Published:Updated:

புதன் கிரகம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன? #Astrology

புதன் கிரகம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன? #Astrology
புதன் கிரகம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன? #Astrology

'ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்தான்' என்று கூறும் ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி. புதன் கிரகம் தரும் மாற்றங்கள் பற்றி இங்கே விளக்குகிறார்.

''ஒருவர் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் கண்டிப்பாகப் புதன் வலுப்பெற்று இருக்கவேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர், முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பு படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவர் புதன். 

இந்தப் பூமிப்பந்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டறியப் போகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான். 

அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை 'நிபுணன்' என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கிறது. 

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார். 

ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருக்கும் ஒருவர் எதையும் 'பாசிடிவ் அப்ரோச்' என்று சொல்லப்படும் நேர்மறைச் சிந்தனையுடன் அணுகுவார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும்  மனதைத் தளர விட மாட்டார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும், அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, தோல்விகளை வெற்றிகளாக மாற்றுபவர்கள் புதனின் அருள் பெற்றவர்கள்தான். 

ஒருவர் சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பதற்குப் புதனின் பலம் அவசியம். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமாக விவாதம் செய்பவர்கள், கணிதத் துறையில் நிபுணர்கள் உள்ளிட்ட பலருக்கும் புதனின் அனுகிரகம் இருப்பதே காரணம்.

புகழ்பெற்று வரும் ஐ.டி.துறை எனப்படும் மென்பொருள் சம்பந்தப்பட்ட துறைகளைக் குறிப்பவரும் புதன்தான். பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினித் துறையினர் புதன் மிதுனம், கன்னியில் வலுப்பெற்ற நிலையில் பிறந்தவர்கள்தான்.  

எழுத்தை ஆள்பவன் புதன்தான் என்பதால், ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்குப் புதனின் தயவு மிகவும் அவசியம். புதன் வலுப் பெற்றவர்கள்தான், தங்கள் மனதில் நினைக்கும் விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

உலகின் மிகச் சிறந்த கவிஞர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்தான். அதிலும் சுக்கிரனுடன், புதன் இணைந்திருக்கும் நிலையில் பிறந்தவர்கள். காதல் கவிதைகளை எழுதுவதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். 

ஒருவரை பத்திரிகைத் துறையில் ஈடுபடுத்துபவரும் புதன்தான். வலுப்பெற்ற புதன் ஒரு பத்திரிகையைத் திறம்பட நடத்தும் ஆற்றலைத் தருவார். ஒருவர் ஜர்னலிசம் படிப்பதற்கும், எடிட்டராகவும், நிருபராகவும், பத்திரிகையில் வேலை செய்வதற்கும் புதன்தான் முதல் காரணம். சட சடக்கும் புத்தம் புதிய காகிதத்தின் மணத்தை நுகர்ந்தபடி வேலை செய்பவர், நிச்சயம் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவராகத்தான் இருப்பார்.

அரசியலை அலசுவதற்கும், அரசியல் சூழ்நிலைகளை விமர்சிப்பதற்கும் தேவையான தீர்க்கமான அறிவும், தொலைநோக்குப் பார்வையும் புதனால்தான் தரப்படுகிறது. அரசியலில் நாளை என்ன நடக்கும் என்று சொல்வதற்குத் தன்னைச் சுற்றி நடப்பவற்றை முதலில் உள்வாங்கி விருப்பு, வெறுப்பின்றிக் கணிக்கும் திறன் தேவைப்படும். இந்தத் திறமையைத் தருபவர் புதன். 

நாளை என்ன நடக்கும் என்று கணிக்கும் திறனுக்கும் புதன்தான் அதிபதி என்பதால்தான், ஜோதிடர்களும் புதனின் ஆதிக்கத்தினுள் வருகிறார்கள். புதனின் மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்கள் கணிப்புத் திறனுக்குப் பெயர் பெற்றவர்களாகவும், அடுத்தவர்கள் எந்தத் தருணத்தில், எப்படிச் செயல்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொள்ளும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். 

