Published:Updated:

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

யோக பலன்கள் யாருக்கு?

நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (4.10.18), கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம் - பவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோகத்தில், சுக்கிர ஓரையில், ஏழாம் சாமத்தில்... பஞ்ச பட்சிகளில் ஆந்தை நடை பயிலும் நேரத்தில், தட்சிணாயனப் புண்ய கால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்கு, (சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு), ரிஷப லக்னத் திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும், சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிக ராசிக்குள் சென்று அமர்கிறார் குருபகவான்.

அவர், 13.3.19 முதல் 9.4.19 வரை அதிசாரமாகவும், 10.4.19 முதல் 18.5.19 வரை வக்ரகதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் வந்து அமர்கிறார் குரு. ஆகவே, ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். எனினும், ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் மாசுக்கட்டுப் பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் எண்ணற்றோர் பாதிக்கப்படுவார்கள்.

3.10.18 முதல் 16.12.18 வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால், ரியல் எஸ்டேட் துறை சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள் பாதிப்படையும். நாட்டின் கடன் அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும்.

செல்போன் போன்ற சாதனங்களின் விலை குறையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். காப்பீட்டுத் துறை அதிக லாபம் ஈட்டும். பங்குச்சந்தை மற்றும் தேர்தல் தொடர்பான கணிப்புகள் பொய்யாகும். அணு ஆராய்ச்சிகள் நம் நாட்டில் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஞானிகள், மகான்கள் பாதிப்படைவார்கள். ரயில் விபத்துகளும், ரயிலில் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரிக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

அரிய மூலிகைகள், விதைகள் ஆகியன வெளி நாட்டுக்குக் கடத்தப்படும். காடுகளில் தீ விபத்து நிகழும். சிறுநீரகத் தொற்றால் புகழ்பெற்றவர்களின் உடல்நிலை பாதிப்படையும். செவ்வாயின் வீட்டில் குரு அமர்வதால் பெண்கள் மாதவிடாய்க் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.

கச்சா எண்ணெயின் விலை அதிகமாகும். பெட்ரோல் விலை உயரும். 21.12.18 முதல் 14.1.19 மற்றும் 15.3.19 முதல் 13.4.19 வரையிலான கால கட்டத்தில், விமான விபத்துகள் நிகழலாம். உலகெங்கும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்.

உலக அரங்கில் ரஷ்யாவின் கை மீண்டும் ஓங்கும். அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அந்நாட்டு அதிபருக்கான எதிர்ப்புகள் மேலும் வலுவடையும். இந்தியாவில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும். பெரும்பாலும் ஆளுங்கட்சிகளுக்குச் சாதகமான நிலை ஏற்படும். தேசத் தலைவர்களின் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்தவேண்டியது வரும்.

23.12.18 முதல் அரசியல் களம் சூடு பிடிக்கும். தென்னிந்தியாவில் அரசியல் கூட்டணிகள் மாறும். தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படையும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

குருவின் பார்வை படுவதால் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோக பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இந்த பெயர்ச்சியின்போது பெரும்பான்மையான காலம் - ஏறக்குறைய 243 நாட்களுக்கு, கேட்டை நட்சத்திரத்திலேயே குருபகவான் பயணம் செய்ய இருக்கிறார். ஆகவே ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். பணப்பற்றாக்குறை உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

4.10.18 முதல் 20.10.18 வரை விசாகம்; 21.10.18 முதல் 19.12.18 வரை அனுஷம்; 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை கேட்டை நட்சத்திரம்;  13.3.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரக்காரர்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.

அதேநேரம், இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மக்களிடையே தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் அதிகரிக்கும். அமைதியும் ஆனந்தமும் நிறைந்து திகழ, தெய்வம் துணை நிற்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

மேஷம்

குரு பகவான், வரும் 4.10.18 முதல் 28.10.19 வரை 8-ம் வீட்டில் மறைவதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தை தருவார். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களும் செலவுகளும் ஏற்படும். எனினும் செலவுகளுக்கு ஏற்ப வருமானமும் இருக்கும். கடன் சுமை குறையும்.

பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வழக்குகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்.

