ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!

நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!

நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!

ருபத்தேழு நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை. இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அரசாங்கப் பதவிகளுக்கும் அதிகாரத்துக்கும் உரிய கிரகமான சூரியனின் அம்சத்தில் பிறந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆகிய பாதங்களைக் கட்டடக் கலைக்கும் வாகனங்களுக்கும் அதிபதியான சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துகிறார்.

நட்சத்திர மாலை எனும் நூல், ‘வார்த்தை அது உடையனாகும், வழக்கறிந்து உரைக்க வல்லன், குணமுடன் கல்வி கற்கும்...’ என்று கூறுகிறது. அதாவது நல்லது, கெட்டது அறிந்து நியாயத்தை நிலைநாட்டும் நீதிமான்களாகவும், குணவான்களாகவும், கல்வி மீது விருப்பம் உள்ளவர்களாகவும் விளங்குவீர்கள் என்கிறது. ‘தேஜஸ்வி...’ என்று யவன ஜாதகப் பாடல் கூறுகிறது. ஆகவே பார்ப்பதற்கு அழகாக, கம்பீரமாக இருப்பீர்கள். உங்களை `மிகவும் பிரசித்திபெற்றவர்கள்’ என்கிறது பிருகத் ஜாதகம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் முதலாம் பாதம் மேஷ ராசியிலும், 2, 3, 4-ம் பாதங்கள் ரிஷப ராசியிலும் வரும். மொத்தத்தில் கார்த்திகை நட்சத்திரக்காரர்களான நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்கள். சற்று உயரமும், நடுத்தர உடல்வாகும், பரந்த நெற்றியும் கொண்டவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். தசை பலத்தைவிட எலும்பு பலம் உங்களுக்கு அதிகம்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள். சூடான உணவில் மட்டுமே விருப்பம் இருக்கும். பசி பொறுக்கமாட்டீர்கள்.

நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!

பள்ளிப் பருவத்தில் தற்காப்புக் கலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். காரசாரமான விவாதங்களில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர், மருத்துவத் தொழிலிலும் பொது வாழ்விலும் சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. சித்தர்கள் மற்றும் அரசர்களில் சிலர், மேஷ ராசியில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

உங்களுக்கு முழு சுதந்திரமுள்ள இடத்தில் வேலை கிடைக்கும். மற்றவர்கள் உங்களைக் கட்டுப்படுத்தினாலோ கட்டாயப் படுத்தினாலோ உத்தியோகத்தை உடனே உதறித் தள்ளிவிடுவீர்கள். அதனால் உங்களில் பலர், மத்திய வயதில் நிறுவனங்களை நிறுவி நடத்துவீர்கள். உணவு, கெமிக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். காதல் விவகாரத்தில் ஒதுங்கியே நிற்பீர்கள். திருமண வாழ்க்கையிலோ கறாராக இருப்பீர்கள். பலர், மனைவியிடம்கூட விட்டுக் கொடுத்துப் போகமாட்டார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அழுத்தமான, ஆழமான, கொள்கை உடையவர்களாக இருப்பீர்கள். பெரிய கனவுடன் பிள்ளைகளை வளர்ப்பீர்கள். ஆடம்பரமாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பீர்கள்.

சக்திக்கு முடிந்ததை செய்து முடிப்பதில் திறமையானவர் நீங்கள். தெய்வ பக்தி உண்டு என்றாலும், தாய், தாய் நாடு, தாய் மொழியின் மீது அதிகப் பாசம் இருக்கும். 33 வயது முதல் உங்களுடைய வாழ்வில் ஏற்றம் உண்டாகும். முன்பின் சம்பந்தமில்லாதவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். மலேரியா, இதய நோய், ஒற்றைத் தலைவலி ஆகியவை வந்து நீங்கும். எனினும், நீண்ட வாழ்வு வாழ்வீர்கள்.

முதல் பாதம் (சூரியன் + செவ்வாய் + குரு)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதியாக குரு இருப்பதால், இதில் பிறந்தவர்கள் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். நேர் வழியில் பணம் சம்பாதிப்பார்கள். சமயப் பற்று அதிகம் இருக்கும். அரசாங்கத்தில் அதிகாரப் பதவி கிடைக்கும். ராசியின் அதிபதியாகச் செவ்வாய் இருப்பதால், நியாயத்துக்காகப் போராடும் முதல் ஆளாக இருப்பார்கள்.

வீடு, மனை, தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வார்கள்.  எந்தக் காரியத்தையும் தள்ளிப்போட மாட்டார்கள். இவர்களுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்களுடன் பணியாற்றும் அலுவலக ஊழியர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவஸ்தைப்படுவார்கள். குழந்தைப் பருவம் துள்ளலும் துடுக்குத்தனமாகவும் கடந்து போகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் இவர்கள் தங்கள் முத்திரையைப் பதிக்கும் வண்ணம் சாதனையை நிகழ்த்தாமல் ஓயமாட்டார்கள். யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் அதிகப் பாசமும், நேசமும் கொண்டு அவர்களுக்காக எந்த ஒரு தியாகமும் செய்வார்கள். சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், பந்தி பரிமாறுவதிலிருந்து பல வேலைகளை ஆர்வமாக இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வார்கள். 19 வயதுக்குள்ளேயே ஏதேனும் சாதிப்பார்கள். 39 வயதிலிருந்து தொடர் வெற்றிதான்.

பரிகாரம்: பழநி முருகனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

இரண்டாம் பாதம் (சூரியன் + சுக்கிரன் + சனி)

ராசிநாதனாக சுக்கிரன் ஆள்வதால் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பரந்த மனதுடன் பழகுவார்கள். எல்லோரையும் எளிதாக நம்புவார்கள்; அதனால் ஏமாறவும்  செய்வார்கள். சிறு வயதில் பிறரிடமிருந்து பெற்ற சிறிய உதவியையும் மறக்காமல், பெரியதாகப் பதிலுதவி செய்வார்கள். தரமான உணவு, ஆடம்பர ஆடை, ஆபரணங்களுக்காகப் பெருந்தொகையைச் செலவிட சளைக்கமாட்டார்கள்.

திடீர் திடீரென வித்தியாசமான பரிசுகளைத் தந்து, குடும்பத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். அனுசரித்துப் போகக்கூடிய குணம் கொண்டவர்கள். கோபம் வந்துவிட்டால், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டித் தீர்ப்பார்கள். நளினமாகப் பேசி காரியம் சாதிப்பார்கள். இயல்பிலேயே சுகவாசியானவர்கள்; ஆதலால் எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கமாட்டார்கள். இதனால் எவ்வளவு நேர்மையாக ஒரு பணியைச் செய்து முடித்தாலும் சில வேளைகளில் அவப் பெயரே மிஞ்சும். நண்பர்கள் ஏராளமாக இருப்பார்கள். 21 வயதில் பல திருப்பங்கள் உண்டாகும். 37 வயதிலிருந்து பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். 46 வயதில் பெரிய பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்: சென்னைக்கு மேற்கேயுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அருளும் ஊர்த்துவ தாண்டேஸ்வரரைப் பிரதோஷ நாளில் சென்று வணங்குதல் நன்று.

நட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை!

மூன்றாம் பாதம் (சூரியன் + சுக்கிரன் + சனி )

நவாம்ச அதிபதியாக சனி இருப்பதால், இதில் பிறந்தவர்கள் நீதிமானாக இருப்பார்கள். உலகமே பழித்தாலும் மனசாட்சி சொல்வதை மட்டும்தான் செய்வார்கள். அந்தஸ்து பார்த்து பழகுவது இவர்களிடம் கிடையாது. சமூகத்தைச் சொல்லி இவர்களைக் கட்டிப்போட முடியாது.

