Published:Updated:

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

Published:Updated:
கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

? அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்பதன் பின்னணியில், ஏதேனும் தத்துவம் இருக்கிறதா?

-எஸ்.கண்ணன், திருச்சி - 2


பொதுவாக முன்னோருக்கான வழிபாடுகளைச் செய்யும் `சிராத்தம்’ போன்ற தினங்களில் நமது வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. அதேபோல், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த  அமாவாசை தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

முன்னோரை வழிபட்டபிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம், குறிப்பிட்ட தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்ப்பது மரபு.

கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?

? அமாவாசையன்று வெண்பூசணிக்காயை உடைக்கிறார்கள். இதன் பின்னணியில் ஏதேனும் புராணச் சம்பவம் இருக்கிறதா?

-கே.குமரேசன், சென்னை


எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றுக்கு திருஷ்டி தோஷங்களை ஆகர்ஷித்து, நமக்கு நன்மையை அளிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. காந்தத்தின் அருகில் இரும்பு இருந்தால், அந்து அந்தக் காந்தத்துடன் ஒட்டிக்கொள்ளும். ஆனால், விலையுயர்ந்த தங்கத்தினால் இரும்பை ஆகர்ஷிக்க முடியாது.

பூசணிக்காய் உடைப்பதும் அப்படியே!  நம் முன்னோர், ஆப்பிள் பழத்தையோ அல்லது சீதா பழத்தையோ வைத்து திருஷ்டி கழிக்கச் சொல்லவில்லை. இன்னின்ன காரியத்துக்கு இன்னின்னவற்றை வைத்துச் செய்தால்தான் முடியும் என்ற சூட்சுமத்தை அறிந்து, அதன்படி செயல்பட்டு பயனடைந்தார்கள்.

பொதுவாகவே, பலியிடுவதன் பொருட்டு வெண்பூசணிக்காயை பூஜைகளில் பயன்படுத்துவது மரபு. இதுகுறித்த புராணச் சம்பவம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இருந்தால் பிறகு தெரிவிக்கிறேன்.

? சிவ பக்தர்கள் திருநீறு தரித்துக்கொள்ளும்போது, சொல்லக்கூடிய மந்திரங்கள் உண்டா?

- எஸ்.சிவசைலம், கல்லிடைக்குறிச்சி


ஆசார்யரிடம் தீட்சை பெற்றுக்கொண்டவர்கள், விபூதி தரிக்கும்போது, ஒவ்வோர் இடத்திலும் அதற்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வைத்துக்கொள்வதே வழக்கம். இதுபற்றி குருவை அணுகி அறிந்துகொள்வதே சரியானது.

பொதுவாக தீட்சை பெறாதவர்கள் திருநீறு தரிக்கும்போது, ‘சிவசிவ’ என்று கூறியபடி, பரமனை நினைத்து வணங்கி திருநீறு அணியலாம். தீட்சை பெற்றவர்கள், பஞ்சப்ரம்ம ஷடங்க மந்திரங்களை தீட்சையின் வாயிலாகப் பெற்று, குருவின் வழிகாட்டுதலுடன் அவற்றைக் கூறியபடி, அனைத்து ஐஸ்வர்யங்களின் இருப்பிடமான பஸ்மதாரணத்தை மேற்கொள்ளலாம்.

சிவதீட்சை என்பது, மனிதராகப் பிறந்த அனைவரும் கண்டிப்பாகப் பெற்றுச் சிவனை அடைந்து ஆனந்தம் அடைவதற்கு உரிய வழியாகும். பல மடங்கள், மக்களுக்குச் சிறந்த முறையில் தீட்சை அளித்து, நல்வழியில் அழைத்துச் செல்லும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன. ‘பஸ்மதாரண விதி’ என்றே பல ஆகமச் சார்பு நூல்களில், ஆசார்யர்கள் பலரும் இதுகுறித்து மிகச் சிறந்த முறையில் விளக்கி உள்ளார்கள்.