குரு பார்வை பலன்கள்: குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட பிளான்  அப்ரூவல் கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பார்ப்பதால், புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

நட்சத்திர சஞ்சார பலன்கள்: 4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் வீடுகளுக்குரிய குரு, தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-களின் நட்பு, தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் தொந்தரவு கள் ஏற்படலாம். சிலருக்கு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குரு, புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், வதந்தி கள் ஏற்பட்டு நீங்கும். கடன் பற்றிய கவலை ஏற்படும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில், ராசிக்கு 9-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாகும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். பாதியில் நின்ற வீடுகட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் கவனமாக  தேவை. சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். வேலையாள் களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் அவசரம் வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: பணிகளில் அலட்சியம் வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.    விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. கலைத்துறையினர், சின்னச் சின்ன வாய்ப்பு களையும் போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வாழ்க் கையைப் போராட்டமாக்கினாலும், நிறைவில்  புதிய முயற்சிகளில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: கிருத்திகை நட்சத்திர நாளில், கரூர் மாவட்டம் - வெண்ணெய்மலை என்ற ஊரில் அருளும் பாலசுப்ரமணியரை தரிசித்து, அவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; வளம் பெருகும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

ரிஷபம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 7-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள் வீர்கள். வீண் பிரச்னைகளிலிருந்து ஒதுங்குவீர்கள். திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யமும் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத் தில் முன்னேற்றம் உண்டாகும். சிலர், வங்கிக் கடனுதவி பெற்று வீடு கட்டி முடிப்பீர்கள்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். அவரது ஆரோக்கியம் மேம்படும். மகளின் திருமணமும் சிறப்புற நடக்கும்; மகனுக்கு நல்ல வேலை அமையும். புதிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடினமான காரியங்களையும்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். மூத்த சகோதர வகையில், கருத்துவேறுபாடுகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.  புதிய வாகனம், சொத்து வாங்குவீர்கள்.

நட்சத்திர சஞ்சாரம்:  4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமையால் சோர்வு உண்டாகும். திடீர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மூத்த சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். புதிய பொறுப்பு களை நன்றாக யோசித்து ஏற்கவும்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். திருமணம் கூடிவரும். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்பு களும், பணப்பற்றாக்குறையும், மனதில் இனம் தெரியாத கவலைகளும் ஏற்படக்கூடும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் குரு வக்ரகதியில் செல்வதால், மனக்குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். பிள்ளைகளை அனுசரித்து நடக்கவும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. கமிஷன், ஏற்றுமதி - இறக்குமதி, கட்டடத் தொழில், அரிசி வியாபாரம் ஆகிய வகைகளில் லாபம் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு:  உங்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமின்றி கிடைக்கும்.

மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். எனினும் நண்பர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. பரிசும் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறை யினருக்கு, எதிர்பார்த்து கிடைக்காமல் போன வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சோர்ந்து  கிடக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்ப துடன், எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில், திருவள்ளூர் மாவட்டம் - தேவதானம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; நன்மைகள் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

மிதுனம்

குரு பகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 6-ம் வீட்டில் மறைகிறார். `சகட குரு எதிர்ப்புகளைத் தருவாரே’ என்று கலங்கவேண்டாம். ஓரளவுக்கு நல்லதே நடக்கும். வாழ்வின் சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். சொந்த முயற்சியால் முன்னேற நினைப்பீர்கள். சிலநேரங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவு களும் துரத்தும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

உங்களில் சிலர், பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, புறநகர்ப் பகுதியில் குடியேறுவீர்கள். தவணை முறையில் புதிய வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பி-களுடன் அனுசரணையாகச் செல்லவும். நெருங்கிய நண்பர்கள்கூட உங்களைக் குறை கூறுவார்கள்; கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

