Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஆகஸ்ட் 14 முதல் 27 - ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஆகஸ்ட் 14 முதல் 27 - ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம்

ராசிநாதன் செவ்வாய் வலுவான இடத்தில் அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களையும்  எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதன் 4 -ம் வீட்டில் நிற்பதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

17-ம் தேதி முதல் உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 5-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சிலர், வீடு மாறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் சுக்கிரன் 6-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் கருத்து கூற வேண்டாம். கலைத்துறையினருக்குப் புகழ் கூடும்.

கடின உழைப்புக்கான பலனைப் பெறும் நேரம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சூரியன் உங்களுக்குச் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிரிகளும் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்ப உறுப்பினர்கள், உங்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவார்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு, திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். பிள்ளைகளை உற்சாகப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். இளைய சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. புதன் வலுவாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.

உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும்.  தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கடன் பிரச்னைகளுக்கு மாற்று வழி காண்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளுடன் வெளியூர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தைரியமான முடிவுகளை விரைந்து எடுக்கும் நேரம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். 16-ம் தேதி வரை 2-ம் வீட்டில் நின்று உங்களைப் படபடப்பாகப் பேசவைக்கும் சூரியன், 17-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் அமர்கிறார். எனவே, எதிலும் தெளிவு பிறக்கும். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் நீங்கும். கண் வலி, பல் வலி ஆகியவை சரியாகும். வழக்கு சாதகமாகும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும்.

செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால், வாகனத்தை இயக்கும்போதும் சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரின் கலைத்திறன் வெளிப்படும்; பெரும் புகழ் வந்துசேரும்.

அயராத முயற்சியால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

புதன் சாதகமாக இருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். வீடு, வாகன வசதிகள் பெருகும். குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து, வளர்ப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன காரியங்கள் நல்லவிதமாக முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால், சில விஷயங்களில் சகோதரர்கள் உங்களது உதவியை எதிர்பார்ப்பார்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்பற்றாக்குறை சீராகும். சிறு கடன்களை அடைப்பீர்கள். அடுத்தடுத்து நிகழும் சுப காரியங்களால் வீடு களைகட்டும். வியாபாரத்தில், அதிரடியாகச் செயல்பட்டு போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும், எதிர்பார்த்த உயர்வுகளும் உண்டு. கலைத்துறையினர், வீண் வதந்திகளுக்குக் காதுகொடுக்க வேண்டாம்.

யதார்த்தமான பேச்சால் எதையும் சாதிக்கும் நேரம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அதிரடியான செயல்பாடுகளால் வருமானத்தைப் பெருக்க நினைப்பீர்கள். கையில் காசு பணம் தாரளமாகப் புரளும். புதிய சிந்தனைகள் தோன்றும். புதன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். எனினும், எவருக்கும் பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுக்கவேண்டாம்.

12 -ம் வீட்டில் மறைந்திருக்கும் உங்கள் ராசிநாதன் சூரியன், 17-ம் தேதி முதல் ராசிக் குள் ஆட்சி பெற்று அமர்வதால் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சகோதரர்கள் அனுசரித்துப் போவார்கள். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவார். கலைத்துறையினர், புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் காலம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

ராசிநாதனான புதன் லாப வீட்டில் இருப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை மூலம் லாபம் வரும். உறவினர்களும் நண்பர்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். 16-ம் தேதி வரை சூரியன் 11-ம் வீட்டில் இருப்பதால், இழுபறியாய் இருந்துவந்த காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். 17-ம் தேதி முதல், சூரியன் 12-ம் வீட்டில் மறைவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

5-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் முன்கோபம், எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவதிலும் விற்பதிலும் அவசரம் வேண்டாம். சுக்கிரன் ராசியிலேயே நிற்பதால், பழைய நண்பர்கள் மூலம் உதவி உண்டு. வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. உங்களின் தோற்றப்பொலிவு கூடும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

நெருக்கடிகளைக் கடந்து சாதித்துக் காட்டும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். அரசாங்க வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு வாங்குவது- விற்பது நினைத்தபடி முடியும்.

