Published:Updated:

ஒருவருக்கு குருதசை எப்போதெல்லாம் நன்மை தரும்?

வலிமையான குரு தசை ஒருவருக்கு நடக்கும்போது அவருடைய குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குரு தனது தசையில் கேட்க வைப்பார்’’  என்கிறார்  ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி.

ஒருவருக்கு குருதசை எப்போதெல்லாம் நன்மை தரும்?
ஒருவருக்கு குருதசை எப்போதெல்லாம் நன்மை தரும்?

``வலிமையான குரு தசை ஒருவருக்கு நடக்கும்போது அவருடைய குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குரு தனது தசையில் கேட்க வைப்பார்’’  என்கிறார்  ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி. ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் தரும் பலன்கள் பற்றி மேலும் விரிவாகக் கூறுகிறார். 

``ஜோதிட சாஸ்திரத்தில் பணத்தையும் குழந்தைகளையும் தருபவர் என்ற அர்த்தத்தில்தான்  `தனகாரகன்’, `புத்திரகாரகன்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு இவருக்கு ஜோதிடத்தில் எப்போதும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்தாலும் குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி. 

ஒரு ஜாதகத்தில் ஏராளமான தோஷங்கள் கெடுக்கும் நிலையில் இருந்தால்கூட, குருவின் பார்வையோ, தொடர்போ தோஷம் ஏற்படுத்தக்கூடிய கிரகத்துக்கு இருந்தால் அது கெடுதல்களைச் செய்யாது என்பதும் இவருக்கே உள்ள தனிச் சிறப்பு. 
இவர் லக்னத்தோடு சம்பந்தப்படுவது சிறப்பான அமைப்பு என நமது கிரந்தங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன. ஆனாலும், லக்னத்தோடு சம்பந்தப்படும்போது அந்த ஜாதகர் நல்லவராக இருப்பார் என்று சொல்வதைவிட, எளிதில் ஏமாறுபவர் என்றே சொல்லலாம்.   

இவரே வலுப்பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் நல்லவராக இருந்து, தன்னைப் போலவே பிறரையும் நல்லவர்களாக நினைத்து, சனியின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் ஏமாறுவார்கள். நிகழ்காலத்தில் சாதுர்யமும், பொய்யும் புனைவும், மனசாட்சியைத் துறத்தலும் மிகுதியாகி, தவறுகளும் வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட, ராகுவின் ஆதிக்கத்தில் சென்று கொண்டிருக்கிறது இந்த யுகம். 'இங்கு ஒருவர் நல்லவராக இருப்பதை விட வல்லவராக இருப்பதே முக்கியம்' என்பதால், ஜோதிடத்தில் துல்லிய பலன் சொல்ல நினைக்கும் ஒருவருக்கு இவரைப் பற்றிய தற்காலப் புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 

ஒருவரின் ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குரு கீழ்க்காணும் வழிகளில் நன்மைகளைச் செய்வார்.
நல்ல நெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மிக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், தனம், ஆன்மிக நாட்டம், துறவு, நீதியை நிலைநாட்டுதல், தர்மம் செய்வதில் நாட்டம் ஆகிய பலவற்றுக்கு இவர் காரகம் வகிக்கிறார். இவரே வலிமை இழக்கும்போது மேற்கண்ட விஷயங்களில் தலைகீழ் நிலைமைகளை  உருவாக்குவார். உதாரணமாக வலுப்பெறும்போது ஆத்திகனையும் வலுவிழக்கும் போது நாத்திகனையும் உருவாக்குவார். 

 இவர் வலுப்பெற்ற பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரின் பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவற்றில் ஈடுபட வைத்து, பெரிய லாபங்களைத் தருவார். குரு, தனம் மற்றும் புத்திரகாரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார். 

தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தோடு குரு சம்பந்தப்படுகையில் ஒருவருக்குச் சீட்டுப் பிடிப்பது, சிட்பண்ட் போன்ற தொழில்களும், வங்கித்துறையில் வேலையும், நிதித்துறை அமைப்புகளில் வருமானங்களும் உண்டாகும். 
நீதித்துறையில் ஒருவரை ஜொலிக்க வைப்பவரும் குருதான். `சட்டத்துறையில் ஒருவர் வக்கீலாகப் பணிபுரிபவதற்குச் சனியின் கருணைப் பார்வை தேவை' என்றால் நீதித்துறையின் உயர் நிலையான நீதிபதி எனும் அமைப்பைப் பெறுவதற்குக் குருவின் தயவு கண்டிப்பாகத் தேவை. 

உலக வரலாற்றில் மிகச் சிறந்த தீர்ப்புகளுக்காகப் புகழப்பட்டவர்கள் அனைவரும் ஜாதகத்தில் குரு வலுப்பெற்றவர்கள்தான். நீதிநெறி பிறழாத நேர்மையான நீதிபதிகளை உருவாக்குபவர் குருதான். ஜாதகத்தில் குரு வலுப்பெற்ற நிலையில் இருக்கும் ஒருவர் மனசாட்சியை மீறி ஒருபோதும் தவறுகளுக்குத் துணை போக மாட்டார், 

வித்தையைச் சொல்லிக்கொடுக்கும் துறைக்கும் குருவே காரணமாவார். தன்னுடைய பெயரையே குரு என்று கொண்டதனால் தனக்குத் தெரிந்த வித்தைகளைச் சொல்லிக் கொடுக்கும் குருமார்களை உருவாக்குபவரும் குருதான். 
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாகப் பணிபுரியும் அனைவரும் குருவின் அருள் பெற்றவர்கள்தான். ஒருவர் சொல்லிக் கொடுக்கும் துறையில் சிறப்பாக இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் குரு மேன்மையாக இருக்கிறார் என்று அர்த்தம். 
குருவின் நிறம் பொன் மஞ்சள் என்பதால் பொன்னும், மஞ்சளும் குருவுக்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்துக்கு அதிபதியும் குருவே. உலகெங்கிலும் உள்ள நகைக்கடை நடத்துபவர்கள், தங்கத்தால் பிழைப்பவர்கள், நகை செய்யும் பொற்கொல்லர்கள் அனைவரும் குருவின் அனுகிரகத்தால் வாழ்பவர்கள். தங்கத்தின் விலையில் வரும் ஏற்றத்தாழ்வு அனைத்தும் குரு பெறும் வலிமையைப் பொறுத்துதான் இருக்கிறது. 

