Published:Updated:

மீன ராசிக்காரர்களே... பதவி உயர்வும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்!- 2019 புத்தாண்டு பலன்கள்

மீன ராசிக்காரர்களே... பதவி உயர்வும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்!- 2019 புத்தாண்டு பலன்கள்
News
மீன ராசிக்காரர்களே... பதவி உயர்வும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்!- 2019 புத்தாண்டு பலன்கள்

செவ்வாய் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், இனி எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். பேச்சிலே ஒரு கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும்.

மீனம் ராசிக்காரர்களாகிய நீங்கள் எப்போதும் சமாதானத்தையே விரும்பக்கூடியவர். உங்களிடம் யார் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை கேட்கலாம். அவர்களுக்கு மறுக்காமல் ஆலோசனை சொல்லி அன்புகாட்டி ஆதரவும் தருவீர்கள். கற்பனைத்திறன் அதிகமுள்ள உங்களுக்கு, பொது அறிவும் அதிகமிருக்கும். நாட்டுநடப்பு, வீட்டுநடப்பு என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். குழந்தைத்தனமும் வெள்ளை உள்ளமும் கொண்ட உங்களின் ராசிக்கு 8 -வது ராசியில் இந்த 2019-ம் ஆண்டு பிறக்கிறது. எனவே இந்த ஆண்டு இனிமையான ஆண்டாகவும் பணப்புழக்கம் அதிகமுள்ள ஆண்டாகவும் இருக்கும்.

உங்களின் ராசிநாதனான குரு பகவான் உங்களின் ராசிக்கு 9 -வது வீட்டிலேயே அக்டோபர் மாதம் வரை இருப்பதனால் திடீர் பயணங்களும் செலவுகளும் அதிகமாக இருந்தாலும், உங்கள் மனதில் உற்சாகத்துக்கும் தெம்புக்கும் குறைவிருக்காது. குருபகவான், உங்களின் ராசியைப் பார்ப்பதால் எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். யோகாதிபதியான செவ்வாய் சாதகமான இடத்தில் இருப்பதால், இழுபறியாக இருந்த வீடு கட்டும் பணியை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இதற்கான வங்கிக் கடனுதவியும் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகியும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 10 - ம் வீட்டில் அமர்கிறார். இந்தக் காலகட்டத்தில் உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும், மறுக்காமல் செய்து நற்பெயர் பெறுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செவ்வாய் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், இனி எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். பேச்சிலே ஒரு கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

13.2.19 முதல் வருடம் முடியும்வரை ராகு பகவான் உங்களின் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்வதால், பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகளுடன் இருந்த கருத்துமோதல்கள் மாறும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 10 - ம் வீட்டிலேயே நீடிப்பதால்  உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆனால், சம்பளம் மற்றும் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது. நீண்ட நாள்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். காற்றோட்டமில்லாத சிறிய வீட்டில் சிரமத்துடன் குடியிருந்தவர்கள், நல்ல காற்றோட்டமுள்ள பெரிய வீடுகளுக்குக் குடிபுகுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு எல்லா வகையிலும் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். தொல்லை கொடுத்து வந்த பழைய வேலையாள்களுக்குப் பதிலாக அனுபவமிக்க புதிய பணியாளர்களை நியமிப்பீர்கள். புதிய பங்குதாரர்களையும் சேர்த்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணிகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம்.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பில் நல்ல மாறுதல்கள் உண்டாகும். கூடவே ஆடை ஆபரணச் சேர்க்கையும் இருக்கும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிறப்பாகப் படித்து, தேர்வில்  மாநில அளவில் சாதனை புரிவார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் அதிகரிக்கும். அடகிலிருந்த நகைகள், மற்றும் கடன் வகைகளை அடைத்து முடிப்பீர்கள். பக்கத்து வயல்காரர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். அரசு வகையில் ஆதரவு உண்டு.

மொத்தத்தில் இந்த 2019 - ம் ஆண்டு உங்களின் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றும் வெற்றிகரமான ஆண்டாக அமையும். 

பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். நிம்மதி கிட்டும்.