வேடிக்கை, விளையாட்டில் இவர்களுடைய இளமை கழியும். ஆகவே புத்திக்கூர்மை இருந்தும் படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களால் கூடா பழக்கவழக்கங்களுக்கு ஆளாக நேரும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அதிரடியாக எதையாவது செய்துவிட்டுப் பிறகு அமைதியாக வேதனைப்படுவார்கள். அந்தஸ்துள்ள பதவிக்காக போராடுவார்கள். உடல் வலிமை மிக்கவர்கள். ஆகவே குத்துச் சண்டை, கராத்தே, கால்பந்து போன்ற விளையாட்டுகள் பிடிக்கும். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். மனைவி, மக்களுடன் தண்ணீரும் தாமரை இலையுமாக நடந்துகொள்வார்கள். வயதானவர், ஆன்மிகவாதி ஆகியோரைக் கண்டால் அடிபணிவார்கள். பண விஷயத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. 30 முதல் 36 வயது வரையிலும், 40, 41, 42 வயதுகளிலும் 56 வயதிலிருந்தும் ஏற்றம் உண்டு.

பரிகாரம்: ஏகாதசி திதிநாளில் திருவரங்கனை வழிபட்டு வருவது நலம்.

நான்காம் பாதம் (சூரியன் + சுக்கிரன் + குரு)

குருவின் ஆதிக்கம் இருப்பதால் இதில் பிறந்தவர்கள் பல துறைகளில் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். பலரும் போற்றிப் பாராட்டும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்கள். கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள்.

இரக்கக் குணம் கொண்டவர்கள் . கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கருமமே கண்ணாக இருப்பார்கள். வம்புச் சண்டை, வீண் சச்சரவு ஆகியவற்றில் சிறிதும் ஆர்வம் காட்டமாட்டார்கள். பெற்றோரின் வார்த்தை இவர்களுக்கு வேத வாக்கு. படிப்பில் முதலிடத்தை எட்டிப் பிடிப்பார்கள். வங்கி, கல்லூரி, கருவூலம், நீதிமன்றம் இவற்றில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். 18 வயதிலிருந்தே குடும்பப் பாரத்தைச் சுமப்பார்கள். உடன்பிறந்தவர்களால் திருமணம் தள்ளிப் போகும். 37 வயதிலிருந்து வாழ்வில் தன்னிறைவு பெறுவார்கள். ஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். ஊருக்காக இலவசப் பாடசாலை அமைப்பது, கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது ஆகியவற்றைச் செய்வார்கள்.

பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் முருகனை வியாழக்கிழமையில் சென்று வணங்கி வருவதால், நன்மைகள் பெருகும்.

- அடுத்த இதழில் ரோகிணி நட்சத்திரம்...

- ஜோதிட ரத்னா முனைவர்  கே.பி.வித்யாதரன்

கார்த்திகை நட்சத்திரத்தில்...

சிலம்பாட்டம் பயில, துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட, கடன் பைசல் செய்ய, சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட, பழைய வாகனம் விற்க ஆகிய காரியங்களுக்கு கார்த்திகை நட்சத்திரம் உகந்தது.

கார்த்திகை நட்சத்திர பரிகார ஹோம மந்திரம்:


அக்னிர் ந : பாதுக்ருத்திகா நக்ஷத்ரந்
தேவமிந்த்ரியம் இதமாஸாம்விசக்ஷணம்
ஹவிராஸஞ்ஜுஹோதன யஸ்யபாந்திரச்மயோயஸ்யகேதவ :
யஸ்யேமா விச்வா புவனானி ஸர்வா
ஸக்ருத்திகாபிரபிஸம்வஸாந : அக்னிர்நோ
தேவ: ஸுவிதே ததாது.

நட்சத்திர தேவதை    : இரண்டு முகங்களும் நான்கு கரங்களும், சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்.

வடிவம்         : தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய - ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள்         : ஆ, இ, ஊ, ஏ.

ஆளும் உறுப்புகள்     : தலை, கண்கள், முகம், கழுத்து, தாடை.

பார்வை         : கீழ்நோக்கு.

பாகை         : 26.40 - 40.00.

நிறம்         : சிவப்பு.

இருப்பிடம்         : சூனியப் பிரதேசம்.

கணம்         : ராட்சஸ கணம்.

குணம்         : மிச்ரம்.

பறவை         : மயில்.

மிருகம்         : பெண் ஆடு.

மரம்         : பாலுள்ள அத்தி மரம்.

மலர்         : மல்லிகை.

நாடி         : வாம பார்சுவ நாடி.

ஆகுதி         : அன்னம்.

பஞ்ச பூதம்        : நிலம்

நைவேத்தியம்     : தயிர் சாதம்.

தெய்வம்         : முருகன்.

அதிர்ஷ்ட எண்கள்     : 1, 6, 9.

அதிர்ஷ்ட நிறங்கள்     : மெருன், வெளிர் சாம்பல்.

அதிர்ஷ்ட திசை    : கிழக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : ஞாயிறு, வியாழன்.

அதிர்ஷ்ட ரத்தினம்     : ஸ்டார் ரூபி.

அதிர்ஷ்ட உலோகம்     : தங்கம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

முருகப்பெருமான், காச்யப மகரிஷி, திருமங்கையாழ்வார், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஆசார்ய வினோபாஜி, குருநானக், திலகர்.

பிறந்த திதிநாளும் நீங்களும்...

நாள், நட்சத்திரங்கள் மட்டுமின்றி நாம் பிறந்த திதிகளுக்கு ஏற்பவும் பொதுவான பலன்கள் மற்றும் நம்முடைய குணநலன்களை விவரிக்கின்றன ஜோதிட நூல்கள்.

பிரதமை    :     நல்ல மனைவி அமைவாள்.

துவிதியை    :     உண்மை பேசுபவர், அனைவராலும் விரும்பப்படுபவர், ஆயுதப் பயிற்சியில் வல்லவர்.

திருதியை    :     மற்றவர்களுக்குத் துன்பம் தருவதில் வல்லவர்.

சதுர்த்தி    :     பேராசை உள்ளவர், ரகசியம் மிகுந்தவர்.

பஞ்சமி    :     அறிவாளிகள், ஆயுள் பலம் மிகுந்தவர்.

சஷ்டி    :     ஆண் குழந்தைகள் அதிகம் உண்டு. உலக இன்பங்களில் பற்றுள்ளவர்.

சப்தமி    :     நற்குணம், செல்வம் மிக்கவர், கற்றோரையும் மூத்தோரையும் மதிப்பவர்.

அஷ்டமி    :     வாழ்க்கைத் துணைவருக்கு உண்மையாக இருப்பார்கள், பேச்சாற்றல் கொண்டவர்.

நவமி    :     தைரியமும், பாசமும், கலையார்வமும் மிக்கவர், எதிரிகளுக்குப் பயங்கரமானவர்.

தசமி    :     வியாபாரத்தில் வெற்றி பெறுபவர், விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுந்தவர்.

ஏகாதசி    :     கொள்கை, நேர்மை இல்லாதவர். பொறாமை மிகுந்திருக்கும்.

துவாதசி    :     சொத்துகளும் எதிரிகளும் அதிகம் உண்டு. பெண்கள் மத்தியில் புகழோடு திகழ்வார்.

திரயோதசி    :     தூய உள்ளம், உடல் நலம் கொண்டவர். உறவினர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்.

சதுர்த்தசி    :     அழகும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர். தமக்கென தனிக் கொள்கையுடன் வாழ்வார்.

பெளர்ணமி    :     நீண்ட கேசம் உண்டு. முயற்சிகளில் வெற்றி பெறுபவர், ஆயுள் பலம் மிகுந்தவர்.

அமாவாசை    :     நல்ல வாழ்க்கையைப் பெற்றவர், எதிரிகளுக்குப் பயங்கரமானவர்.