குரு பார்வை பலன்கள்: குரு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் பிடிவாதப் போக்கு மாறும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்ப் பயணங் களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு, வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். உங்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறாகப் பேசுவார்கள்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், வருமானம் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளி மாநிலங்களில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் பண வரவு உண்டு. அறிஞர்களின் நட்பு கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். வீட்டை விரிவுபடுத்து வீர்கள். கடனைத் தீர்க்க உதவி கிடைக் கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசாரமாகக் குரு செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம்  கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வக்ர சஞ்சாரம்:: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். அடிக்கடி முன்கோபம் வந்து செல்லும். திடீர்ப் பயணங்கள், கடன் தொந்தரவுகளும் ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அதிரடியான மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடையைச் சொந்த இடத்துக்கு மாற்ற வங்கிக் கடனுதவி கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உழைப்புக்கேற்ற பலன் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் தவறு களுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

மாணவர்களே! படிப்பில் நன்கு கவனம் செலுத் தினால் மட்டுமே, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு: மறைமுகப் போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, செலவுகள் அலைச்சல்களோடு வெற்றியைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், சோழவந்தான் எனும் ஊரில் அருளும் இளங்காளி அம்மனை, வெள்ளிக்கிழமையில் சென்று தரிசித்து, குங்குமார்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

கடகம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து நன்மை களை அள்ளித் தரவிருக்கிறார். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். சிந்தனையில் தெளிவும், செயலில் விவேகமும் காணப்படும்.  கணவன் - மனைவிக்கிடையே மனக் கசப்புகள் நீங்கும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குச் சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்த அன்பர்களுக்கு நல்ல வெலை கிடைக்கும்.  வழக்குகள் சாதகமாக முடியும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. விழிப்பு உணர்வுடன் இருப்பீர்கள்.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்ததை முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதரர்களுடன் ஒற்றுமை வலுப்படும். பணவரவு உயரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், பணிச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தின் காரணமாக நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண்பழி ஏற்படும். கடன் பிரச்னைகளை நினைத்து கலக்கம் ஏற்படும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள், சளித் தொந்தரவு, கழுத்துவலி, வாகனப் பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6-ம் வீட்டில் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் செல்வதால், பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை `மூலம்’ நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் குரு செல்வதால், பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தடைப்பட்ட விஷயங்கள் முடிவடையும். சிலர் வீடு மாறுவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். சிலர், புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர், சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்று, மறுபடியும் பெரிய பதவியில் அமரும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுடைய படைப்புகள் பாராட்டும் பரிசும் பெறும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டது துலுங்கும்படிச் செய்வதுடன், எதிர்பாராத வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையிலுள்ள அங்கமங்கலம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீநரசிம்ம சாஸ்தாவை, சனிக்கிழமையில் சென்று வழிபடுவது விசேஷம்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

சிம்மம்

குருபகவான், 4.10.18 முதல் 27.10.19 வரை 4-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் உங்கள் குடும்பத் தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்; கவனம் தேவை.

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். எந்தக் காரியத்திலும் உணர்ச்சிவசப்படக்கூடாது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மூட்டு வலி, முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டு நீங்கும். வீடு, மனை வாங்கும்போது பத்திரங்களை நன்கு ஆய்வு செய்யவும். பண வரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். தாழ்வு மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்வது அவசியம். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் அவசரம் வேண்டாம்.

குரு பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்குப் புது வேலை கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வ தால், மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். குலதெய்வக் கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

21.10.18 முதல் 19.12.18 வரை, சனி பகவானின் அனுஷ நட்சத்திரத்தில் குரு செல்வதால், மற்றவர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். மறதியின் காரணமாக விலையுயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் கேட்டை நட்சத் திரத்தில் செல்வதால், டென்ஷன் அதிகரிக்கும். கடன் வாங்க நேரிடும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிலை ஏற்படும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை  குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகளின் திருமணம் கூடிவரும். சொத்து வழக்கு சாதகமாகும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் குரு செல்வதால், திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது அவசியம். தொழில் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய சூழல் உருவாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்கு தாரர்களுடன் மோதல் போக்கு விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். எனினும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதல் தரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 

மாணவர்களே! விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்க, அதிகம் செலவு செய்ய வேண்டி யது வரும். கலைத்துறையினரே! உங்களின் படைப்பு களுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.   

