Published:Updated:

அசுவினி யோக நட்சத்திரமா?

அசுவினி யோக நட்சத்திரமா?
பிரீமியம் ஸ்டோரி
News
அசுவினி யோக நட்சத்திரமா?

அசுவினி யோக நட்சத்திரமா?

அசுவினி யோக நட்சத்திரமா?

கல்யாண வரம் தரும் கந்தன் வழிபாடு!

ப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும்.

இந்த இதழில், செந்தமிழ்க் கடவுளின் திருவருளால் அங்காரக தோஷம் நீக்கும் அற்புதமான ஒரு வழிபாட்டை அறிவோம்.

ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும்.

அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மணைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மணைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.

அசுவினி யோக நட்சத்திரமா?

அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு ‘மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா’ என்று சொல்லவேண்டும். அடுத்து,

‘ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
தந்தோ சண்முக பிரசோதயாத்’


என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,

‘ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்’


என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்ல வேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக் கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் வேலனே போற்றி
ஓம் வரமருள் தேவா போற்றி
ஓம் சக்தி மைந்தனே போற்றி
ஓம் சரவணனே போற்றி
ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் சிவனார் மகவே போற்றி
ஓம் வள்ளி மனதோய் போற்றி
ஓம் அங்காரக் கடிவே போற்றி
ஓம் குரு குணனே போற்றி
ஓம் மயில்வாகனா போற்றி
ஓம் சேவற்கொடி செவ்வேளே போற்றி, போற்றி!


இப்படி மும்முறை கூறி, ‘சரவணபவ’ எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும்.

பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி...

நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும் செவ்வாய் தோஷத் தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.

களத்திர தோஷமும் பரிகாரங்களும்!

ருவரது ஜாதகத்தில் களத்திரதோஷம் இருந்தால், திருமணம் செய்வதில் தாமதம் உண்டாகும். அத்துடன், இல்லற வாழ்விலும் குறைபாடுகள் ஏற்படும். அதனால், மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் தவிக்கும்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? குரு, சுக்கிரன் ஆகியோருக்கு வழிபாடு செய்வதன் மூலம், நல்ல கணவன் அல்லது மனைவி அமையவும், இனிய இல்லறம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அதேபோல், எந்தக் கிரகத்தால் இந்த தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அந்த கிரகத்துக்கும் அதன் அதிமுக்கிய ப்ரத்யதி தேவதைக்கும் வழிபாடு மற்றும் சாந்தி செய்து, கெடுபலன்களைக் குறைக்கலாம்.

சூரியன்:  இவர் 7-ல் அமர்ந்து நீசம் பெற்றிருப்பின், திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இப்படியான அமைப்புள்ள ஜாதகர், சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். சூரியனின் ப்ரத்யதி தேவதையான ஸ்ரீருத்ரன் அல்லது சிவபெருமானை வணங்கவேண்டும். சூரியனுக்கு வழிபாடு செய்யும்போது, `ஆதித்ய ஹ்ருதயம்’ படிக்கலாம். கோளறு பதிகம் பாடி சிவனாரை வழிபடலாம்.

சந்திரன்:
சந்திரன் வலிமை குன்றி, 7-ல் இருப்பின், தாமதத் திருமணம் மற்றும் இல்லற வாழ்வில் குறைகள் ஏற்படும். இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள், சந்திரனை வழிபட வேண்டும். பௌர்ணமிதோறும் அம்மனை வழிபட்டு வந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

அசுவினி யோக நட்சத்திரமா?

செவ்வாய்: செவ்வாயால் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டு இருப்பின், செவ்வாயை வணங்குவதுடன், சுப்ரமணியரையும் வணங்கி, சஷ்டி கவசம் படித்துப் பயன்பெறலாம்.

புதன்: ஜாதகத்தில் புதன் 7-க்கு உடையவராகி பலம் குன்றியிருந்தால், அதுவும் தோஷம்தான். அதற்கு, ஜாதகர் புதனை வழிபடுவதுடன், ஸ்ரீநாராயண மூர்த்தியையும் வழிபாடு செய்யவேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் செய்யலாம்.

குரு: குருபகவான் 7-ல் அமர்ந்திருந்தால், அதிக தோஷம் ஏற்படும். இதற்கு குருபகவானையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால், திருமணத்தடை நீங்கும்.

சுக்கிரன்: சுக்கிரனால் ஜாதகத்தில் தோஷம் இருப்பின் சுக்கிரனையும், இந்திரனையும், மகாலட்சுமியையும் வழிபடவேண்டும். இதனால் தடைகள் விலகி நல்ல வரன் அமையும். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சனி: சனி 7-ல் இருந்தாலும், 7-க்கு உடையவருடன் சேர்ந்தாலும், 7-ம் வீட்டைப் பார்த்தாலும் திருமணத்தில் தடையும் தாமதமும் ஏற்படும். இந்த ஜாதகர்கள் சனிபகவானை வணங்க வேண்டும்.
சனி மந்திரம், சனி காயத்ரி கூறி வழிபடவும்.

ராகு அல்லது கேது: ராகு அல்லது கேது 7-ல் இருந்தாலும், லக்னத்துக்கு 2-ம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் இருந்தாலும் நாகதோஷம் ஏற்படுகிறது. அதன் காரணமாக திருமணம் நடைபெறவதில் காலதாமதம் ஏற்படும். இப்படியான அமைப்புள்ள ஜாதகர்கள் ராகு-கேதுவை வழிபடுவதுடன், விநாயகர், துர்கை அம்மன் ஆகியோரையும் வழிபாடு செய்து வந்தால், சங்கடங்கள் விலகி நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

ஜோதிடரின் உதவியோடு, ஒருவரது ஜாதகத்தில் எந்தக் கிரகத்தினால் களத்திர தோஷம் ஏற்பட்டுள்ளது என்று பார்த்து, அந்தக் கிரகத்துக்குரிய யந்த்ரத்துடன் தெய்வத் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்து, தினமும் காலை மாலை இரண்டு வேளையும், உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வந்தால், தோஷம் விலகி நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

- கா.ஸ்ரீ.

நவகிரக ஸ்லோகங்கள்...

ளத்திர தோஷம் நீங்கிட, ஒவ்வொரு கிரகத்துக்குமான ப்ரத்யதி தெய்வங்களை, உரிய ஸ்லோகங்கள் கூறி வழிபட்டு நன்மை அடையலாம்.

சூரியன்:

`ஆதித்ய க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
ருத்ரம் த்யாயாமி’ என்று கூறி, சிவனை வழிபடவும்.

சந்திரன்:

`ஸோம க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
கௌரீம் த்யாயாமி’ என்று கூறி, அம்மனை வழிபடவும்.

செவ்வாய்:

`அங்கார க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
ஸுப்ரஹ்மண்யம் த்யாயாமி’  என்று கூறி, முருகனை வழிபடவும்.

புதன்:

`புத க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
ஸ்ரீ நாராயணம் த்யாயாமி’  என்று கூறி, விஷ்ணுவை வணங்கவும்.

குரு:


`குரு க்ரஹச்ய ப்ரத்யதி  தேவதாம்
ப்ரஹ்மானாம் த்யாயாமி’ என்று கூறி வணங்கிவிட்டு, மறுபடியும் ‘ப்ரம்மனே நம:’ என்று 12 முறை கூறி, வணங்கவும்.

சுக்கிரன்:

`சுக்ர க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
இந்த்ரம் த்யாயாமி  என்று சொல்லி வணங்கிய பிறகு, ‘இந்த்ராய நம:’ என்று
12 முறை கூறி, வணங்கவும்.

சனி:

`சனைச்சர க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
ப்ரஜாபதிம் த்யாயாமி’  என்று சொல்லி வணங்கிய பின்பு, ‘ப்ரஜானாம் பதயே நம:’ என்று கூறி, வணங்கவும்.

ராகு:

`ராகு க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
ஸர்ப்பராஜாம் த்யாயாமி’  என்று கூறி வணங்கிவிட்டு, ‘ஸர்ப்பராஜாய நம:’ என்று சொல்லி வணங்கவும்.

கேது:

`கேது க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்
கணபதயே த்யாயாமி’  என்று கூறி வணங்கி விட்டு, ‘ஸ்ரீகணபதயே நம:’ என்று கூறி வணங்க வும். இதுபோல் வணங்குவதோடு, அவரவரின் குலதெய்வத்தையும் வணங்கி வர, களத்திர தோஷத்தின் வலிமை குறைந்து, நலம்கூடப் பெறலாம்.

புகழுடன் வாழவைக்கும் அசுவினி!

நட்சத்திர குணாதிசயங்கள்

லகின் அனைத்து உயிரினங்களையும் நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக் கற்றைகளால் ஆளுமை செய்கின்றன.

இதன் அடிப்படையில், நவகிரகங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நட்சத்திரங்களுக்கும் தந்தார்கள், நம் முன்னோர்கள். நம்முடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் நட்சத்திரங்களை ஒட்டியே கடைப்பிடிக்கப்படுகின்றன.

அதேபோல், ஜோதிடம் சார்ந்த ஞானநூல்களும் 27 நட்சத்திரங்களைப் பற்றிய பல குறிப்புகளையும், அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் குறித்தும் விரிவாக விளக்குகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களையும் அதில் பிறந்த அன்பர்களின் குணாதிசயங்களையும் தொடர்ந்து அறிவோம். இந்த இதழில் அசுவினி நட்சத்திரம்!

சுவினிக்கு அதிபதி ஞானகாரகனான கேது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களைப் பற்றிப் பல ஜோதிட நூல்கள் உயர்வாகப் பேசுகின்றன. அவற்றுள் பழம்பெரும் ஓலைச் சுவடியான நட்சத்திர மாலை, `பொய்யுரை ஒன்றுஞ் சொல்லான்; புகழ் பெற வாழ வல்லன்...’ என்று கூறுகிறது. அதாவது, `நெருக்கடி நேரத்திலும் உண்மையைச் சொல்லும் உத்தமர்களாக இருப்பீர்கள்; மனதாலும் உடலாலும் பலசாலியாக விளங்கும் நீங்கள், வம்புச் சண்டைக்குச் செல்லமாட்டீர்கள்; வந்த சண்டையை விடமாட்டீர்கள்’ என்று பொருள்.

அசுவினி யோக நட்சத்திரமா?

ஜாதக அலங்காரம் எனும் நூல், `செய் கருமம் வழுவாமல் செய்வன், மடவார் நேயன், தியாகி, தீரன்...’ என்று இயம்புகிறது. அதாவது, நீங்கள் எந்தச் செயலையும் விதிமுறை மீறாமல் செய்து முடிப்பதில் வல்லவர்; எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்; அதே சிந்தனையாக இருப்பீர்கள். புத்திக் கூர்மை உடையவர்களாக விளங்குவதால், மற்றவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய உள் மனதைப் புரிந்துகொள்வீர்கள். ஆடை, ஆபரணங்களை அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும். தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை விரும்புவீர்கள். இளமையில் வறுமையை அனுபவித்தாலும், முதுமையில் வளமை பெற்று வாழ்வீர்கள் என்று பொருள்.

`அர்த்தவாம்சாபி...’ என்று தொடங்கும் யவன ஜாதகப் பாடல், உங்களை தனவான், சாமர்த்தியவான், வலிமையுள்ளவன் என்று போற்றுகிறது.

வீரதீர கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில் இந்த நட்சத்திரம் வருவதால், இதில் பிறந்த நீங்கள் தன்மானம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பீர்கள். இருபத்தேழு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வதால், எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை உங்களிடம் காணப்படும். பிரகாசமான கண்களைப் பெற்றிருப்பதால் கம்பீரமான தோற்றத்துடன் அழகாகக் காணப்படுவீர்கள். பலருக்கு நெற்றி உயர்ந்திருக்கும்; காது மடல்கள் விரிந்திருக்கும்; பல் வரிசையும் சீராக இருக்கும்.

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் அல்லாமல், சுய அறிவுடன் யோசித்து பதில் கூறுவீர்கள். பிடிவாதம் இருக்கும். பள்ளிப் படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும், கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, பரிசு, பதக்கம் பெறுவீர்கள். உங்களைச் சுற்றி நண்பர் கூட்டம் அதிகம் இருந்தாலும் ஒரு சிலருடன்தான் நெருங்கிப்பழகுவீர்கள். அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இசை, ஓவியத்தையும் விட்டு வைக்கமாட்டீர்கள். தாய்மொழிக்கு ஈடான புலமை அந்நிய மொழிகளிலும் உண்டு. மேடைப் பேச்சுக்கு அஞ்சமாட்டீர்கள். துணிச்சலுடன் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள்.

உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பீர்கள். அதனால் மூத்த அதிகாரியுடன் சில நேரங்களில் மோதல் வரும். கடின உழைப் பாலும் நிர்வாகத் திறமையாலும் சாதாரண நிலையிலிருந்து விரைவில் பெரிய பதவியில் அமர்வீர்கள். பத்திரப் பதிவு, வானியல், வங்கி, மருத்துவம் ஆகிய துறைகளில் பலர் திறம்பட நாட்டுக்கு சேவை செய்வீர்கள்.

45 வயதிலிருந்து சிலர் சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். ரசாயனம், மருந்து, மின்சாரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் சாதகமாக இருக்கும். ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் வலுவாக அமைந்திருந்தால், ரியல் எஸ்டேட், கட்டடம் ஆகிய துறைகளில் செல்வந்தர்களாகத் திகழ்வீர்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பவர்களுக்கு மட்டும் காதல் வெற்றிபெற்று, கல்யாணத்தில் முடியும். மனைவியை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளின் மீது தீராத பாசம் வைத்திருப்பீர்கள். சிறுவயதிலேயே அவர்கள் நெஞ்சில் நீதி, நேர்மை போன்ற தர்ம சிந்தனைகளை விதைப்பீர்கள். 24 முதல் 30 வயதுக்குள்ளேயே வீடு, வாகனம் ஆகியவை அமைந்துவிடும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வீர்கள். நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வயதுக்குள் அரசியலிலோ ஆன்மிகத்திலோ ஈடுபட்டு புகழ் அடைவீர்கள்.

பைல்ஸ், முதுகுத் தண்டுப் பிரச்னை, கணுக்கால் வலி போன்றவற்றால் அவ்வப்போது சிரமப்படுதும் உண்டு. ஆனாலும் விரைவில் அவை நீங்கி சுகம் பெறுவீர்கள். 55 வயதிலிருந்து நீங்கள் சார்ந்திருக்கும் மதம், இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பீர்கள். நீண்ட ஆயுள் உண்டு.

இனி, இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதத்திலும் பிறந்த அன்பர்களின் இயல்பு மற்றும் பலாபலன்கள் குறித்து விளக்கமாக அறிவோம்.

முதல் பாதம் (கேது + செவ்வாய் + செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். ஆகவே, அசுவினி - முதல் பாதத்தில் பிறந்தவர்கள், சுய உழைப்பால் முன்னேறுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். அதர்மத்தைத் தட்டிக் கேட்பார்கள். சுயமாகச் சம்பாதித்து, செல்வம் சேர்ப்பார்கள். ஆடம்பரத்தில் நாட்டம் உள்ளவர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவார்கள். இருந்தாலும் கொஞ்சம் முரட்டுத்தனமும் முன்கோபமும் இருக்கும்.

6 வயது வரை சளி, வயிற்றுக் கோளாறு, காய்ச்சல் ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்படும். படிப்பைவிட விளையாட்டுகளில்... குறிப்பாக தடகளம், கபடி, துப்பாக்கி சுடுவது போன்றவற்றில் ஆர்வம் பிறக்கும். பெற்றோர் மீது பாசம் இருந்தாலும் தனித்துச் செயல்படுவார்கள். சிலருக்கு விடுதி யில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகும். சிலர், சகோதரர்களால் ஏமாற்றம் அடைவார்கள்.

