Published:Updated:

மேஷ ராசிக்காரர்களே... இது உங்களுக்கான ஆண்டு - 2019 ஆண்டு பலன்!

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்குமாம்!

மேஷ ராசிக்காரர்களே... இது உங்களுக்கான ஆண்டு - 2019 ஆண்டு பலன்!
மேஷ ராசிக்காரர்களே... இது உங்களுக்கான ஆண்டு - 2019 ஆண்டு பலன்!

மேஷ ராசி, கால புருஷ தத்துவத்தில் முதலாவது ராசியாக வருவதால், இந்த ராசியில் பிறந்தவர்கள், `எதிலும் மற்றவர்களைவிட  முன்னணியில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று தீவிரமாக நினைப்பார்கள். அதனால்தான் எதையும் முதல் ஆளாக முடிவெடுத்து செயலில் இறங்கிவிடுவார்கள். மேஷ ராசிக்காரர்களுக்குக் கடந்த 2018-ம் ஆண்டு ஓரளவு பரவாயில்லை என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால், இந்த 2019-ம் ஆண்டு பல சாதனைகளைப் புரியும்விதமாக அமையும். 

உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு பகவான் மறைந்திருக்கிறார். அதே நேரத்தில் மார்ச் மாதம் 13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரமாகியும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பல நடக்கும். 

வி.ஐ.பி-க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உங்களைப் பெருமைப்படுத்துவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைப் பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். இழந்த சொத்துகளையெல்லாம் மீண்டும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

12.2.2019 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவும் 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் வேலைப்பளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் கொள்வது நல்லது. 

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்வதால், தாயார் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வீடு மனை வாங்குவீர்கள். இவ்வளவு நாளாக மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும்.

நீண்ட நாள்களாகத் திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல இடத்தில் வரன் அமையும். இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்களான நவம்பர், டிசம்பரில் குருபகவான் 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் பல நல்ல நிகழ்ச்சிகள் அப்போது நடைபெறும்.   

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும், அதற்கேற்ப செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தந்தையுடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை பற்று வரவுகளில் சற்று கடினமான போக்கே நிலவும். யாரையும் நம்பி அதிகம் கடன் கொடுக்க வேண்டாம். வசூல் செய்வது சிரமமாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்றுமதி இறக்குமதி, இரும்பு சாமான்கள், உணவு, துணிமணி வகைகள் ஆகியவை நல்ல லாபம் தரும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். ஒரு சிலர் விரும்பிய இடத்துக்கு மாற்றலாகிச் செல்வார்கள்.

மாணவர்கள் படிப்பில் கூடுதலாகக் கவனம் செலுத்துவது நல்லது. வகுப்பில் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்குப் பயிற்சியும் முயற்சியும் அவசியம்.

கன்னிப் பெண்களுக்கு இந்த ஆண்டு சாதனை புரியும் ஆண்டாக அமையும். இல்லத்தரசிகள் குழந்தைகளுக்காகப் புதிய சேமிப்பு ஒன்றைத் தொடங்குவார்கள். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கும். பயிர் சாகுபடி சிறப்பாக இருக்கும். பக்கத்து வயல்காரர்களிடம் இருந்த பிணக்குகள் தீரும்.

இந்தப் புத்தாண்டு மன உறுதியையும் ஆரோக்கியத்தையும் பணப்புழக்கத்தையும் தருவதாக அமையும். 

மேலும் நன்மைகளைப்பெற, கோவை மாவட்டம், தாளக்கரை தண்டுக்காரன் பாளையம் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைச் சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும்.