? சுமங்கலிப் பெண்கள் திருமாங்கல்யத்தில் குங்குமத் திலகம் வைப்பது ஏன்?

- எஸ்.சீனிவாசன், சென்னை - 35


‘மாங்கல்யம் தந்துநா அனேன மம ஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி சுபகே ஸ்ஜீவ சரதாம் சதம்’

அனைத்து நன்மைகளையும் அடையக்கூடிய இல்லற வாழ்கைக்கு அனுமதி அளிப்பது திருமணம். இந்த வைபவத்தில், மணமகன் மணமகளிடம் ‘பெண்ணே! நீ அனைத்துவிதமான நன்மைகளையும் உடையவள். உன் கழுத்தில் கட்டக்கூடிய இந்தத் திருமாங்கல்யம், நான் நூறாண்டுகளைக் காண்பதற்குக் காரணமாக இருப்பது’ என்று கூறி திருமாங்கல்யம் கட்டுவர்.

நமது ஸநாதன தர்மத்தில், திருமணத்தின்போது ஆணும் பெண்ணும் சரிபாதி நிலையை அடைகிறார்கள். மற்ற மூன்று தர்மங்களான பிரம்மசர்யம், வானப்ரஸ்தம், சந்நியாஸம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய தர்மம் இல்லறம்.

இல்லறத்தில் நுழையும் பெண்ணை ‘ஸஹதர்ம சாரிணீ’ எனக் குறிப்பிட்டு, ஆண்கள் செய்யும் அனைத்து நற்காரியங்களுக்கும் உறுதுணையாக இருப்பவள் என்றும், தவறுகள் செய்யும்போது தகுந்தவாறு உரைத்துத் திருத்துவதைக் கடமையாகக் கொண்டவள் என்றும் போற்றுகிறது நம் ஸநாதன தர்மம்.

எனவே, சுமங்கலிப்பெண்கள் அனுதினமும் திருமாங்கல்யத்தை நோக்கி, ‘ஹே பராசக்தியே, உனது சக்தியாலேயே, இந்தக் குடும்ப வாழ்க்கையை என்னால் சிறப்புடன் செயல்படுத்த முடிகிறது. எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் என் கணவருக்கு ஆரோக்கியமும்  நீண்ட ஆயுளும் அமையவேண்டும்; எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்’ என்று வணங்கி, அதில் குங்குமத்தை வைத்து பிரார்த்திப்பது, நமது முன்னோர் காலத்திலிருந்து தொன்றுதொட்டு வரும் மரபு.

? எங்கள் வீட்டு பூஜையறையில் நிறைய பல்லிகள் இருக்கின்றன. சில நேரங்களில் அவை, சிறியளவிலான சுவாமிப்படங்களைக் கீழே தள்ளவும் செய்கின்றன. இதற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா?

-காமாட்சி ராமமூர்த்தி, சென்னை 50


இவற்றுக்குத் தனியாக பரிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், பூஜையறையைத் தினமும் சுத்தம் செய்து சாம்பிராணி தூபமிட்டு வழிபடுவதாலும் வேண்டாத பொருள்களைப்  பூஜையறையில் இருந்து அகற்றுவதாலும் தங்களது பிரச்னை தீரும் என நினைக்கிறேன். வேப்பிலை போன்ற மருத்துவக் குணம் கொண்ட  இலைகள் இருந்தால் பல்லிகள் வராது என்று சொல்லுவார்கள். மேலும், தூய்மையானச் சூழ்நிலை அமைவதுடன், தினமும் தீபவொளி சுடர்விட, நறுமணம் நிறைந்த தூபம் காட்டி வழிபாடுகளை மேற்கொள்வதாலும், தோத்திர பாராயணம் செய்வதாலும் இப்பிரச்னையைத் தீர்க்கமுடியும்.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,
சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:
கேள்வி-பதில், சக்தி விகடன் 757,
அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism