Published:Updated:

கன்னிராசிக்காரர்களே... பணவரவுக்குக் குறைவில்லாத ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

உங்களின் ராசிக்கு இரண்டாவது ராசியான துலாம் ராசியில் பிறக்கும் இந்த 2019 - ம் ஆண்டு உங்களுக்கு ஓரளவு பரவாயில்லை.

கன்னிராசிக்காரர்களே... பணவரவுக்குக் குறைவில்லாத ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்
கன்னிராசிக்காரர்களே... பணவரவுக்குக் குறைவில்லாத ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த கன்னி ராசிக்காரர்களான உங்கள் ராசியில்தான் அந்தப் புதன் உச்சம் பெறுகிறார். கன்னிராசிக்காரரான நீங்கள் கலகலப்பான பேச்சும் நகைச்சுவை உணர்வும் உள்ளவராக இருப்பீர்கள். கற்பனை சக்தி அதிகம் என்பதால், கதை, கவிதைகளில் ஆர்வம் அதிகமிருக்கும். எப்போதும் உங்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். உங்களின் ராசிக்கு இரண்டாவது ராசியான துலாம் ராசியில் பிறக்கும் இந்த 2019 - ம் ஆண்டு உங்களுக்கு ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம்.

உங்களின் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். முடியாத காரியங்கள் பலவற்றையும் உங்களின் பேச்சு சாதுர்யத்தால், சாதிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னைகள் விலகி அன்னியோன்னியம் அதிகரிக்கும். 

உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும், அதற்கேற்ப செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். தாயாரின் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களுக்கும் வயிறு சம்பந்தமான கோளாறுகள் வர வாய்ப்பிருப்பதால், நீங்களும் முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள். வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாகச் செல்லுங்கள். இரவுப் பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால், சுற்றியிருப்பவர்களின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரிய வரும். ஆனால், உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் பலம் பெற்று இருப்பதால், ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருப்பீர்கள். அஷ்டமச்சனி நடப்பதால் அவ்வப்போது சிறு சிறு தொந்தரவுகள் வந்துபோகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொண்டால் அது போன்ற நெருக்கடியான நேரங்களை நீங்கள் எளிதாகக் கடக்கலாம். 

19.5.2019 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 4-ம் வீட்டிலேயே அமர்வதால், இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். 

உத்தியோகத்தைப் பொறுத்தவரை வேலை பளு அதிகரிக்கும். ஒரே வேலையை ஒன்றுக்கு இரண்டுமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். வெளி வட்டாரங்களில் பேசும்போது கவனமாகப் பேசவும். சக ஊழியர்களின் உதவிகளைப் பெற போராட வேண்டி இருக்கும்.    

வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சுமாராகத்தான் இருக்கும். எதிலும் அகலக்கால் வைக்கவேண்டாம். புதிய முதலீடுகளைச் செய்யும்போது ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்துவிட்டுச் செய்வது நல்லது. உணவு வகைகள், கமிஷன், ஏஜென்ட் ஆகிய தொழில்கள் நல்ல லாபம் தரும்.

மாணவ மாணவிகளுக்குப் படிப்பில் மறதி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை எழுதிப் பார்த்துப் படிப்பது நல்லது. கவனச்சிதறல் ஏற்படும் என்பதால், தியான வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லலாம்.  
பெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் உற்சாகமாக இருக்கும். அழகு, அறிவு கூடும். உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரன் கிட்டும். திருமணமும் கைகூடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

2019-ம் ஆண்டு மனநிம்மதியையும், ஓரளவு வசதி வாய்ப்புகளைத் தந்தாலும் மனத்தில் ஒரு பயமும் பரபரப்பும் இருந்துகொண்டுதான் இருக்கும். 

பரிகாரம்: கோயம்புத்துர் மாவட்டம், பேரூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.