ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!

செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
News
செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!

‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி

திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும்போது, பத்துப் பொருத்தங்களுடன், வேறு ஏதேனும் தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் பார்ப்பது வழக்கம். குறிப்பாகச் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால், அவர்களது திருமணமே கேள்விக் குறியாகிவிடுகிறது. செவ்வாய் தோஷம் பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும், செவ்வாய் தோஷத்துக்குக் கூறப்பட்டுள்ள விதிவிலக்குகள் பற்றியும் பார்ப்போம்.

`வினைப்பயனே தோஷங்களுக்குக் காரணம்’ என்பார்கள் பெரியோர்கள். அவ்வகையில், மற்றவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது, சகோதரர்களுக்குத் துரோகம் செய்வது, சுயநலத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டுவது போன்ற காரணங்களால் ஒருவருக்குச் செவ்வாய் தோஷம் ஏற்படும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!

செவ்வாய் தோஷத்தை எப்படி அறிவது?

ஒருவரது லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகமாகும். பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பது தோஷம்தான். ஆனால், மேற்கண்ட  இடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் உச்ச வீடான மகரமாக இருந்தால் தோஷம் இல்லை.

மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோரில் ஒருவர் சேர்ந்திருந்தாலும், பார்த்தாலும் தோஷமில்லை. ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் தோஷத்துக்கு வேறுசில விலக்குகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

கடகம், சிம்மம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய் இருக்கக்கூடிய இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருப்பவர்களுக்கும், செவ்வாய் 4-ல் இருந்து அந்த ராசி மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் வீட்டில் செவ்வாய் இருந்து, அந்த இடம் கடகம் அல்லது மகரமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!

அதேபோல் செவ்வாய் அமர்ந்திருக்கும் 8-ம் இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்தாலும், அவர்களுக்குச் செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்.

ஆகவே, ஜாதகத்தை மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுக்காமல், தக்க ஜோதிடரைக் கலந்து ஆலோசித்த பிறகே செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்கவேண்டும்.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது, இருவருக்கும் இந்தத் தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று பல கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், பொதுவாகத் தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதே சரி.

செவ்வாய்தோறும் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுவதும், சஷ்டிக் கவசம் பாராயணம் செய்வதும் செவ்வாய் தோஷத்துக்கு மிகச் சிறந்த பரிகாரமாகும். கோயில்களில் வில்வம், துளசி நட்டுப் பராமரிக்கச் செய்வது, முருகப்பெருமானுக்கு அபிஷேக திரவியங்கள் சமர்ப்பிப்பது ஆகியவையும் செவ்வாய் தோஷத்துக்குச் சிறந்த பரிகாரங்களாகும்.