ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?

? காதல் திருமணத்தில் இணைந்த கணவன், மனைவி இருவருக்கும் ஒரே நட்சத்திரம். இப்படியான அமைப்பு அவர்களது வாழ்வைப் பாதிக்குமா? கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருக்கக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- வே. நடராசன், மயிலாடுதுறை

காதல் திருமணத்தில் இணைந்த தம்பதி ஒரே நட்சத்திரமாக இருந்தால், நட்சத்திரம் எது என்று பார்த்துதான் அது அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்குமா, இல்லையா என்பதைக் கூற முடியும். 27 நட்சத்திரங்களில் 12 நட்சத்திரங்கள் பொருந்திப்போகும். அந்த நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம். அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் பொதுவாக ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை. ஆனாலும், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே என்று சிலர் கேட்கலாம். காதல் திருமணம் செய்துகொண்டாலும்கூட, மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

கல்யாணம் நடக்கும் நேரம் நல்ல முகூர்த்தமாக இருப்பது, அந்தணர்களை அழைத்து வாழ்த்து பெறுவது, பாணிக்கிரகண முகூர்த்தம் நல்ல நேரமாக இருப்பது, பெண்ணின் ருது ஜாதகம் நன்றாக இருப்பது என்று பல காரணங்களால் காதல் திருமணமும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணத்துக்கு பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம். இந்தப் பத்து பொருத்தங்களுடன் மேலும் ஐந்து பொருத்தங்களும் உள்ளன. ரிக்க்ஷ யோனி, ஜாதிப் பொருத்தம், பட்சி பொருத்தம், கோத்திர பொருத்தம், பூத பொருத்தம் என்பவையே அவை. இந்தப் பொருத்தங்கள் இருந்தால்கூட, காதல் திருமணம் மகிழ்ச்சி தருவதாக அமையும். இவை அனைத்தையும்விட மனப்பொருத்தமே மிக முக்கியமானது.

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?

?எனக்குப் பித்ரு தோஷம் இருப்பதாகச் சொல்கிறார் ஜோதிடர் ஒருவர். இந்தத் தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும். வீட்டிலேயே கடைப்பிடிக்கக்கூடிய வழிபாடுகள் ஏதேனும் உண்டா?

பா. ஜீவரத்தினம் - மைசூர்

தாய் தந்தையை அன்புடன் கவனித்துக் கொள்ளாதவர்கள், முன்னோர் வழிபாட்டைச் செய்யாமல் விட்டவர்கள் என்று ஒருவருக்கு பித்ரு தோஷம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவர் ராகு காலத்தில் பிறப்பது, சுபகிரகங்கள் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் மறைந்திருப்பது, சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருப்பது, மாந்தி பாதக ஸ்தானத்தில் இருப்பது ஆகிய அமைப்புகளின் மூலம் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், குடும்பத்தில் சதா சண்டை சச்சரவு, குழந்தை பாக்கியம் பெறுவதில் தடை, குழந்தை இருந்தாலும் போதிய மனவளர்ச்சி இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது, நல்ல வேலை அமைவதில் தடை, கடன் தொல்லை என்று பல கஷ்டங்கள் ஏற்படும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அத்துடன், வீட்டிலோ அல்லது கோயில்களிலோ துளசி, வில்வம் வளர்க்கலாம். அந்தணர்களுக்கு தானம் கொடுக்கலாம். வசதி இருப்பவர்கள் கோயில்களுக்குப் பசுவும் கன்றும் தானம் கொடுக்கலாம். லட்சுமிநாராயண விக்கிரகம் தானம் கொடுக்கலாம். இவை எதுவும் செய்ய முடியாதவர்கள், தினமும் காகத்துக்கு ஒரு பிடி அன்னம் வைக்கலாம். அவரவர் வசதியைப் பொறுத்து இவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். அப்போதுதான் வரும் சந்ததியினரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

? ஜாதகம் இல்லாதபோது பிரச்னம் மூலம் எதிர்கால பலன்களை அறியமுடியுமா? கோயில்கள் குறித்த விஷயத்துக்கு மட்டுமே பிரச்னம் பார்க்கலாம் என்கிறார்கள் சிலர். நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

- எஸ்.எம். பார்த்தசாரதி, திருவாரூர்

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?


பிரச்னம் பார்ப்பதில் பல வகைகள் உள்ளன. கோயில்களில் தெய்வ சக்தி இருக்கிறதா என்பது குறித்துத் தெரிந்துகொள்வதற்கு பார்க்கும் பிரச்னம் தேவ பிரச்னம் ஆகும்.

இது தவிர, ஓர் இடத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கூப பிரச்னம், அந்த வருடத்துக்கு உரிய மழைப்பொழிவைப் பற்றித் தெரிந்துகொள்ள வர்ஷ பிரச்னம், தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள நஷ்ட பிரச்னம், குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள அஷ்டமங்கல்ய பிரச்னம் என்று 18 வகையான பிரச்னங்கள் உள்ளன. யாருக்கு என்ன பிரச்சினையோ அதற்கேற்ப உரிய பிரச்னம் மூலம் தீர்வு காணலாம்.

?ஒவ்வொருவரும்  அவரவர்க்குரிய நட்சத்திர தேவதையை தினமும் வழிபட்டால் நல்லது என்கிறார் எங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவர். நட்சத்திரங்களுக்கான வழிபாட்டுச் சுலோகங்கள் உண்டா. நான் திருவோண நட்சத்திரம். இந்த நட்சத்திர தேவதையை எப்படி வழிபடுவது?


-கு. லலிதகுமாரி, சென்னை - 97


ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய தேவதை குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அசுவினி நட்சத்திரத்துக்கு அசுவினி தேவர்கள், பரணி நட்சத்திரத்துக்கு யமன், கிருத்திகை நட்சத்திரத்துக்கு அக்னி, ரோகிணி நட்சத்திரத்துக்குப் பிரம்மா என்ற முறையில், திருவோண நட்சத்திரத்தின் தேவதை மகாவிஷ்ணு. எனவே, திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகா விஷ்ணுவுக்கு உரிய மந்திரத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது நன்மை தரும். விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்யலாம்.

?எனது ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் இருப்பதாகச் சொல்கிறார்கள். காளசர்ப்ப தோஷம் என்றால் என்ன, அதற்குரிய பரிகாரங்கள் என்னென்ன?

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?


- பெ. சிவப்பிரகாசம், ராமநாதபுரம்

ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவில் மற்ற கிரகங்கள் அமைந்திருப்பதே காளசர்ப்ப தோஷம். இதிலேயே `காளசர்ப்ப யோகம்’ என்ற அமைப்பும் உண்டு. கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்திருப்பது காளசர்ப்ப யோகம். இந்த அமைப்பைப் பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைவர். ஜவஹர்லால் நேரு, ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோருக்கு இந்த அமைப்பு இருந்தது.

காளசர்ப்ப தோஷத்தில்... அனந்த காளசர்ப்ப தோஷம், வாசுகி காளசர்ப்ப தோஷம், சங்கசூடன் காளசர்ப்ப தோஷம், குளிகன் காளசர்ப்ப தோஷம் என்று 12 நாகங்களின் பெயரில் காளசர்ப்ப தோஷங்கள் உள்ளன. இவற்றுள் எந்த காளசர்ப்ப தோஷம் என்பதைத் தக்க ஜோதிடர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு, உரியப் பரிகாரம் செய்யவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

அன்பார்ந்த வாசகர்களே!

ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, பெயரியல் முதலானவை குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் பொதுவான கேள்வி- பதில்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும். மேலும், தனிப்பட்ட ஜாதகங்களுக்கான பலாபலன்கள், தோஷ பரிகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் பிரத்யேகமாக பதிலளிக்கவுள்ளார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் (அவை இதழில் இடம்பெறாது).

தனிப்பட்ட முறையில் ஜோதிட விளக்கங்கள் பெற விரும்பும் வாசகர்கள், கீழ்க்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்து தனியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும் (நகல் எடுத்தும் அனுப்பலாம்) படிவத்துடன் ஜாதக நகலையும் இணைத்து அனுப்பவும். உங்களின் தொலைபேசி எண் மற்றும் இ.மெயில் முகவரி விவரங்களையும் இணைப்பது மிக அவசியம். தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கான பதில்கள் - விளக்கங்கள், சம்பந்தப்பட்ட வாசகருக்கு தொலைபேசி அல்லது இ.மெயில் மூலம் அளிக்கப்படும். கேள்விகள் அனுப்பப்பட்டு 15 நாள்களுக்குள் பதில் கிடைக்கவில்லை எனில், தங்களின் கேள்விகள் தேர்வாகவில்லை என அறியவும். கேள்விகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

ப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா?