசவும்.

தடைகளைத் தாண்டி, தட்டுத்தடுமாறி முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 23-ம் தேதி முதல், புதன் சாதகமாக அமர்வதால், விலகிச்சென்ற பழைய சொந்தபந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். நண்பர்களால் பயனடைவீர்கள்.

உங்கள் ராசியிலேயே செவ்வாயும், கேதுவும் அமர்ந்திருப்பதால், வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். அதேநேரம், ஒருவித படபடப்பும் பதற்றமும் உங்களிடம் இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. சுக்கிரன் 7-ம் வீட்டில் தொடர்வதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் அறிவுரை சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள். குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், சிலர் உங்களைப் பற்றி அவதூறு பேசுவார்கள்; கௌரவக் குறைச்சலான சம்பவங்கள் நிகழும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் புதிய பாதை தெரியும் வேளை இது.

ராசிபலன்

ராசிக்கு 9 - ம் வீட்டில் குரு தொடர்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சிலருக்குக் குழந்தை வரம் ஸித்திக்கும். 23-ம் தேதி முதல், 6-ம் வீட்டில்  புதன் மறைவதால், வீண் டென் ஷன், இருமல், கழுத்து வலி ஆகியன வந்து போகும். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசவும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

சுக்கிரன் ராசிக்கு 6-ம் வீட்டில் தொடர்வதால், மனைவியின் உடல்நலனில் கவனம்கொள்வது நல்லது. விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் அவசரம் வேண்டாம். செவ்வாய் 12-ம் வீட்டில் நிற்பதால், இளைய சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன், செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது; பற்று - வரவு சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில், உங்களின் மீது அதிருப்தி உண்டாக வாய்ப்பு உண்டு; பணிகளில் மிகக் கவனமுடன் செயல்படவும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும்.

காத்திருந்து காய் நகர்த்தவேண்டிய காலம் இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், பூர்வீகச் சொத்துகளில் உங்களது பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை வந்துசேரும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். 8-ம் வீட்டில் குரு நீடிப்பதால், பழைய நண்பர்களால் உதவிகள் உண்டு. வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்குச் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

திடீர் நன்மைகள் சூழும் தருணம் இது.