நண்பர்களுக்காகவும் கொள்கைகளுக் காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். சூடான, காரமான உணவுகளை விரும்புவார்கள். உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தமாட்டார்கள். தன்னை அவமதித்தவர்களை தண்டிக்கவேண்டும் என்ற உணர்வு இருக்கும். இவர்களில் பலருக்கு ஆண் வாரிசு அதிகம் உண்டு.

26 முதல் 31 வயது வரை மற்றும் 47 முதல் 53 வயது வரையிலான காலகட்டத்தில் நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தக் காலகட்டத்தில் பொருள் இழப்பு, வீண் பழி வந்து நீங்கும். அவ்வப்போது பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வசதியான வாழ்வு உண்டு.

பரிகாரம்:  எல்லாவற்றிலும் வெற்றி அடைய, இவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்கி வருவது நல்லது.

இரண்டாம் பாதம் (கேது + செவ்வாய் + சுக்கிரன்)


இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். இசை, நடனம், நாட்டியம் ஆகியவற்றில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். சிறுவயதிலேயே உயர் ரக வாகனத்தில் உலா வருவார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் பளிச்சென்ற கண்களும் மற்றவர்களுடன் எளிதில் பழகும் சுபாவமும் இவர்களுக்கு உண்டு. செல்வம் சேரும். படிப்பில் பாராட்டும் பரிசுகளும் பெறுவார்கள்.

நட்பு வட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் விரும்பும்படி இதமாகப் பேசுவார்கள். தர்மம் தலைகாக்கும் என்று நம்புபவர்கள். நொறுக்குத் தீனியை அதிகம் விரும்புபவர்கள். இனிப்பையும் லேசாகப் புளிக்கும் தயிரையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். புகழ்பட வாழ்வார்கள். சிறு வயதிலேயே சொந்த வீடு அமையும்.

25, 26, 29, 35, 38, 44, 49, 53 வயதுகளில் இவர்கள் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வார்கள். மனைவி மீது தீராத பாசம் வைத்திருப்பார்கள். பிள்ளைகளை நாலும் தெரிந்தவர்களாக வளர்ப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். இந்தப் பாதத்தில் பிறந்தவர்களிடம் அவர்களுடைய சகோதரி பாசமாக இருப்பார். தாய்ப் பற்று இவர்களுக்கு அதிகம் உண்டு.

பரிகாரம்: ஏகாதசி திதி நாளில் உப்பிலியப்பனைத் தரிசித்து வழிபட்டு வருவதால், சகல நலன்களும் கைகூடும். 

அசுவினி யோக நட்சத்திரமா?

மூன்றாம் பாதம் (கேது + செவ்வாய் + புதன்):

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் நாசூக்காகப் பேசுவார்கள். நுண்ணறிவு படைத்தவர்கள். அன்புக்குத் தலை வணங்குபவர்கள். அனைவரும் விரும்பும்படி நடந்து கொள்வார்கள். கல்வியில், குறிப்பாக கணிதம், உளவியல், வானவியல் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள். ஆனால், அறிவுபூர்வமாக வாதிடுவார்கள். மனதாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கமாட்டார்கள்.

யாரேனும் இவர்களை அவதூறாகப் பேசினாலும் கலங்கமாட்டார்கள். நான்கு வயதுக்குள் நுரையீரல் கோளாறு வந்து நீங்கும். செஸ், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை விரும்புவார்கள். அவ்வப்போது இவர்களுக்கு ‘தன்னை யாரும் மதிக்கவில்லையே’ என்ற எண்ணம் வரும். வயலின் இசையை ரசிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பேராசிரியராகவோ, கல்விக்கூட நிர்வாகியாகவோ, சமூக விழிப்புணர்வுக்கு கவுன்சிலிங் தருபவராகவோ இருப்பார்கள். காதலில் விருப்பம் இருக்காது. சமூகத்தில் எதையாவது சாதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்து, தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள்.

வசதி இருந்தும் எப்போதும் எளிமையை விரும்புவார்கள். சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். 14, 15, 19, 24, 27, 33, 37, 42, 51, 55, 64 ஆகிய வயதில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் அருளும் பிரயோகச் சக்கரம் ஏந்திய வரதராஜப் பெருமாளை இவர்கள் வழிபட்டு வருவதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.

நான்காம் பாதம் (கேது + செவ்வாய் + சந்திரன்):

நான்காம் பாதத்துக்கு அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். குலப்பெருமையை கட்டிக் காப்பவர்களாக இருப்பார்கள். தாய்ப் பாசம் இவர்களுக்கு அதிகம் உண்டு. உயர் ரக வாகனங்கள் மீது நாட்டம் இருக்கும்.

உருண்டு திரண்ட தேகமும், தீட்சண்யமான கண்களும், சிரித்தால் குழி விழும் கன்னங்களும் கொண்டவர்கள்; பார்ப்பதற்கு வசீகரமானவர்கள். பாசந்தி போன்ற பால் வகை இனிப்புகளை விரும்பி உண்பார்கள். கடவுள் பக்தி அதிகம் உண்டு. அன்னதானம், வஸ்திர தானம் செய்வார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். சிறு வயதிலேயே சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆதலால், வயோதிகத்திலும் மற்றவர்களை அண்டி வாழமாட்டார்கள். படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். அனிமேஷன், ஆடை வடிவமைப்பு, விளம்பரம், சுற்றுலா, சட்டம், ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

பலர், இருபது வயதுக்குள்ளேயே புகழின் உச்சிக்கு செல்வார்கள். மனைவியை நண்பராக நடத்துவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். 24, 25, 29, 33, 34, 39, 42, 43, 51, 52, 60 ஆகிய வயதில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருளும் வாராஹி அம்மனை வணங்கி வந்தால், நன்மைகள் பெருகும்.

- அடுத்த இதழில் பரணி நட்சத்திரம்...

அசுவினி நட்சத்திரம்

நட்சத்திர தேவதை:
அசுவினி தேவர்கள். அமிர்த கலசத்தைக் கையில் வைத்திருக்கும் தேவ வைத்தியர்கள்.
வடிவம்    : குதிரையின் முகத்தைப் போன்று மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.
எழுத்துகள்    : சு, சே, சோ, ல.
ஆளும் உறுப்புகள்: தலை, மூளை.
பார்வை    : சமநோக்கு.
பாகை    : 0.00 - 13.20.
நிறம்    : மஞ்சள்.
இருப்பிடம்    : நகரம்.
கணம்    : தேவ கணம்.
குணம்    : எளிமை.
பறவை    : ராஜாளி.
மிருகம்    : ஆண் குதிரை.
மரம்    : பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி மரம்)
மலர்    :  நீலோத்பலம்.
நாடி    : தட்சிண பார்சுவ நாடி.
ஆகுதி    : அரசு, ஆல்.
பஞ்ச பூதம்    : நிலம்
நைவேத்தியம்: பாலேடு
தெய்வம்    : சரஸ்வதிதேவி
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7, 9.
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பழுப்பு.
அதிர்ஷ்ட திசை     : வடகிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினம் : வெண் பவழம்
அதிர்ஷ்ட உலோகம் : தாமிரம், பஞ்சலோகம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: அசுவத்தாமன், பாம்பாட்டிச் சித்தர், அரிச்சந்திரன், ராஜேந்திரச் சோழன்.
சொல்ல வேண்டிய மந்திரம்:ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வசித்யை ச தீமஹி
தன்னோ: வாணீ ப்ரசோதயாத்

`அசுவினி’ திருநாளில்...

ட்சத்திரங்களில் முதலாவதான அசுவினியில் குறிப்பிடத்தக்க சுபகாரியங் களைச் செய்யலாம். திருமணம், பூ முடித்தல், சீமந்தம், புதுமனை புகுதல், குழந்தைக்குப் பெயர் சூட்டல், சிகை நீக்கி காது குத்துதல் ஆகிய வைபவங்களை அசுவினி நட்சத்திரத் திருநாளில் செய்வது நலம் தரும்.
மேலும், முதன்முதலில் வேத சாஸ்திரம் கற்கவும், வாகனம், நவீன ஆடை, ஆபரணங்கள், ரத்தினம் ஆகியவை வாங்கவும் குறிப்பிட்ட ஆபரணங்களை அணியவும் இந்த நட்சத்திர நாள் மிகவும் உகந்தது. மேலும் பொன்னேர் கட்ட, விதைவிதைக்க, மரக் கன்றுகள் நட, கடல் வழிப் பயணங்கள் மேற்கொள்ள, தானியங்கள் வாங்க, பசுத் தொழுவம் அமைக்கவும் அசுவினி நட்சத்திரம் உகந்தது.

அசுவினி யோக நட்சத்திரமா?

கதவுகளும் பலன்களும்!

ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக்கொள்ளுமானால், விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அதேபோல் கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சத்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், வீணான மனக் கவலைகளும் ஏற்படும். ஆகவே, சத்தம் எழாதபடி கதவினை உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.

தானியங்கிக் கதவுகளை அமைக்கக் கூடாது என்று சாமரங்க சூத்ர தாரா என்னும் வாஸ்து நூலில் தீர்க்கதரிசனத்துடன் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், தற்காலத்தில் தானியங்கிக் கதவுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில், வலப் பக்கமாகத் திறக்குமாறு அக்கதவுகளை அமைத்துக்கொள்ளலாம்.

வீடு கட்டத் தொடங்குவதற்கு ஏற்ற நாள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீடு கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பிக்க ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ஸ்திர லக்னங்களும், ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும் உத்தமம் ஆகும்.


கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்!

இரண்டு கதவுகள்    : நல்ல பலனைத் தரும்.
மூன்று கதவுகள்    : பகைமை ஏற்படும்.
நான்கு கதவுகள்    : நீண்ட ஆயுள் உண்டாகும்.
ஐந்து கதவுகள்    : நோயை உண்டாக்கும்.
ஆறு கதவுகள்    : சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஏழு கதவுகள்    : மரண பயத்தை ஏற்படுத்தும்.
எட்டு கதவுகள்    : செல்வம் வளரும்.
ஒன்பது கதவுகள்    : நோய் உண்டாகும்.
பத்து கதவுகள்    : திருடர்களால் ஆபத்து.
பதினோரு கதவுகள்    : நன்மைகள் குறைவாக இருக்கும்.
பன்னிரண்டு கதவுகள்    : வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பதினான்கு கதவுகள்    : செல்வ வளர்ச்சி இருக்கும்.
பதினைந்து கதவுகள்    : நன்மைக் குறைவு.

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

நிலத்தின் அமைப்பும் பலன்களும்!

வீடு அமையும் இடத்தின் கிழக்கு, வடக்கு ஆகிய இரண்டு பக்கங்கள் தாழ்ந்தும், மேற்கு, தெற்கு ஆகிய இரண்டு பக்கங்கள் உயர்ந்தும் இருந்தால், அந்த நிலத்தில் கட்டப்படும் வீடானது, அனைத்து நன்மைகளையும், சுகமான வாழ்க்கையையும் அளிக்கும்.