ஒருவர் புகழ் பெற்ற சிற்பியாவதற்கும் முழு முதல் காரணம் புதன்தான். பிரதிபிம்பங்களை உயிருள்ளவை போல காட்டும் ஓவியம், சிற்பம் போன்ற துணுக்கமான கலைகள் புதனுக்குச் சொந்தம். அதேபோல கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பவர்களும் புதன் வலுப்பெற்ற மாணவர்கள்தான். 

புதன் ஓர் இரட்டை நிலை கிரகமாவார். ஒரு ஜாதகத்தில் புதன் நீச நிலை பெற்று பங்கமாகி, நீச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால், சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்குக் கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

அதேநேரத்தில் பள்ளியில் தொடர்ந்து படிக்காத அவர், அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரைவிட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர், சரளமான ஆங்கில அறிவும், பிறமொழி அறிவும் பெற்றிருப்பார். இவையெல்லாம் புதனின் இரட்டை நிலைகளே. 

மிகச்சிறந்த வியாபாரிகள் புதனால்தான் உருவாகிறார்கள். புதன் நாவன்மையைக் குறிப்பவர் என்பதால், ஒருவர் தனது வாடிக்கை யாளருடன் திறமையாகப் பேசி, தன் தொழிலை வளர்த்துக் கொள்வதற்கும் புதனே காரணம். 

மிகப்பெரிய கல்வி நிலையங்களை நடத்துபவர்களின் ஜாதகங்களில் வலுப் பெற்ற புதன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பார். கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், அவற்றில் பணிபுரிபவர்களின் ஜாதகங்களில், கல்வி கற்றுக் கொடுக்கும் காரகத்துவத்தையுடைய இன்னொரு கிரகமான குருவின் இணைவோ, பார்வையோ, சம்பந்தமோ இருக்கும். 

உறவுகளில் தாய் மாமனைக் குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்குச் சுபத்துவம் அடைந்த புதன் ஏழாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மாமன் மகளையோ, அத்தை மகளையோ வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருப்பார். 

ஜாதகத்தில் சுபத்துவத்துடன் அவர் பெற்றுள்ள வலிமையைப் பொறுத்து, ஜாதகரை மிக உயரிய வெளிநாட்டுத் தூதர் பதவி முதற்கொண்டு, சைக்கிளில் கடிதத்தைக் கொண்டு செல்லும் தபால்காரர் மற்றும் கூரியர் பாய் வரை ஈடுபடுத்துவார். 

நரம்புகளுக்கும் புதனே அதிபதி என்பதால், ஒருவருக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு வியாதிகளை வலுவற்ற நிலையில் இருக்கும் புதன் தருவார். மிக அரிதாகச் சந்திரனும் முழுக்கக் கெட்டு புதனும் வலுவிழக்கும் நிலையில் ஜாதகர் மன நோயாளியாக இருக்கக் கூடும். 

தசா, புக்தி வருட அமைப்பில் புதனுக்குச் சுக்கிரன், சனி, ராகு இவர்களுக்கு அடுத்த நிலையாகப் பதினேழு வருடங்கள் மகரிஷி பராசரரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்குச் சுபவலுப் பெற்று புதன் தசை நடக்கும் நிலையில் தன்னுடைய சொந்த அறிவால் முன்னேறும் நிலையைத் தருவார். 

தனித்தனியாக அனைத்து லக்னங்களிலும் பிறந்தவர்களுக்கு புதன் தரக்கூடிய பலன்களைப் பார்ப்போம்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்குப் புதன் மூன்று, ஆறுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாபர் என்பதால் மேஷத்துக்கு இவர் வலுப் பெற்று தசை நடத்துவது நன்மைகளைச் செய்யாது. 

லக்னாதிபதி செவ்வாய் வலுவிழந்து ஆறாமிடத்தில் புதன் உச்சம் பெற்று தசை நடந்தால், தன் தசையில் ஜாதகரை கடுமையான கடன், நோய், எதிரித் தொல்லைகளுக்கு உள்ளாக்குவார். 

