மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

13.2.2019-ம் தேதி முதல் 31.8.2020-ம் தேதி வரை

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து இதுவரை உங்களுக்கு தொந்தரவு தந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுப காரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். மாமியார், நாத்தனார் வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்கான முயற்சியில் வெற்றிபெறுவீர்கள்.

ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது, இப்போது ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டியாளர் களுக்கு ஈடுகொடுக்கும் அளவு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் நிலவிய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும் பதவி உயர்வும் கிடைக்கும்.

புதிய முயற்சிகள் வெற்றிபெறும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து இதுவரை உங்கள் வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொருபக்கம் அதற்குத் தகுந்தாற்போல செலவுகளும் இனி இருக்கத்தான் செய்யும். தடைப்பட்டு நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். நாத்தனாரின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நீங்கள் விரும்பியபடி வரன் அமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது.

ராசிக்கு 9-ம் வீட்டில் இதுவரை அமர்ந்து வீண்செலவுகளைத் தந்து கொண்டிருந்த கேது பகவான், இப்போது 8-ம் வீட்டில் அமர்வதால் வெளிவட்டாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்களால் லாபம் உயரும்.

உத்தியோகத்தில் இருந்த மோதல் போக்கு மறையும். உங்களின் பொறுப்பு உணர்வால் பதவி கிடைக்கும்.

துரிதமாகச் செயல்பட்டு முன்னேறும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்

ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து காரியத் தடைகளையும், மன உளைச்சலையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். படிப்பின்மீது அவர்களுக்கு இருந்த அலட்சியம் மாறும். பணவரவு அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களிடம் செல்வாக்கு பெறுவீர்கள்.

ராசிக்கு 8 -ம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளைக் கொடுத்துவந்த கேது, இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப் பொலிவைக் கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியிடங்களில் உங்கள் மதிப்பு உயரும்.

வியாபாரத்தில் புதிய முதலீடு களைத் தவிர்த்து, இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில் தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். உங்களின் திறமைகளும் வெளிப்படும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கடகம்

ராசியிலேயே இதுவரை அமர்ந்து, என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்னைகளில் சிக்கவைத்ததுடன், உடல் உபாதைகளாலும் உங்களைப் புலம்பவைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 12-ம் வீட்டில் வந்தமர்வதால் பிரச்னைகள் விலகும். முகத்தில் சந்தோஷம் பொங்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

உங்களின் ராசிக்கு இதுவரை 7-ம் வீட்டில் இருந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள்.

உத்தியோகத்தில் திறமைகள் மேம்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

உங்களின் பணப்பற்றாக்குறை விலகும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்

ராசிக்கு 12-ல் அமர்ந்து பல பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால், தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கணவர் உங்களை ஆதரித்துப் பேசுவார். திடீர்ப் பணவரவு உண்டு.

இதுவரை உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டில் வந்தமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் கடையை விரிவு படுத்துவீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர் களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

வெற்றிப் பாதைக்கு உங்களை  அழைத்துச்செல்லும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னி

ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம் எனத் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. ஆடம்பரமான பொருள்கள் வீடு வந்துசேரும். நாத்தனார், மாமியார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இதுவரையில் அமர்ந்திருந்த கேது, இப்போது ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வேண்டாவெறுப்புடன் பார்த்த பிள்ளைகள், இனி உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும். பழைய சரக்குகளை அதிரடி சலுகைகளால் விற்பனை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

அனுபவ அறிவு கைகொடுக்கும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

துலாம்

ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து எந்த வேலையையும் உங்களை முழுமையாகப் பார்க்கவிடாமல் தடுத்த ராகு பகவான், இப்போது 9-ம் வீட்டில் வந்து அமர்கிறார். ‘முடியாது’ என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள் பூர்வீக சொத்துகளைச் சீர்செய்வீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். கெளரவ பதவி கிடைக்கும். புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பல விதங்களிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான், இப்போது மூன்றாவது வீட்டில் அமர்கிறார். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து மோதல் நீங்கும். மாமியார், நாத்தனா ருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உயர் ரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகைகள் சேரும்.

வியாபாரத்தில் பழைய சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கை யாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் வெகு நாள் கனவான பதவி உயர்வு கிடைக்கும்.

உங்களுக்குப் பெயரையும் புகழையும் வாரி வழங்கும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்

ராசிக்கு 9-ம் வீட்டில்  அமர்ந்து உங்களுக்குக்  கிடைக்கின்ற வாய்ப்பு களையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான், இப்போது 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். இனி, தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் உடல்நலம் சீராகும். சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள், குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொள்வார்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். புது வீடு மாறுவீர்கள். கணவருடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு தன்னம்பிக் கையையும் தைரியத்தையும், கொடுத்துவந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2-ம் வீட்டில்  நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும்.
 
உங்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

தனுசு

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து காரியத்தடைகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களுக்குள் மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிகொண்டுவரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. தோழிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நின்றுகொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். புண்ணியதலங்களுக்குச் சென்று வந்தால் தெய்வபலம் கூடும். உடல் நலத்தில் கவனம் கொள்வது நல்லது.

வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பணியாளர்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும்  நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மகரம்

7-ம் வீட்டில் இதுவரை அமர்ந்து உங்களைத் திணறவைத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப்போல பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். ‘முடியாது’ என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். கணவரின் உடல்நலம் சீரடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத் தடைகளைத் தந்த கேது, இப்போது 12-ம் வீட்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உங்கள் எண்ணங்களைப் பூர்த்திசெய்வார்கள். ஆரோக்கியம் மேம்படும். பால்ய தோழிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்துவந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

உங்களின் வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கும்பம்

6-ம் வீட்டில் இதுவரை இருந்த ராகு பகவான், ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் டென்ஷன், மன உளைச்சல் தந்தார். இப்போது அவர் 5-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீண் டென்ஷன், அலைச்சல், முன்கோபம் குறையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்திசெய்வீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். திடீர்ப் பயணங்கள் அமையும்.

உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண்செலவுகளையும் அலைச்சலையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் வந்தமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாகச் செய்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

செல்வத்தையும் செல்வாக்கையும் உயர்த்தும் நேரமிது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மீனம்

ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் பொறுமையைச் சோதித்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 4-ம்  வீட்டில் அமர்வதால் இனி மன நிம்மதியைத் தருவார். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை  இனம்கண்டு ஒதுக்கித் தள்ளுவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்து வந்த பிரச்னைகளை நல்லவிதமாகப் பேசித் தீர்ப்பீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். திடீர் செலவுகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களைத் தந்த கேது பகவான், இப்போது 10-ம்  வீட்டில் அமர்வதால் எடுத்த காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். அவர்கள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் செய்து முடித்து நற்பெயர் ஈட்டுவீர்கள்.

உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்திடும் நேரமிது.

-  `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்