- கிருஷ்ணா

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கலாமா?

? ஜாதக ஆய்வில் லக்னம் பிரதானமா அல்லது ராசியைப் பிரதானமாகக் கொண்டு ஆராய வேண்டுமா?

- கா.கோவிந்தசாமி, சேலம்

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பூர்வஜன்ம வினைப்பயன்களை அனுபவிக்கவே இந்த உலகத்தில் பிறக்கிறது. ஜாதகப் பலன் என்பது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜாதகரின் பூர்வ புண்ணியத்தை வைத்து பலன் சொல்ல வேண்டுமானால், லக்னத்தின் அடிப்படையில்தான் சொல்லவேண்டும்.

அசுவினி யோக நட்சத்திரமா?ஆயுள், ஆரோக்கியம், பணவரவு, உடன்பிறப்பு, உறவுகள், சொத்து, வீடு வாசல், மனைவி, குழந்தை, பூர்வ புண்ணியம், கர்மாக்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், லக்னத்தின் அடிப்படையில்தான் பலன் சொல்லவேண்டும். லக்னம் என்பது சூரியனின் உதயப் புள்ளி. சூரிய உதயத்தின் அடிப்படையில் லக்னம் கணிக்கப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிதான் முதல் லக்னமாக இருக்கும். உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் இருக்கும்போது உதய லக்னம் மேஷமாக இருக்கும். ஒரு லக்னம் என்பது இரண்டு மணி நேரமாகும். மேஷ லக்னத்துக்கு அடுத்து ரிஷப லக்னம் தொடர்ந்து மிதுன லக்னம் என்று ஒரு நாளில் 12 லக்னங்கள் உண்டு. குழந்தை பிறக்கும் நேரத்தைக் கொண்டு லக்னம் கணிக்கப்படும். எனவே, ஜாதகப் பலன்களைச் சொல்ல லக்னத்தைத்தான் பிரதானமாகக் கொள்ளவேண்டும்.

தற்போது நடைபெறும் பலன்களைப் பற்றிச் சொல்லும்போது, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு சொல்லவேண்டும். நிகழ்கால கிரகங்களின் வலிமை சந்திரனின் வலிமைப் பொறுத்தே அமையும் என்று ‘பலதீபிகை’ குறிப்பிடுகிறது. எனவே, தற்காலப் பலன்களைச் சொல்ல, சந்திரன் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு சொல்லவேண்டும்.

? சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும்போது, சில இடங்களில் பெற்றோரின் விருப்பத்துக்கேற்ற நேரத்தில் குழந்தைப்பேறு நிகழ்கிறது. எனில், அந்த நேரத்தை ஜோதிடம் ஏற்குமா?

- ரேணுகா முத்துசாமி, வந்தவாசி

முன்ஜன்மத்தில் ஏற்பட்ட வினைப் பயன்களை அனுபவிப்பக்கவே இந்தப் பிறவி அமைகிறது. என்னதான் நாம் `இந்த நேரத்தில்தான் குழந்தை பிறக்கவேண்டும்’ என்று திட்டமிட்டாலும்கூட, டாக்டர் நேரத்துக்கு வரமுடியாமல் இருப்பது, மின் தடை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் பிரச்னை என்று பல தடைகள் ஏற்பட சாத்தியமிருக்கிறது.

ஆக, நாம் திட்டமிட்ட நேரத்தில்தான் குழந்தை பிறக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த நேரத்தில்தான் பிறக்கும். மேலும் சிலர், ‘என் பிள்ளையும் உன் பிள்ளையும் ஒரே நேரத்தில்தான் பிறந்தார்கள். ஆனால், உன் பிள்ளையைப் போல் என் பிள்ளை மகிழ்ச்சியாக இல்லையே’ என்று சொல்வார்கள். சில நொடி வித்தியாசம் இருந்தாலும்கூட குழந்தையின் ஜாதகப் பலன்கள் மாறிவிடும். தேவர்கள் அமுதம் பருகிய நேரத்தில் பிறந்தவர்தான் மார்த்தாண்டவர்ம ராஜா என்றும், தேவர்கள் அமுத கலசத்தைக் கீழே வைத்த நேரத்தில் பிறந்த ஒருவன் கொள்ளைக்காரனாக மாறினான் என்றும் ஒரு செவிவழிச் செய்தி கேரளத்தில் உண்டு.

அசுவினி யோக நட்சத்திரமா?

? நமது ஆதிபுராணங்களிலும் ஜோதிட சாஸ்திரங்களிலும் வாஸ்து குறித்த தகவல்கள் உண்டா?

- கோ.லட்சுமணன், திருப்பூர்

வாஸ்து என்பது கட்டடம் சார்ந்த கணித முறை. வாஸ்து என்பது வசிக்கும் இடத்தைக் குறிப்பது. மனிதர்களுக்கு வீடு அவசியம். ஜோதிடத்துக்கும் வாஸ்துக்கும் நேரடியான தொடர்பு இல்லை.

4-ம் பாவத்துக்கு உரிய கிரகத்தின் நிலை, பூமிகாரகனாகிய செவ்வாயின் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து ஒருவருக்கு வீடு, வசதி வாய்ப்புகள் அமையும். 4-ம் பாவத்துக்கு அதிபதியான கிரகம் சுப கிரக சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் இடம் பெற்றிருந்தால் வீடு, மனை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும். 4-ம் பாவாதிபதி 11-ல் அமர்ந்திருந்தால் சொந்தமாக புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும்.

