Published:Updated:

மகரராசிக்காரர்களே... வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆண்டு இது! - 2019 புத்தாண்டு பலன்கள்

உங்களின் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களின் தொழில் மேம்படும். ஒரு சிலர் இவ்வளவு நாள்களாக மாத சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தால் இந்த ஆண்டு அவர்கள் அந்த வேலையை உதறிவிட்டு சொந்தத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். 

மகரராசிக்காரர்களே... வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆண்டு இது!  - 2019 புத்தாண்டு பலன்கள்
மகரராசிக்காரர்களே... வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆண்டு இது! - 2019 புத்தாண்டு பலன்கள்

'மகரத்தார் நகரத்தை ஆள்வார்' என்று சொல்லப்படும் மகர ராசிக்காரர்களான நீங்கள் அடுத்தவர்களின் மனதில் இடம்பிடித்து அன்பால் உலகை ஆளக்கூடியவர்களாக இருப்பீர்கள். எந்தக் காரியம் என்றாலும், முதல் ஆளாக இழுத்துப்போட்டுச் செய்து சாதனைப் படைப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களைக் கடந்த 2018-ம் ஆண்டு மிகவும் புரட்டிப் போட்டுவிட்டது. யார் யாரையெல்லாம் நம்பினீர்களோ, அவர்கள் எல்லாம் உங்களைக் கைவிட்டு விட்டனர். நிறையத் தோல்விகள் நிறைய வருத்தங்கள். இதனால், கிட்டதட்ட ஞானியைப்போல் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிகவும் அமோகமாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக முடியும். உங்களின் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களின் தொழில் மேம்படும். ஒரு சிலர் இவ்வளவு நாள்களாக மாத சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தால் இந்த ஆண்டு அவர்கள் அந்த வேலையை உதறிவிட்டு சொந்தத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். 

வெளி மாநிலம், வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். 

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக உங்களுக்குத் தொல்லை தந்துகொண்டிருந்த வயிற்றுக் கோளாறு, தலைச்சுற்றல் போன்றவையெல்லாம் நீங்கும். முகம் பொலிவு பெறும். உங்களின் தோற்றப்பொலிவு சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆச்சர்யம் அளிக்கும். 

நீண்ட நாள்களாகச் சொந்த வீடு வாங்கவேண்டும் என நினைத்தவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். ஏற்கெனவே வாங்கிப்போட்டிருந்த இடத்தில் நவீன வசதிகளுடன் வீடு கட்டுவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கி வைத்திருந்த கடனையெல்லாம் அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடி வரும். 

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் இந்தக் காலகட்டங்களில் வீண்செலவுகளால் சேமிப்புகள் கரையும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு அமோகமான ஆண்டாக அமையும். போட்டிகளைச் சமாளித்து,  புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால், வேலையாள்களிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைத்து நல்ல லாபம் அடைவீர்கள்.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலகத்தில் சின்னச்சின்ன இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், அவ்வப்போது உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 

மாணவர்களுக்கு விளையாட்டில் இருந்த வேகம் குறைந்து படிப்பில் ஆர்வம் அதிகமாகும். அதற்கேற்றாற்போல இந்த ஆண்டு வியக்கத்தக்க சாதனைகளைப் படைப்பீர்கள். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். 

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் கூடி நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 
இந்த 2019 -ம் ஆண்டில் வி.ஐ.பி.கள் அறிமுகம் கிடைக்கும். இதனால் பல நல்ல காரியங்களைச் செய்து புகழ் பெறுவீர்கள். அனுபவ அறிவால் சாதித்துக் காட்டும் வருடமிது. 

பரிகாரம்: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலட்சுமிகோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.