செவ்வாய் 4-ம் வீட்டில் இருப்பதால், பழைய இடம் ஒன்றை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருப்பதால் ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள் வரக்கூடும். யாரையும் விமர்சனம் செய்து பேசாதீர்கள். வியாபாரத்தில், சில சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு சாதிப்பீர்கள். உத்தியோகத்தில், உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினரே, உங்களைப் புறக்கணித்த நிறுவனம் மீண்டும் உங்களை அழைத்துப் பேசி, வாய்ப்பு தரும்.

புதிய பாதையில் நீங்கள் ராஜநடை போடும்  வேளை இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்


புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் நிற்பதால் கல்வியாளர்கள், வி.ஐ.பி-களுக்கு நெருக்கமாவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கோயில் விழா நிகழ்ச் சிகளில் கலந்துகொள்வீர்கள். 9-ம் வீட்டில் இருந்தபடி உங்களின் தந்தைக்கு உடல்நல பாதிப்பையும், உங்களுக்குச் செலவுகளையும் தந்துகொண்டிருந்த சூரியன், 17-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். எனவே, இனி பிரச்னைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். தடைப்பட்டிருந்த அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

ராசிநாதன் செவ்வாய் 3 -ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மனவலிமை கூடும். அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில், புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வளைந்துகொடுத்து காரியம் சாதிக்க வேண்டிய நேரம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

சுக்கிரன் உங்கள் ராசிக்குச் சாதகமாக இருப்பதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். சூரியன் 17-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். புது வேலை அமையும்.

புதன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனஇறுக்கம் குறையும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால் சொத்து வாங்குவது - விற்பதில் சிக்கல்கள் வரும். பொறுமையாகக் கையாள்வது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில், விட்டதைப் பிடிப்பீர்கள். உத்தியோகத்தில், அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் புகழ், கௌரவம் ஆகியவை உயரும்.

எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனைவிவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் வீட்டில் மறைந்தாலும், அவர் ஆட்சிப் பெற்று அமர்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும். மனைவியின் உடல் நிலை சீராகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஒரு சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

சிலர், வீடு மாறவேண்டிய நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வாங்குவீர்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். உத்தியோகக்தில், சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கலைத்துறையினர், கடும் போராட்டத்துக்குப் பிறகு படைப்புகளை வெளியிடுவார்கள். எனினும் அதில் வெற்றி கிடைக்கும்.

எதிர்ப்புகளைக் கடந்து ஏற்றம் பெறும் காலம் இது.

ராசிபலன்

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

கும்பம்

சுக்கிரன் சாதமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய வாகனம் அமையும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். பணவரவு உண்டு. கைமாற்றாகக் கொடுத்த பணத்தையும் சாமர்த்தியமாகப் பேசி வசூலிப்பீர்கள். பழைய கடன் பாக்கிகளை பைசல் செய்வீர்கள். வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். 16-ம் தேதி வரை சூரியன் 6 - ம் வீட்டில்  நிற்பதால், கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வழக்கு சாதகமாகும்.

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் ஆகியவை வந்து போகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வந்தாலும் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியாது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும்; கவனம் தேவை. வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போக வாய்ப்பு உண்டு. அதற்காக மனம் தளர்ந்துவிட வேண்டாம். விரைவில் வெற்றி தேடி வரும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற உங்களின் ஆதங்கம் மறையும். புதிய சலுகைகளும் உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினர், விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

பொறுமையான செயல்பாடுகளால் புகழ் பெறும் நேரம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

சூரியன் 17 - ம் தேதி முதல் 6-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், நினைத்தை முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. வீடு கட்ட  வங்கிக்கடன் கிடைக்கும். புதன் 5-ம் வீட்டில் தொடர்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். மகனுக்கு, அயல்நாட்டில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகள் வரும்.

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். சுக்கிரனும் சாதகமாக நிற்பதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். வியாபாரத்தில் இருப்பவர்கள், சக பங்குதாரரை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினருக்கு, மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism