Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 3 -ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜூலை 3 -ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். 7-ம் வீட்டில் குரு நிற்பதால், கல்வியாளர் களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. புதன் 4-ம் வீட்டில் நிற்பதால், தாயாருடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். பிரபலங்களின் நட்பைப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டாகும்.

சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் உடனே முடியும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும்; உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மரியாதை கூடும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். பழைய பணியாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்குத் தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

சவால்களில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் யோக நட்சத்திரங்களில் செல்வதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். அவர்களை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணம் வரும். பெற்றோர் உதவுவார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைய வாய்ப்பிருக்கிறது. உறவினர்கள், நண்பர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.

6-ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால், கொடுக்கல்வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. சூரியன் 2-ம் வீட்டில் நிற்பதால், உடல்நலம் சீராகும். தள்ளிப்போன காரியங்கள் விரைவில் முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில், புதிய முயற்சிகளையும் புது முதலீடுகளையும் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் தகுந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஊழியர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் 3 -ம் வீட்டில் வலுவாக அமர்வதால் மனோபலம் அதிகரிக்கும். இங்கிதமாகவும் இதமாகவும் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாணம் கூடி வரும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். குருபகவான் 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.

ராசிநாதன் புதன் 2-ம் வீட்டில் நிற்பதால், வராக்கடனை வசூலிப்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, அந்த நபரை விலக்கிவைப்பீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு, மூத்தக் கலைஞர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

விடாமுயற்சி தேவைப்படும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரன், உங்களை யதார்த்தமாகப் பேசவைப்பார். உங்களின் அனுபவ அறிவை வெளிப் படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத்துணைக்கு உங்களிடமிருந்த கோபம் தணியும். பழைய டிசைன் நகைகளை மாற்றிவிட்டு, புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 4-ம் வீட்டில் குரு நிற்பதால், எதையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாது; அதிக உழைப்பு தேவைப்படும்.  புதன் ராசிக்குள் நிற்பதால், பேச்சில் நிதானம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

12-ம் வீட்டில் சூரியன் மறைந்திருப்பதால் வீண்செலவு, தூக்கமின்மை வந்து நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களாலும் பணியாளர்களாலும் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில், ‘உழைப்புக்கு உகந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையே’ என்ற உங்களின் ஆதங்கம் விலகும்; உரிய ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினர், வித்தியாசமான படைப்புகளால் புகழ் அடைவார்கள்.

ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் 5-ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே நிற்பதால், மனதில் சோர்வு நீங்கி தெம்பு பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும்.  குரு 3-ல் தொடர்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதன் 12-ம் வீட்டில் நிற்பதால், பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பீர்கள். உங்களைத் தேடி வந்து உதவி கேட்கும் அன்பர்களுக்கு  உதவி செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். 

சூரியன் 11-ம் வீட்டில்  நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கேதுவும், செவ்வாயும் சாதகமாக நிற்பதால், வேற்றுமொழி பேசுபவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில், அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில், புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் காலம் இது. கலைத்துறையினர், புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவார்கள்; உற்சாகத்துடன் வலம் வருவார்கள். 

இழந்ததை எல்லாம் பெறுகின்ற வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் 5-ம் தேதி முதல் 12-ம் வீட்டில் நிற்பதால், உருட்டிப் புரட்டி நிதிநிலையைச் சமாளிப்பீர்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களும் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப் பார்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். 2-ம் வீட்டில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசிநாதன் புதன் 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். ராசிக்கு 10-வீட்டில் சூரியன் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மறைமுகப் போட்டியாளர்களை வெல்வீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

 உங்களின் ராஜ தந்திரத்தால் வெற்றிபெறும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். ராசிக்குள் நிற்கும் குரு, சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அடையாளம் காட்டுவார். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கை, கால்களில் வலி ஏற்பட்டு நீங்கும். புதன் 10-ம் வீட்டில் நிற்பதால், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.

9-ம் வீட்டில் சூரியன் இருப்பதால் தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். உங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கலைத்துறை யினருக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

புதிய நண்பர்களால் ஆதாயம் அடையும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சொந்த வீடு வாங்கும் யோகத்தைத் தருவார்.  சிலருக்கு, வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்குப் பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். 12-ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால், பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தங்க நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

புதன் 9-ம் வீட்டில் நிற்பதால் பழைய நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக் கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று, சில பிரச்னைகளிலிருந்து வெளியே வருவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பு கூடாது; கனிவாகப் பேசி காரியம் சாதிப்பது நல்லது. உத்தியோகத்தில், வெகுநாள்களாக நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். கலைத்துறையினர், அதிக வாய்ப்புகளால் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

உறவினர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்ளும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டட வரைபடத்துக்கு அரசு அனுமதி கிடைக்கும். குரு லாப வீட்டில் நிற்பதால், புது வேலை கிடைக்கும். மூத்த சகோதரர் மனம்விட்டுப் பேசுவார். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். 7-ல் சூரியன் நிற்பதால், உங்களுக்கு டென்ஷனும், வாழ்க்கைத் துணைவருக்குக் கழுத்து மற்றும் கால் வலியும் வந்து நீங்கும்.

புதன் 8-ல் மறைந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனஇறுக்கம் குறையும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். மனக்கசப்புடன் இருந்த நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

குருவின் திருவருளால் முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புதுத் தெம்பு பிறக்கும். வி.ஐ.பி-களின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். 5-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் வீட்டில்  நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். வாகனம் அவ்வப்போது பழுதாகிச் சரியாகும். மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

6-ம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால், சிக்கல்கள் தீரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஓரளவு பணவரவு உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வெளிப்படையாகப் பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கவேண்டாம். கலைத்துறையினர், மற்றவர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய காலம் இது.

ராசிபலன்

சுக்கிரன் 5-ம் தேதி முதல் சாதகமாவதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் ஏற்படும். மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நவீனரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குருபகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். பதவிகள் தேடி வரும். வீடு வாங்குவது, விற்பது உங்கள் எண்ணப்படி அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

6-ம் வீட்டில் புதன் மறைந்திருப்பதால், கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. நிலம்,வீடு வாங்குவது மற்றும் விற்பதில் அவசரம் வேண்டாம். 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், பிள்ளை களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில், வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்கள் மீது நம்பிக்கைவைத்து புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கலைத்துறையினர் தங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வது நல்லது.

விலைமிக்க பொருள்களைக் கவனமாகக் கையாளவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

 புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். புதிய சிந்தனைகள், கற்பனைகள் உருவாகும். அண்டை அயலார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். 5-ம் தேதி முதல் சுக்கிரன், 6-ம் வீட்டில் நிற்பதால், மகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாகத் தேர்வு செய்யவேண்டும். ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளவும்; நல்ல வரன் அமையும். எதிலும் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். வாகனங்களில் பயணிக்கும்போது, கவனமாக இருப்பது நல்லது.

 8-ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால், எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. சூரியன் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புதிதாக முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism