Published:Updated:

வெளிநாடு செல்லும் யோகம் எப்போது கிடைக்கும்? #Astrology

வெளிநாடு செல்லும் யோகம் எப்போது கிடைக்கும்? #Astrology
வெளிநாடு செல்லும் யோகம் எப்போது கிடைக்கும்? #Astrology

'ந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம். அவருடைய ராசியான கடகம் நீர் ராசி. கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ சந்திர தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச்செல்லும் வாய்ப்பைப் பெறுவார்'' என்கிறார் ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி. சந்திரனால் கிடைக்கும்  பிற யோகங்கள் பற்றியும், சந்திரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றியும் கேட்டோம்.

''ஜோதிடத்தில் லக்னத்தை உயிர் என்றும், ராசியை உடல் என்றும் சொல்லுவார்கள். ராசி என்பது சந்திரன் நின்ற வீட்டைக் குறிக்கும். ஒன்பது கிரகங்களிலும் சந்திரன் ஒருவர் மட்டுமே வேகமான இயக்கம் உடையவர். சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். 'மாதாகாரகன்' என்று ஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்பதால் சந்திரனை 'மனோகாரகன்' என்றும் சொல்வது உண்டு. 
கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால், சந்திரன் வேகமான இயக்கத்தை உடையவர். சனி, தனது சுற்றுப்பாதையை முடிக்க, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், சந்திரன் பூமியை சுமார் இருபத்தியெட்டு நாள்களில் சுற்றி முடித்து விடுகிறார்.  பூமிக்கு அதிக ஒளி தரும் கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடம் இவருடையது.  

மனம் அல்லது புத்தி, அம்மா, காய்கறிகள், பூ, இளம்பெண், கலைகளில் ஆர்வம், நீர் சம்பந்தமானவை, கடல், கப்பல், நெல், அரிசி, பால், வெள்ளி, வெண்கலம், பிரயாணம், கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகள் ஆகியவை சந்திரனின் காரகத்துவம் பெற்றவை.
சந்திரனின் தனிச்சிறப்பு என்று பார்த்தால் மற்ற எட்டு கிரகங்களும் சுபர் அல்லது அசுபர் என நல்ல கிரகமாகவோ அல்லது கெட்ட கிரகமாகவோ இருக்கும் நிலையில், சந்திரன் ஒருவர் மட்டுமே பாதி நாள்கள் சுப கிரகமாகவும், மீதி நாள்கள் பாப கிரகமாகவும் மாறக் கூடியவர்.

பவுர்ணமியன்று சூரியனுக்கு நேரெதிரில் இருந்து சூரியனின் முழு ஒளியையும் வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும் நிலையில் முழுச் சுபராகவும், அமாவாசையை நோக்கி ஒளி குறைந்து செல்லும்போது சிறிது சிறிதாக ஒளி குறையும் நிலையில் பாபராகத் துவங்கி ஒளியற்ற அமாவாசையன்று முழு பாபராகவும் கருதப்படுவார்.

சந்திரனால் பெறப்படும் முக்கிய யோகமாக 'அதியோகம்'  சொல்லப்படுகிறது. சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் இருக்கவேண்டும். இது ஒரு சிறப்பான யோகம் ஆகும். 

இதன் உண்மையான சூட்சுமம் என்னவென்றால், ஏற்கெனவே நன்மைகளைத் தரக் கூடிய சுப கிரகங்கள் வளர்பிறைச் சந்திரனுக்கு எதிரில் அமர்ந்து, அதாவது அவருக்கு நேர் எதிரான ஏழாம் வீட்டில் இருந்து சந்திர ஒளியைக் கூடுதலாகப் பெறுவதால் ஜாதகருக்கு பூரண நன்மையைச் செய்வார்கள். ஜாதகர் உயர் பதவி, சொகுசான வீடு, பணியாளர்கள் சூழ வாழ்வாங்கு வாழ்வார் என்பதாகும். 
பன்னிரண்டு லக்னங்களில் சந்திரனின் கடகமே மிகச் சிறப்பான முதன்மை லக்னமாக நமது மூலநூல்களில் சொல்லப்படுகிறது. அந்த ராசி குருவின் உச்ச வீடாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஒருவர் பிறந்தது முதல் அவர் இறக்கும் வரையிலான, வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் அவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்திலும், அதனையடுத்து அவர் இருக்கப் போகும் நட்சத்திரங்களின் தொடர்ச்சியிலுமே அமைகிறது. 

சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம். அவருடைய ராசியான கடகம் நீர் ராசி. கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ சந்திர தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்.

கடல் சம்பந்தப்பட்ட இடங்களிலும், ஆற்றோரங்களிலும், நீர் நிலைகளிலும், கப்பல் மற்றும் துறைமுகங்களிலும் ஒருவரை வேலை செய்ய வைப்பவரும் சந்திரன்தான். ஜாதகத்தில் சந்திரன் பத்தாமிடத்துக்கு அதிபதியாகியோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்புகொண்டிருந்தாலோ அவருக்கு திரவப் பொருள்கள் மூலமான தொழில் அமையும். சந்திரன்  ஜாதகத்தில் வலுபெற்றதற்கு ஏற்றார் போல் ஜாதகர் கூல் ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், பால் வியாபாரம் போன்ற தொழில்களைச் செய்வார்'' என்றார்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தோஷம் ஏற்படுத்தும் நிலையில் இருந்தால், ஏற்படக்கூடிய பாதிப்புகள்  மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்கள் குறித்தும் சில விவரங்களைக் கூறினார். 

சந்திர தோஷ நிவர்த்திக்கு உரிய பரிகாரத் திருத்தலங்கள்:


சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டி நற்பலன்களை அடைய முடியும். 

கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் என்ற ஊரில் இருக்கும் திருக்கோயில் சந்திர ஸ்தலம் எனப் புகழ் பெற்றது. இந்த ஸ்தலத்தில் சந்திரனை லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ கொண்டவர் தன்னுடைய ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு குறைந்தது ஒரு மணி நேரம் கோயிலுக்குள் இருப்பது சந்திர வலுவைக் கூட்டும். 

சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் சோமநாதீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடலாம். திங்கள்கிழமை செல்வது சிறப்பு தரும். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதும் சந்திரனுக்கு உரிய சிறந்த பரிகாரமாக அமையும்.

ஏழுமலைகளும் குனிந்து நிற்க தானுயர்ந்து நிற்கும் வேங்கடமுடையான் வீற்றிருக்கும்  புனிதத் தலமான திருப்பதியும் சந்திரனின் வலுவைக் கூட்டும் திருத்தலம்தான்.    
 

அடுத்த கட்டுரைக்கு