மேஷ ராசிக்காரர்களுக்குப் புதன் தசை வருவது சரியான யோக அமைப்பு அல்ல. இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, அவர் கெடுதல்களைச் செய்யாமல் நன்மைகளைச் செய்யவேண்டுமெனில் பத்து, பதினொன்றாமிடங்களில் நட்பாகி வலுப்பெற்றிருக்க வேண்டும். பதினொன்றாமிடத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மட்டுமே சுபராகவும், யோகக் காரராகவும் அமைவார். இந்த லக்னத்தின் அதிபதியான சுக்கிரனுக்கு அவரது இன்னொரு வீடான துலாமே மூலத்திரிகோணம் மற்றும் ஆறாம் வீடாக அமைவதால், சுக்கிரன் ஆறாமிடத்துக்கு ஆறில் மறைந்து உச்சமாகவோ, எட்டில் மறைந்து லக்னத்தில் ஆட்சியாகவோ இருக்கும் நிலையில் மட்டுமே யோகம் செய்வார். இல்லையெனில் சுக்கிர தசையில் ஆறாமிடத்துப் பலன்களே அதிகம் நடக்கும். 

ரிஷபத்தின் இன்னொரு யோகாதிபதியான சனியும் இந்த லக்னத்துக்குப் பாதகாதிபத்தியம் பெறும் நிலையில் அவரும் முழுமையான யோகம் தரமாட்டார். புதன் மட்டுமே இரண்டு, ஐந்தாமிடங்களில் சுபராக வலுப்பெற்று வக்கிரமடையாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய யோகங்களைச் செய்வார். லக்னத்திலும், ஒன்பது, பத்தாமிடங்களிலும் இருக்கும் புதனாலும் ஜாதகருக்கு நன்மைகள் உண்டு. 

மிதுன லக்னத்துக்கு புதன் லக்னாதிபதி எனும் நிலை பெற்று சகல பாக்கியங்களையும் தரும் அமைப்பைப் பெறுகிறார். மிதுனத்தில் ஆட்சி பெற்றோ, கன்னியில் உச்சம் பெற்றோ, துலாம், கும்பம் போன்ற இடங்களில் நட்புடன் திரிகோண வலுப்பெற்றோ இருக்கும் நிலையில் ஜாதகருக்கு அனைத்து இன்பங்களையும் அள்ளித் தருவார். மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் முற்பகுதி வாழ்வை ஒன்றுமில்லாததாக்கி, பிற்பகுதியில் வாழ்வில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்வார்.  

கடக லக்னத்துக்குப் புதன் மூன்று, பன்னிரண்டாமிடத்துக்குடைய ஆதிபத்திய விசேஷமில்லாத பாபர் என்பதால், சிக்கலான அமைப்பில் இருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்துக்கு இவர் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்புகளைத் தராது. கடக லக்னத்துக்கு அவரது தசையில் பெரும் நன்மைகளைச் செய்ய வேண்டுமென்றால் பத்து அல்லது பதினோராம் இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். 

சிம்ம லக்னத்துக்கு இரண்டு, பதினொன்றுக்குடையவர் புதன். அதிலும் சிம்ம லக்னாதிபதியான சூரியனைத் தனது முதல் நண்பராகக் கருதுபவர். எனவே ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பொருளாதார விஷயத்தில் மிகப் பெரிய ஏற்றங்களைத் தருவார். 

அதிலும் லக்னத்தில் நட்பு மற்றும் திக்பலமுடன் இருப்பது மிகவும் சிறப்பான நிலை. லக்னாதிபதியின் உத்திர நட்சத்திர சாரத்தில் இருந்தால் தனது தசையில் பெரிய நன்மைகளைச் செய்வார். மூன்று, பத்தாமிடங்களும் சிம்மத்துக்கு அவர் நன்மை செய்யும் இடங்கள். 

கன்னிக்கு அவர் லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதியாகி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் செய்யக் கடமைப்பட்டவர் என்பதால் லக்னத்தில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், திக்பலம் ஆகியவற்றைப் பெற்று வக்கிரமின்றி அமர்வது ஒருவரைச் சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்லும். 

இதில் அம்சத்தில் அவர் நீசம் பெறாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஐந்து, ஒன்பதாமிடங்களில் நட்பு நிலை பெற்றும், பத்தாமிடத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெறாமல் இருப்பதும் நன்மை தரும். 

துலாம் லக்னத்துக்கு அவர் ஒன்பது, பன்னிரண்டுக்குடைய யோகாதிபதியாக வருகிறார். மேற்கண்ட இடங்களில் வலிமை பெற்றிருக்கும் நிலைகளில் அவரால் ஜாதகருக்கு நல்ல பல யோகங்கள் கிடைக்கும். பன்னிரண்டில் வலுப்பெற்றால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  சம்பந்தப்பட்ட நன்மைகளைச் செய்வார். லக்னத்திலும், நான்கு, ஐந்தாமிடங்களிலும் நட்பு பலம் பெற்றிருப்பது சிறப்பு. 

விருச்சிக லக்னத்துக்கு எட்டு, பதினொன்றுக்குடைய பாவி இவர். எட்டாமிடத்தில் சுபத்துவம் பெற்று சுப நிலையில் இருந்தால் ஜாதகரை வெளிநாட்டுக்கு அனுப்பிச் சம்பாதிக்க வைப்பார்.  

புதன் தசை வராத விருச்சிக லக்னக்காரர்கள் யோகசாலிகள். பதினொன்றாமிடத்தில் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் புத்திசாலியாகவும், புதன் சம்பந்தப்பட்ட கணினி போன்ற துறைகளிலும் இருப்பார். மூன்று, பத்தாமிடங்களில் நட்பு நிலையில் வலுப்பெற்று இருக்கும்போது கெடுதல்களைச் செய்யமாட்டார். 

தனுசு லக்னத்துக்கு ஏழு, பத்துக்குடைய மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி எனும் நிலை பெறுகிறார். இந்த லக்னத்துக்கு புதன் ஆட்சி, உச்சம் பெறாமல் இருப்பது நல்லது. மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் சுபராக வலுப்பெற்றிருக்கும் நிலைகளில் தன்னுடைய தசையில் யோக அமைப்புகளைச் செய்வார். 

மகர லக்னத்துக்கு ஆறு, ஒன்பதுக்குடைய இரண்டு எதிர்நிலைகளைப் பெறுவார் என்றாலும் ஒன்பதாம் பாவத்தின் பலனே மேலோங்கி இருக்கும் என்பதால் மகர லக்னத்துக்குப் புதன் தசையில் பரிபூரண பாக்யாதிபதியாகவே அவர் செயல்படுவார். 

ஆனால் பன்னிரண்டில் மறைந்து ஆறாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தி விட்டால் பாக்யாதிபத்தியம் மறைந்து, ஆறாமிடத்தின் பலம் ஓங்கி, தன் தசா,புக்திகளில் ஜாதகரைக் கடுமையான கடன், நோய், எதிரி பிரச்னைகளில் சிக்கவைத்து விடுவார்.  

கும்ப லக்னத்துக்கு ஐந்து, எட்டுக்குடையவர் என்பதால் ஐந்தில் ஆட்சி பெற்று தசை நடந்தால் முழுக்க நன்மைகளையும், எட்டில் உச்சம் பெற்று தசை நடந்தால் தன்னைதானே கெடுத்துக் கொள்ளும் செயல்களையும் செய்வார். எட்டில் சுபத்துவம் பெற்றால் வெளிநாட்டு யோகம் உண்டு. லக்னம், நான்கு, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் நன்மைகளைச் செய்வார். 

மீன லக்னத்துக்கு, தனுசு லக்னத்தைப் போலவே மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி நிலைகளைப் பெறுவார் என்பதால் இவர் ஆட்சி, உச்சம் பெறுவது நன்மைகளைத் தராது. பதிலாக மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் நட்பு நிலை பெற்று தசை நடந்தால் யோகங்களைத் தருவார்.