இப்படியான பலனைச் சொல்வதால், இவ்வகையில் வேண்டுமானால் ஜோதிடத் துக்கும் வாஸ்துக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சொல்லலாம்!

? சமீப காலங்களாக... ஜோதிடம் பார்க்கும் கால அளவு குறுகிக்கொண்டே வருகிறது. அரைமணி நேரத்தில் ஜாதகம் பார்த்துச் சொல்கிறார்கள் சிலர். அப்படியான பலன்கள் பலிக்குமா?

- சி.சுந்தர்ராஜன், நாகர்கோவில்

ஒருவரது ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பலன் சொல்ல, கண்டிப்பாக இரண்டு நாள்கள் பிடிக்கும். அப்படி ஜாதகத்தைப் பார்க்கத் தொடங்கும்போது முதலில் ஆயுள்பாவத்தைப் பார்க்கவேண்டும். ஆயுள்பாவம் வலிமையாக இருந்தால்தான், பலன்களைச் சொல்ல முடியும். ஆயுள்பாவம் வலிமையாக இல்லாவிட்டால் பலன் சொல்வதில் பயன் இல்லை. தற்போது ஜாதகம் பார்க்க வருபவர்கள், அப்போதைய பலன்களை மட்டுமே தெரிந்துகொள்ள வருகிறார்கள். அப்படி வருபவர்களின் ஜாதகத்தில் ஆயுள்பாவத்தை மட்டும் முதலில் கணித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகு பலன் சொல்கிறோம். இதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. ஆனால், முழுமையான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு, ஜாதகத்தை முழுவதுமாக ஆராய்ந்து பலன்களை கணித்துச் சொல்ல கண்டிப்பாக இரண்டு நாள்களாவது பிடிக்கும்.

? களத்திர தோஷம் கஷ்டம் அளிக்குமா?

- எம்.கீர்த்தனா, சென்னை-44

களத்திர தோஷம் இருந்தால் திருமணத் தடை ஏற்படும். களத்திரஸ்தானமாகிய 7-ம் வீட்டில் பாவ கிரகம் இருந்து லக்னத்தைப் பார்த்தால் களத்திர தோஷம் ஏற்படும்.

களத்திர காரகனான சுக்கிரன் சுப கிரகம். ஆனால், ‘காரகோ பாவ நாசக:’ என்றபடி, சுக்கிரன் எந்த பாவத்தில் அமர்கிறதோ அந்த பாவம் வலிமை குன்றிவிடுகிறது. 7-ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து, லக்னத்தைப் பார்க்கும்போது அந்த லக்னத்துக்குக் கெடுதல் ஏற்படும். காம களத்திரம் என்று சொல்லப்படும் 7-ம் வீடு சரியாக அமையவில்லையெனில், திருமணம் தடைபடும்.

7-ம் வீட்டில் வளர்பிறைச் சந்திரன், குரு போன்றோர் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்து, எந்த கிரகத்தின் காரணமாக தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை கணித்துப் பார்த்து, அதற்கேற்ப பரிகாரம் செய்யவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

அன்பார்ந்த வாசகர்களே!

ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, பெயரியல் முதலானவை குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் பொதுவான கேள்வி- பதில்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும். மேலும், தனிப்பட்ட ஜாதகங்களுக்கான பலாபலன்கள், தோஷ பரிகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் பிரத்யேகமாக பதிலளிக்கவுள்ளார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் (அவை இதழில் இடம்பெறாது).

தனிப்பட்ட முறையில் ஜோதிட விளக்கங்கள் பெற விரும்பும் வாசகர்கள், கீழ்க்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்து தனியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும் (நகல் எடுத்தும் அனுப்பலாம்) படிவத்துடன் ஜாதக நகலையும் இணைத்து அனுப்பவும். உங்களின் தொலைபேசி எண் மற்றும் இ.மெயில் முகவரி விவரங்களையும் இணைப்பது மிக அவசியம். தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கான பதில்கள் - விளக்கங்கள், சம்பந்தப்பட்ட வாசகருக்கு தொலைபேசி அல்லது இ.மெயில் மூலம் அளிக்கப்படும். கேள்விகள் அனுப்பப்பட்டு 15 நாள்களுக்குள் பதில் கிடைக்கவில்லை எனில், தங்களின் கேள்விகள் தேர்வாகவில்லை என அறியவும். கேள்விகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

அசுவினி யோக நட்சத்திரமா?

ஆரோக்கிய ரேகை

வ்வொருவர் உள்ளங்கையிலும் ஆதிபராசக்தியின் அம்சமான பஞ்சாங்குலி எனும் தேவதை வாசம் செய்கிறாள். அவளை விதி நாயகி என்று கூறினால் மிகையாகாது. இந்த தேவதையை உபாஸித்துதான் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட, ஆரூட ரேகை சாஸ்திர வல்லுநனாக விளங்கினான் என்பது மகாபாரத வரலாறு.

