Published:Updated:

கடக ராசிக்காரர்களே... இது சௌபாக்கியங்கள் நிறையும் ஆண்டு! 2019 புத்தாண்டு பலன்கள்

பிள்ளைகள் உங்களின் சொல்லைக் கேட்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். மகனுக்குத் தள்ளித்தள்ளி போன திருமணம் நல்ல இடத்தில் முடியும்.

கடக ராசிக்காரர்களே... இது சௌபாக்கியங்கள் நிறையும் ஆண்டு! 2019 புத்தாண்டு பலன்கள்
கடக ராசிக்காரர்களே... இது சௌபாக்கியங்கள் நிறையும் ஆண்டு! 2019 புத்தாண்டு பலன்கள்

டக ராசியில் பிறந்திருக்கும் உங்களுடைய ராசி, காலபுருஷ தத்துவத்தில் நான்காவது ராசியாக வருகிறது. நான்காம் இடம் என்பது சுகஸ்தானத்தைக் குறிப்பதாகும். அதனால், உங்களுக்கு வாழ்க்கையின் சௌபாக்கியங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. சொந்த வீடு, சொந்த வாகனம் என்று எல்லாவித சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்வீர்கள். 

நிர்வாகத் திறமையும் ஆளுமைத் திறமையும் உங்களிடம் நிறையவே இருக்கும். இருந்தபோதிலும் 2018-ம் ஆண்டு உங்களுக்குப் பல விதத்திலும் இன்னல்கள் தந்த ஆண்டாகவே இருந்தது. எல்லோரையும் நல்லவர்கள் என நம்பி பலரிடம் ஏமாந்துபோனீர்கள். சில பொருளாதார இழப்புகளையும் சந்தித்து இருப்பீர்கள். ஆனால், இந்த 2019 - ம் ஆண்டு, கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் உங்களுக்கு எல்லாவித்திலும் நன்மை தரும் ஆண்டாக அமையும். 

பிரிந்திருந்த குடும்ப உறுப்பினர்கள், இந்தக் காலகட்டத்தில் ஒன்றாகச் சேருவார்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் தீரும். அவர்களுக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகும் மனநிலை உருவாகும். நீண்ட நாள்களாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இந்த ஆண்டில் புத்திர பாக்கியம் கிடைக்கும். 

நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் தள்ளிப்போட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் தீரும். எந்தவித வில்லங்கமும் இல்லாமல் உங்களின் பங்கு உங்கள் கைக்கு வந்து சேரும். 

ஒரு சொத்தை விற்றுவிட்டு இன்னோர் இடத்தில் சொத்து வாங்கும் அமைப்பும் சிலருக்கு ஏற்படும். அது நன்மை தருவதாக இருப்பதுடன் லாபம் தரும் விதமாகவும் அமையும். புகழ்பெற்ற கோயில்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வருவீர்கள்.

பிள்ளைகள் உங்களின் சொல்லைக் கேட்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். மகனுக்குத் தள்ளித்தள்ளிப் போன திருமணம் நல்ல இடத்தில் முடியும். மகளுக்கும் நல்ல இடத்தில் வரன் அமையும். வேலை வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.

13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் வக்கிரமாகி இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு முழுவதுமே இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவானும், 6-ம் வீட்டில் சனியும் கேதுவும் இருப்பதால், நல்லவிதமாக வியாபாரம் நடைபெறும். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி, ஸ்டேஷனரி பொருள்கள், துணி வகைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குச் சுமுகமான சூழ்நிலை அலுவலகத்தில் நிலவும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்துக்கு இடமாற்றமும் கிடைக்கும். 

மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் சாதனைகள் பல புரிந்து நற்பெயர் ஈட்டுவார்கள். மாணவர்களிடமிருந்து வந்த விளையாட்டுத்தனமான போக்கில் மாற்றம் ஏற்பட்டுப் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

பெண்கள் புதிதாக நகைகள், வீடு, மனை போன்றவை வாங்குவார்கள். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பும் சிலருக்கு ஏற்படும். ஆண்டு முழுவதுமே கடக ராசிக்காரர்களுக்குச் சிறப்பாக இருக்கிறதென்றாலும், பெண்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

விவசாயிகளுக்கு, நான்காண்டுகளாக இருந்த நிலைமாறி நல்ல மகசூல் கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களின் கடனை அடைத்து, மீட்டு வருவீர்கள்.   

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், இளநகர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு உமையாம்பிகை சமேத ஸ்ரீஉமையீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். பிணிகள் அகலும்.