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, ஏமாற்றங் களையும் இடமாற்றங்களையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாலபைரவரை, அஷ்டமி திதி நாளில் சென்று வணங்கி வந்தால் நன்மைகள் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

கன்னி

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 3-ம் இடத்தில் அமர்வதால், எந்த வேலையையும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.  மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

விலையுயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகவும் பேசுவார்கள். உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீடு கட்டுவது மற்றும் வாங்குவது தாமதமாகும்.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் உண்டு. கனவுத் தொல்லைகள் குறையும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

நட்சத்திர சஞ்சாரம்:  4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரிபார்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணைக்கு  மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு-வெறுப்பை அறிந்து, அதற்கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். பிற மொழி பேசுபவர்களால் பயனடைவீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிகொள்ளும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள்.

அதிசார வக்ர சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 4-ம் வீட்டில் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், அவ்வப்போது பதற்றத்துக்கு ஆளாவீர்கள். உடம்பில் ஹார்மோன் பிரச்னை, கணவன் - மனைவிக்கு இடையே வீண் சச்சரவு வந்து நீங்கும்.  எதிர்பாராத வகையில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ரகதியிலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்தில் வக்ரகதியிலும் செல்வதால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களில் சிலருக்கு, வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். சிலர், நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு: சில சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். பணியாளர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். நீங்களே எதிர்பாராத வகையில், அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு தேடிவரும். புது வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்; அவர்களால் லாபம் அதிகரிக்கும். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகத்தில் அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சிலருக்கு பதவியுயர்வு கிடைக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும். 

மாணவர்களுக்கு, விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பிரிவில் சேர வாய்ப்பு உண்டாகும். கற்பதில் கவனம் தேவை; சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும்.  கலைத்துறையினருக்கு, பெரிய வாய்ப்புகள் வரும். உங்களுடைய யதார்த்தமான படைப்புகள் அதிகமான  பாராட்டுகளைப் பெறும். 

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சிறு சிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும், நிறைவாக வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுயம்பு துர்கை அம்மனை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

துலாம்

உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை தனஸ்தானத்தில் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேரும் வாய்ப்பு ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, நல்ல வேலை அமையும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 

குரு பார்வை பலன்கள்:  குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவும். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனி பகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

20.12.18 முதல் 12.3.19 வரை, 9.8.19 முதல் 27.10.19 வரை, குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பண வரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங் குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 3-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்து செல்லும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் அதிகமாகும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், கொஞ்சம் சிக்கனமாக இருக்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவும், வி.ஐ.பி-களின் அறிமுகமும் உண்டு.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் மதிப்பு மரியாதை உயரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் அலட்சியப் போக்கு மாறும். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலைத் துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்ட வாய்ப்புகள் மறுபடியும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாகவும் திருப்பத்தைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு நெற்குத்தி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று சென்று வழிபடுவது நன்மை தரும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

விருச்சிகம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை, ஜன்ம குருவாக அமர்வதால், பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைச் சுமை கூடும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் ஏற்பட்டு நீங்கும். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம்.

ஈகோ பிரச்னையால் தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்; பரஸ்பரம் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடையே உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவன மாக இருக்கவும்.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர், தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொதுச் சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டாலும் பாசம் குறையாது.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை  குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

21.10.18 முதல் 19.12.18 வரை, சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் குரு செல்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.  20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை, குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மறைமுக நெருக்கடிகள் வந்து செல்லும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும்.   உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சிந்தித்து முதலீடு செய்யவும். சின்ன சின்ன நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். பண விஷயத்தில் கவனம் தேவை. தெரியாத தொழிலில் இறங்கவேண்டாம். தற்போதைய சூழலில், கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு: நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வு ஆகியவற்றைப் பெற போராட வேண்டி இருக்கும்.  

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும். கலைத்துறையினர், வாய்ப்புகளைப் போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, பல வகை களில் உங்களுக்குச் சிரமங்களைத் தருவதுபோல் தோன்றினாலும், அனுபவ பாடங்களைத் தந்து, அவற்றின் மூலம் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில், சிவாலயங்களில் அருளும் சரபேஸ்வரரை வணங்கி, அவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; சோதனைகள் நீங்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

தனுசு

குருபகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் அமர்கிறார். வேலைச் சுமையும் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும்.

