Published:Updated:

மிதுன ராசிக்காரர்களே... உங்கள் திறமைகள் வெளிப்படும் ஆண்டு இது! - 2019 புத்தாண்டுப் பலன்

மிதுன ராசிக்காரர்களே... உங்கள் திறமைகள் வெளிப்படும் ஆண்டு இது! - 2019 புத்தாண்டுப் பலன்
மிதுன ராசிக்காரர்களே... உங்கள் திறமைகள் வெளிப்படும் ஆண்டு இது! - 2019 புத்தாண்டுப் பலன்

பணம் எந்த அளவு வருகிறதோ அந்த அளவு தவிர்க்கமுடியாத செலவுகளும் அதிகரிக்கும். நல்லவேளையாக அவை திருமணம், சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் என சுபச் செலவுகளாகவே இருக்கும். 

மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எப்போதும் சமாதானத்தையே விரும்புவீர்கள். நெருக்கடியான நேரங்களில்கூட பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடிப்பீர்கள். சமயோசிதமாக நடந்துகொண்டு எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். அதே நேரம் கோபம் என்று வந்து விட்டால் சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் வகையில்தான் நடந்துகொள்வீர்கள்.

எல்லா விஷயமும் ஓரளவு தெரிந்தவராக இருப்பதால், எல்லோருடைய பிரச்னையையும் தேடிப்போய் தீர்த்துவைப்பீர்கள். ஆனால், உங்கள் சொந்த பிரச்னைகளுக்குத்தான் உங்களால் தீர்வு காணமுடியாமல் தவிப்பீர்கள். 

2018-ம் ஆண்டு உங்களுக்கு சுமாரான ஆண்டாகத்தான் இருந்தது. அதற்காக 2019-ம் ஆண்டு அருமையாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இந்த ஆண்டு முழுவதுமே குரு பகவான் உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டிலேயே மறைந்து கிடக்கிறார். அதனால் பணம் எந்த அளவு வருகிறதோ அந்த அளவு தவிர்க்கமுடியாத செலவுகளும் அதிகரிக்கும். நல்லவேளையாக அவை திருமணம், சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் என சுபச் செலவுகளாகவே இருக்கும். 

சனிபகவான் உங்களின் ராசிக்கு கண்டகச் சனியாக ஆண்டு முழுவதும் தொடர்வதால், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.    

13.2.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால், கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் ஒற்றுமை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக அமையும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் வியாபாரம் செழிப்பாக இருக்கும். புதிதாக முதலீடுகள் எதையும் கடன் வாங்கிச் செய்ய வேண்டாம். கிடைக்கும் லாபத்திலிருந்து  ஒரு பகுதியை மட்டும் முதலீடாகச் செய்வது நல்லது. 

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். ஆனால், ஆண்டு முழுவதுமே மனதில் ஒரு படபடப்பு இருந்துகொண்டிருக்கும். வெளிநாட்டு வேலைகளுக்கு நீங்கள் மனு செய்திருந்தால் அங்கிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

மாணவ மாணவிகள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது. ஒருமுறைக்கு இரண்டுமுறை உங்களின் வீட்டுப்பாடங்களை எழுதிப் பார்ப்பது நல்லது. குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்கவேண்டும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனமுடன் விளையாட வேண்டும்.

பெண்களுக்குப் புதிய வேலைக் கிடைக்கும். இல்லத்தரசிகள் சேமித்து வைத்த பணத்தில் புதிய நகைகள் வாங்குவார்கள். வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாகப் பயணிப்பது நல்லது.  

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் சுமாராகத்தானிருக்கும். பக்கத்து வயல்காரர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் சிறு விஷயங்களுக்கெல்லாம் போட்டி போடாதீர்கள். 

2019-ம் ஆண்டு கடந்த ஆண்டைவிட மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் ஆண்டாக அமையும்.

மேலும் சிறப்பான பலன்களைப் பெற கடலூர் மாவட்டம், நஞ்சை மகத்துவாழ்க்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். எல்லா வகையிலும் வசதிகள் பெருகும்.

அடுத்த கட்டுரைக்கு