Published:Updated:

தனுசு ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

தனுசு ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
தனுசு ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

உங்களின் ராசியிலேயே சனி பகவான் இருப்பதால், உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தினமும் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

னுசு ராசி அன்பர்களே... வீட்டு நடப்பு தெரிகிறதோ இல்லையோ நாட்டுநடப்பை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள்தான். சாம்பாரில் இருந்து செயற்கைக்கோள் வரை சகலமும் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

உங்களின் ராசியிலேயே சனி பகவான் இருப்பதால், உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தினமும் தவறாமல் மேற்கொள்ளுங்கள். வெளி உணவுகளைத் தவிர்த்திடுங்கள். பயணங்களின்போது இதை மறக்காமல் கடைப்பிடியுங்கள்.

 இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்களின் ராசிக்கு 12 -ம்  வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருப்பது அவசியம். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து போகும். 

அதே நேரத்தில் சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் வக்கிரமாகியும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களின் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக அமர்கிறார். வேலைப்பளு அதிகரிக்கும். கணவன், மனைவி பரஸ்பரம்  விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஒரு சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய வேண்டிய வாய்ப்பு ஏற்படும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களைக் கவனமாக கையாளுங்கள்.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.  

 13.2.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7 - ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 
 இந்த ஆண்டு முழுவதும் சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜன்மச் சனியாக வருவதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.  

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு முழுவதுமே லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப  முதலீடு செய்யுங்கள். கூடுமானவரை புதிய முதலீடுகள் செய்யவோ, புதிதாகக் கிளையைத் தொடங்கவோ இது சரியான தருணம் அல்ல. விரலுக்கேற்ற வீக்கம் எனும் வகையில் வர்த்தகத்தை அமைத்துக்கொள்ளுங்கள். வியாபாரம் சுமாராக இருந்தாலும் முதலீட்டுக்கு மோசம் இருக்காது. எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். 'நன்றாகப் பழகுகிறார்' என நம்பி அதிகாரிகளைப் பற்றி குறைகூறிப் பேசவேண்டாம். பதவி உயர்வும் சம்பள பாக்கியும் தள்ளிப்போகும்.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. தூக்கம், ஞாபக மறதி ஆகியவை அடிக்கடி ஏற்படும் என்பதால், எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது அவசியம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த ஆண்டு புதிய இடத்தில் பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்கும். 
விவசாயிகள் பக்கத்து வயல்காரர்களிடம் வீண் வாக்குவாதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். பயிர் சாகுபடியிலும் கடன் வாங்கிச் செலவு செய்ய வேண்டாம். 

இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரும் ஆண்டாக அமையும். 

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சென்று வணங்குங்கள். நிம்மதி கிடைக்கும். 

அடுத்த கட்டுரைக்கு