Published:Updated:

நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

ரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள். பூமி காரகனான செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனி வளையே வேண்டும் என்று நினைப்பவர்கள்.

நட்சத்திர மாலை எனும் நூல், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலுக்கேற்ப தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன், தன் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள்.

‘தர்மவான், ஐஸ்வர்யன், மான புகழ்க் கோனாம்தாம்பூலநேயன்...’ என்கிறது ஜாதக அலங்காரம். அதாவது, தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்கிறது. அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள், சாஸ்திரங்களைச் சொல்பவராகவும், மனோ தைரியம் உள்ளவராகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவராகவும் திகழ்வார்கள் என்கிறது யவன ஜாதகம்.

‘பரணி, தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பீர்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்துவீர்கள். பொதுவாக இசையில் ஈடுபாடு இருக்கும். நடனம், நாட்டியம் போன்றவற்றில் உங்களையே மறந்துவிடுவீர்கள். வாசனைத் திரவியங்களில் நாட்டமுடையவர்கள். ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவீர்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்குப் பிடித்த சுவைகள். ரசித்துச் சாப்பிடும் நீங்கள், சமைத்தவர்களைப் பாராட்டவும் தயங்கமாட்டீர்கள்.

நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

குழந்தைப் பருவத்தில் சாதுவாக இருந்தாலும் சாமர்த்தியசாலிதான். ஆறாம் அறிவால் சிந்தித்து மனதுக்குத் தோன்றுவதைப் பின்பற்றக் கூடியவர்கள். படிப்பில் திறமைசாலியாக இருப்பீர்கள். ஆனால், மதிப்பெண் அவ்வப்போது குறையும். அதற்குக் காரணம் உங்களிடம் இருக்கும் அதீதமான தன்னம்பிக்கைதான். வணிகவியல், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ், மருத்துவத்தில் பல், கண், காது ஆகிய துறைகளில் மிளிர்வீர்கள்.

சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பீர்கள். எந்தப் பிரச்னையையும் அடிமனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமல் சுலபமாக எடுத்துக்கொள்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பீர்கள். சோகமாக இருப்பவர்கள்கூட உங்களிடம் பத்து நிமிடம் பேசினால், புதுத் தெம்புடன் திரும்பிப் போவார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றிப்போவீர்கள்.

பெரிய பதவியை எளிதாக அடையும் நீங்கள், உங்களுக்குக் கீழே இருப்பவர்களை சாதுர்யமாக வேலை வாங்குவீர்கள். சலுகைகளை வாரி வழங்குவீர்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின், போராடி அதனை உயர்நிலைக்குக் கொண்டு வருவீர்கள்.

உங்களுக்குச் சொந்த வீடு சுலபமாக அமையும். வாகன வசதிக்கு ஒருபோதும் குறைவிருக்காது. 27 வயதுக்குள்ளேயே உங்களில் பலர் செல்வ சுகங்களைச் சேர்த்துவிடுவீர்கள். 34 முதல் 41 வயதுக்குள் சாதனைகள் பல  செய்வீர்கள். வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் உங்களை நாடி வரும். உடல் பருமன், ஹார்மோன், டான்ஸில் தொந்தரவுகள் வந்து நீங்கும். நீண்ட ஆயுள் உண்டு.

முதல் பாதம் (சுக்கிரன் + செவ்வாய் + சூரியன்)

முதல் பாத நவாம்ச அதிபதியாக சூரியன் இருப்பதால், இந்தப் பாதத்தில் பிறந்தவர் எனில் உங்களிடம் ராஜ தந்திரம் அதிகம் இருக்கும். சிவந்த நிறமும் செந்நிற சிகையும் உடையவர்கள். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ரசிப்பதுடன், வாழ்க்கையைச் சுகமாக நடத்துவீர்கள்.

தெரியாத விஷயமாக இருந்தாலும் அறிந்தவரைப் போல அதனுடைய சிறப்பை விளக்கி மற்றவர்களை நம்ப வைத்துவிடும் சாமர்த்தியசாலிகள் நீங்கள். எதிரிகளைக் கண்டு பின்வாங்காமல் நேருக்கு நேர் நின்று பதிலடி கொடுப்பீர்கள். கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்கள் நீங்கள்.

உடன்பிறந்தவர்களுக்காக எதையும் செய்பவர்கள். மல்யுத்தம், குத்துச் சண்டை, கூடைப் பந்து ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கார உணவுகளை விரும்பி உண்பீர்கள். 28, 39 வயது வரை உள்ள காலகட்டத்தில் வாழ்வில் பலவித முன்னேற்றங்கள் உண்டாகும். 59 முதல் 64 வயதுக்குள் இவர்களுடைய ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகி இருக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

பரிகாரம்: உங்கள் நட்சத்திர நாளில் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

இரண்டாம் பாதம் (சுக்கிரன் + செவ்வாய் + புதன்):

நவாம்ச அதிபதியாக புதன் இருப்பதால், நீங்கள் பரணி 2-ம் பாதத்தில் பிறந்தவர் எனில், எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். புத்திக்கூர்மையால் எந்த வேலையையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவர் நீங்கள். ஆனாலும் கொஞ்சம் சோம்பலுடன் இருப்பீர்கள். பண விஷயத்தில் சரியாக நடந்துகொள்வீர்கள்.

உங்களில் சிலருக்குக் குழந்தை பாக்கியம் தாமதமாகக் கிடைக்கும். `மனைவி, மக்கள் ஆகியோர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே’ எனும் எண்ணம் அவ்வப்போது தலைதூக்கும். ஆடம்பரத்தையும், கேளிக்கையையும் மனம் விரும்பினாலும் அவற்றை அனுபவிக்கும்போது ஒரு தயக்கம் இருக்கும். மற்றவர்கள் தன்னைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று நினைப்பீர்கள். சச்சரவு காலத்தில் அமைதி காத்து தக்க நேரத்தில் பதிலடி தருவீர்கள்.

மூச்சுப் பிடிப்பு, நெஞ்சு வலி, சைனஸ் தொந்தரவு ஆகியவை வந்து நீங்கும். கணிதம், புள்ளியியல், கணக்குப் பதிவியல், சுருக்கெழுத்து, எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். 27-33 வயதுக்குள் நினைத்ததை முடித்துவிடுவீர்கள். 41, 42, 46, 50, 51, 55, 59, 60... உங்களின் இந்த வயதுகளில் சாதனைகளைச் செய்வீர்கள்.

பரிகாரம்: அமாவாசை திதி நாளில், சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் அருளும் வீரராகவப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; சகல நன்மைகளும் கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி!

மூன்றாம் பாதம் (சுக்கிரன் + செவ்வாய் + சுக்கிரன்)

சுக்கிரன் அதிபதியாக இருப்பதால், பரணி 3-ம் பாதத்தில் பிறந்த நீங்கள், எதிலும் வெற்றியை விரும்புவீர்கள். தன்னைச் சுற்றியிருப் பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகம் பணம் செலவழிப்பீர்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே மனதில் அவரை எடை போட்டுவிடுவீர்கள். பேச்சு, பிறரை ஈர்க்கும்படி இருக்கும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

எல்லா துறைகளிலும் பரந்த அறிவு படைத்தவர்கள். அதைப் பயன்படுத்திப் பெரிய பதவியில் அமர்வீர்கள். தொழிற்சாலையை நிறுவி பல குடும்பங்களை வாழ வைப்பீர்கள். மனைவியை மந்திரியைப் போல மதிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல சூழ்நிலை அமைத்துத் தருவீர்கள். 30 வயது வரை அதிகமாகச் செலவழித்து விட்டு, அதன் பிறகு சேமிக்கத் தொடங்குவீர்கள். 40 வயதிலிருந்து புகழ்பட வாழ்வீர்கள். உணவு, வாகனம், விளம்பரம், சினிமா, அரசியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். பெற்றோரை அதிகம் நேசிப்பீர்கள்.

பரிகாரம்: மதுரை கள்ளழகரையும், அவர் கோயிலிலேயே அருளும் சுதர்சனரையும் வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.

நான்காம் பாதம்
(சுக்கிரன் + செவ்வாய் + செவ்வாய்)


நவாம்ச அதிபதியாக செவ்வாய் இருப்பதால், இந்தப் பாதத்தில் பிறந்தவர் எனில், உங்களுக்கு மன உறுதி அதிகமாக இருக்கும். விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளமாட்டீர்கள். தவறுகளை தைரியமாகத் தட்டிக்கேட்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் உண்டு.

அடுத்தவர்களின் வளர்ச்சியை உங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். மனைவி, பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். தாங்கள் செய்த உதவிக்கு நண்பர்களோ உறவினர்களோ பதில் உதவி செய்யாவிட்டால் வருத்தப்படுவீர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுவீர்கள். எதற்கும் அஞ்சமாட்டீர்கள். 37 வயதிலிருந்து உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.

சிறுவயதில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் முதுமையில் யாரையும் நம்பமாட்டீர்கள். சிலர் அரசாங்கத்தின் அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். கெமிக்கல், மருந்து, எலெக்ட்ரிகல், கட்டடம் கட்டி விற்றல் ஆகியவற்றில் அதிக லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருகப் பெருமானையும், சிதம்பரம் சுவாமிகளையும் வணங்குதல் நலம்.

- ஜோதிட ரத்னா முனைவர்  கே.பி.வித்யாதரன்

பரணி நட்சத்திரத்தில்...

இசை, ஓவியம், நடனம் ஆகியவற்றைப் பயில, அரங்கேற்றம் செய்ய, மூலிகை பயிரிட, தீர்த்த யாத்திரை தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, ரோஜா உள்ளிட்ட செடிகள் நட இந்த நட்சத்திரம் நன்று.

பரணி நட்சத்திர பரிகார ஹோம மந்திரம்

அப பாப்மானம் பரணீர் ப்பரந்து
தத்யமோ ராஜா பகவான் விசஷ்டாம்
லோகஸ்ய ராஜா மஹதோ மஹான் ஹி
ஸுகந்ந: பந்த்தாமபயங் க்ருணோது
யஸ்மிந் நக்ஷத்ரே யம ஏதி ராஜா
யஸ்மிந் நேனமப்ப்யஷிஞ்சந்த தேவா:
ததஸ்ய சித்ரஹும் ஹவிஷா யஜாம
அப பாப்மானம் பரணீர்ப்பரந்து

நட்சத்திரம் : பரணி

நட்சத்திர தேவதை: சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.

வடிவம்:  முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள்    : லீ, லு, லே, லோ.

ஆளும் உறுப்புகள்: தலை, மூளை, கண் பகுதி.

பார்வை    : கீழ்நோக்கு.

பாகை    : 13.20 - 26.40.

நிறம்    : வெண்மை.

இருப்பிடம்    : கிராமம்.

கணம்    : மனித கணம்.

குணம்    : உக்கிரம்.

பறவை    : காக்கை.

மிருகம்    : ஆண் யானை.

மரம்    : பாலில்லாத நெல்லி.

மலர்    : கருங்குவளை.

நாடி    : மத்திம நாடி.

ஆகுதி    : தேன், எள்.

பஞ்சபூதம்    : பூமி.

நைவேத்யம்    : வெல்ல அப்பம்.

தெய்வம்    :  துர்கையம்மன்.

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 9.

அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை.

அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள்    : செவ்வாய், வெள்ளி.

அதிர்ஷ்ட ரத்தினம்    : வைரம்.

அதிர்ஷ்ட உலோகம்    : வெள்ளி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: துரியோதனன், மகேந்திரவர்ம பல்லவன்.