தோல்வி மனப்பான்மை, மனச்சோர்வு, செயலின்மை, சோம்பேறித்தனம் ஆகியவை நீங்கி, புதிய உற்சாகம், செயல்படும் திறன், தன்னம்பிக்கை, வெற்றிக்காக உழைக்கும் ஊக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு, ‘தன் கையே தனக்குதவி’ என திட சித்தத்துடன் முன்னேறவும், ஓரளவு நமது எதிர்காலத்தை நாமே ஊகித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் பஞ்சாங்குலி தேவதை அருள்புரிகிறாள். `பஞ்சாங்குலி’ என்பது நமது உள்ளங்கையைக் குறிக்கும். பஞ்ச என்றால் ஐந்து; அங்குலி என்றால் விரல். ஐந்து விரல்கள் கொண்ட நமது உள்ளங்கையில் உள்ள ரேகைகள்தான் நமது தோற்றம், குணாதிசயங்கள், செயல்திறன், அறிவுத்திறன், ஆற்றல் திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் சங்கேதங்கள் ஆகும்.

அசுவினி யோக நட்சத்திரமா?

அவ்வகையில், நம் உள்ளங்கையில் உள்ள ஆரோக்கிய ரேகையானது, ஒருவரது உடல் ஆரோக்கியம் குறித்து நுணுக்கமான விஷயங்களையும் தெளிவாக உணர்த்தும்.

ஆரோக்கிய ரேகை உள்ளங்கையில் எங்கு வேண்டுமானாலும், எந்த மேட்டில் இருந்தும் ஆரம்பமாகலாம். ஆனால், அது புதன் மேட்டில்தான் முடியும். அப்படி அது புதன் மேட்டில் முடிவுற்றால்தான், அதை ஆரோக்கிய ரேகை எனக் கூற முடியும்.

ஆரோக்கிய ரேகை தெளிவாக, ஆழமாக, அறுபடாமல், ஒரே கோடாக அல்லது வளைகோடாக அமைந்தால், அது பரிபூரணமான உடல் பலத்தையும் சிறப்பான உடல் ஆரோக்கியத்தையும் குறிக்கும்.

ஒருவரது ஆரோக்கிய ரேகை பின்னல் அல்லது சங்கிலி போல் அமைந்திருந்தாலும், ஆங்காங்கே அறுபட்டிருந்தாலும், ஒழுங்கீனமாகவோ, இரட்டைக் கோடுகளாகவோ சென்றாலும், அது உடல் பலவீனத்தையும், அடிக்கடி நோய்வாய்ப்படும் தன்மையையும், ஆரோக்கியக் குறைவையும் எடுத்துக்காட்டும்.

ஆரோக்கிய ரேகை மிக அகலமாகவும் நீளமாகவும் இருந்தால், ஏதாவது ஒரு நீண்ட கால நோயால் உபாதை இருக்கும்.

சிலரின் உள்ளங்கைகளில் ஆரோக்கிய ரேகை இல்லாமல் இருக்கலாம். அதாவது, எந்த ரேகையும் புதன் மேட்டைத் தொட்டிருக்காது. இதற்குத் தவறாக அர்த்தம்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய ரேகை இல்லாமல் இருப்பதும், ஒருவரது உடல் வலுவையும், புஷ்டியான தேக ஆரோக்கியத்தையும்தான் குறிக்கும். அவர்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியும், உடல் பலமும் மனோபலமும் இருக்கும்.

ஆரோக்கிய ரேகை இல்லாதவர்களுக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாகவும் பலமாகவும் இருக்கிறதா என்பதைப் பார்த்தே, மேற்கூறிய பலன்களைக் கூற வேண்டும்.

- நாராயணன்

யோகம் நல்ல யோகம்!

`எல்லாவற்றுக்கும் ஒரு யோகம் வேணுமப்பா’ என்பார்கள் கிராமப்புறங்களில்! மனிதனின் சாதனைக்கும், உயர்வுக்கும் உரிய காலத்தை ‘யோக காலம்’ என்றும் சொல்லிவைத்தார்கள். ஜோதிடம் சார்ந்த ஞானநூல்களும் கிரக அமைப்புகளைக் கொண்டு பல்வேறு யோகங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றுள் சில யோகங்கள்...

வீணை யோகம்: லக்னம் முதற்கொண்டு 7-ம் இடம் வரை வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பின், வீணை யோகம் ஏற்படுகிறது. இதனால் சங்கீதத்தில் சிறப்புற்றுத் திகழ்வார்கள்.

அசுவினி யோக நட்சத்திரமா?

நாக யோகம்: 10-ம் பாவாதிபதி நின்ற அம்சாதிபதியும், லக்னாதி பதியும் லக்னத்தைப் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ நாகயோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகர் அதிகம் படித்தவராக, தர்மத்தின் வழியில் நடப்பவராக இருப்பார். சுக வாழ்க்கை அமையும்.

சாம்ராஜ்ஜிய யோகம்: லக்னம் கன்னியாக அமைந்து, சனி 10-ம் பாவத்திலும், சுக்கிரனும் புதனும் 5-ம் பாவத்திலும், குருவும் சந்திரனும் 7-ம் பாவத்திலும் இருந்தால், சாம்ராஜ்ஜிய யோகம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு ஓங்கும். அதேபோன்று, லக்னத்துக்கு 7, 9-ம் பாவாதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், அரசாளும் யோகம் உண்டாகும்.

மிருதங்க யோகம்: 11-ம் பாவாதிபதியானவர் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றிருக்க, அந்த ராசிக்கு உடையவர் 4, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால், மிருதங்க யோகம் ஏற்படும். இதன் பலனாக, எல்லோரை யும் வெல்லும் திறமை உண்டாகும். செல்வம் சேரும்.

- ஜோதிடர் டி.செல்வக்குமரன்