பிரசித்திபெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மகனின் கல்வி, வேலை பற்றிய கவலை வந்து செல்லும். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிவு செய்யவும். மற்றவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு மாறிச் செல்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. நவீன டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவு பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

 21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் குருபகவான் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். தைரியம் கூடும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். 

 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, தாழ்வுமனப்பான்மை, நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், கை, கால், மூட்டு வலி, மனக்குழப்பம் வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

வக்ர சஞ்சாரம்:10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங் களும் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். பண வரவு அமோகமாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கியிருக்கும் சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் உங்கள் எண்ணப்படி நவீனமயமாக்குவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகை களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். கணிதம் மற்றும் மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்கள் வரும் என்றாலும், அதனால் பாதிக்கப்படாமல் முன்னேறுவீர்கள். வேற்றுமொழி பேசும் அன்பர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நண்பர்கள் மூலம் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் எனும் ஊரில் அருளும் கயிலாசநாதரை, பிரதோஷ நாளில் சென்று, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

மகரம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபவீட்டில் அமர்ந்து பலன் தரவுள்ளார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

குரு பார்வை பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகன்  உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

நட்சத்திர சஞ்சாரம்:  4.10.18 முதல் 20.10.18 வரை  குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புது வேலை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி உண்டு.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவர். பூர்வீகச் சொத்தில் பராமரிப்புப் பணிகள் செய்வீர்கள்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், சுபச் செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

வக்ர சஞ்சாரம்:10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பண வரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் பற்று வரவு உயரும். குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.  முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவு எடுப்பார்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்பு வரும்.

மாணவர்களுக்கு, படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.   கலைத்துறையினருக்கு, வீண் வதந்திகள் மறையும். துடிப்புடன் செயல்படுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும் பரிசும் கிடைக்கும்.  

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பணவசதி, சொத்துச் சேர்க்கை ஆகியவற்றைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

கும்பம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 10-ல் அமர்ந்து பலன் தரவுள்ளார். ஓரளவு நன்மையே உண்டா கும். சிலருக்கு வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வேலை அமையும்.

எவருக்கும் அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க நேரிடுவதால், எதை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் ஏற்படும்.

வீண் பழி, விமர்சனங்கள் வரும் என்றாலும் தன்னம்பிக்கையைக் கைவிடமாட்டீர்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். முக்கிய விஷயங் களில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.

குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை  குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடி முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

செலவுகளும், வேலைச்சுமையும் இருந்தபடி இருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 

21.10.18 முதல் 19.12.18 வரை, சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் குருபகவான் செல்வ தால், திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டா கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மொழியினர், மாநிலத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குரு பகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 11-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், திடீர்ப் பயணங்களும், செலவுகளும் துரத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.    

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் உண்டு. கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலைச்சுமை அதிகமாகும். `மற்றவர்கள் செய்த தவறுகளுக்காக நாம் பலிகடா ஆகிவிட்டோமே’ என்று வருத்தப் படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினருக்கு: மறைமுகப் போட்டிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, செலவுக ளையும் அலைச்சல்களையும் தந்தாலும், நிறைவில்   வெற்றிப்பாதையைப் புலப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளை, வியாழக்கிழமையில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; சிரமங்கள் குறையும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்

மீனம்

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். புது வியூகங்களால் வாழ்வில் முன்னேறுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். தந்தையுடன் இருந்து வந்த மோதல் போக்கு மாறும். தந்தைவழி சொத்துகள் சேரும்.

தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.வீடு வாங்கும் விருப்பம் இப்போது நிறைவேறும்.

குரு பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழப்பம், தடுமாற்றம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சிகள் சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை  குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு- வாகன வசதி பெருகும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச்சொல் வரும்.

வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:  உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு, இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு, அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இலக்கியம், ஓவியம் சார்ந்த போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு, திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மூத்த கலைஞர்களால் ஆதாயம் ஏற்படும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வெற்றிபெற வைப்பதுடன், உங்களின் வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம் வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்