ஒருவரை ஆன்மிக வழியில் ஜீவனத்தை அமைத்துக்கொள்ள வைப்பவரும் இவர்தான். ஆலயங்களில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அர்ச்சகர்கள், திருக்கோயில்களில் பணிபுரிபவர்கள் போன்ற அனைவருக்கும் குரு வலிமையான நிலைகளில் இருக்க வேண்டும். 
புதனும் குருவும் பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், வித்தைக்கு அதிபதி புதன் என்பதாலும், சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் குரு என்பதாலும் இருவரும் சுபத்துவத்தோடு உள்ள நிலையில் கல்வி நிலையங்களை நடத்துபவர்களை உருவாக்கு வார்கள். மருத்துவக் கல்லூரி நடத்துவதற்குக் குரு, புதன், செவ்வாய் மூவரும் ஜீவன ஸ்தானத்தோடு சம்பந்தப்பட வேண்டும். 
இவை அனைத்திலும் முக்கியமாக, வாழ்க்கையில் ஒருவரின் பிறப்பின் அர்த்தத்தை முழுமையாக்கும் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைச் செல்வத்தை அருளுபவர் குரு. ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் அவரின் குழந்தைகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். 

அதேநேரத்தில் ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ முழுமையான கேந்திராதிபத்திய தோஷம் பெற்றோ, இருப்பாராயின் குழந்தைகளையோ, தன லாபத்தையோ தரும் சக்தியற்றவராகிவிடுவார். இதுபோன்ற நிலையில் அந்த ஜாதகத்தின் புத்திரஸ்தானாதிபதி எனப்படும் ஐந்துக்கு உடையவரும் வலிமையிழந்தால் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது கடினம். 

லக்ன வாரியாக குரு தரும் நன்மைகள் என்று பார்ப்போம். 
செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ, விருச்சிக லக்னங்களுக்கு குரு ஒன்பது மற்றும் ஐந்துக்குடையவராகி யோக நிலைபெற்று தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். இந்த லக்னங்களுக்கு அவர் ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் கேந்திர கோணங்களில் அமர்வது நன்மைகளைத் தரும். 

சந்திர, சூரியர்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட கடக லக்னத்துக்குப் பாக்கியாதிபதியாகவும், சிம்ம லக்னத்துக்குப் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாகவும் அமைந்து யோகம் தருவார். மேற்கண்ட நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையில் பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். எந்த நிலையிலும் ஜாதகனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவே முயற்சி செய்வார். 
அவரது சொந்த வீடுகளான தனுசு, மீனம் உபய ராசிகளாவதாலும், உபய லக்னங்களுக்கு லக்ன நாதன் கேந்திர, கோணங்களில் வலுப் பெறுவது நன்மைகளைத் தருவதில்லை என்பதாலும், மீனத்துக்கு அவர் உச்சம் பெறுவதன் மூலம் மிகப் பெரிய யோகங்களைச் செய்வது இல்லை. அதைவிட அவர் ஒன்பதாமிடமான விருச்சிகத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது யோக நிலை. 
அவரது இன்னொரு லக்னமான தனுசுக்கு அவர் உச்சமடைவதே எட்டில்தான் என்பதால், மறைவு ஸ்தானத்தில் உச்சமடையும் குரு நன்மைகளைச் செய்வார். அதேபோல அவரது அதி நட்பு வீடான ஒன்பதாமிட சிம்மத்திலும், இன்னொரு நட்பு வீடான ஐந்தாமிட

மேஷத்திலும் அமர்ந்து லக்னத்தைப் பார்க்கும்போது விசேஷ யோகங்களைச் செய்வார். 
மேற்கண்ட இரு லக்னங்களுக்கும் அவர் கேந்திரங்களில் அமர்வது நன்மைகளைத் தருவதில்லை. பொதுவாகவே இயற்கைச் சுப கிரகமான குரு எந்த ஒரு லக்னத்துக்கும் கேந்திரங்களில் வலுப்பெறுவது முழுமையான யோகத்தைத் தராது. சில நிலைகளில் இது கேந்திராபத்திய தோஷமாக மாறிக் கெடுதல்களையும் செய்யும். 

மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு 7 , 4 மற்றும் 10 -ம் வீட்டில்  குரு பகவான் அமரும்போது யோகம் தருவார். அதிலும் குறிப்பாக, 7 - வீட்டில் அமரும்போது நல்ல வாழ்க்கைத்துணை, புகழ் சேர்க்கும் பிள்ளைகளை அமைத்துத் தருவார். 

மகரம், கும்ப லக்னத்துக்கு குரு யோகாதிபதியாக இல்லாவிட்டாலும், மகர லக்னத்துக்கு 7-ம் வீட்டில் இருந்து லக்னத்தைப் பார்க்கும்போது, குரு தசையில் ஏராளமான நன்மைகளைச் செய்து ஜாதகரைப் புகழடையச் செய்வார்.
கும்ப லக்னக்காரர்களுக்கு 11-ம் வீடான தனுசில் குரு பகவான் இருந்தால், தொழிலில் புகழடையச் செய்து பல வகையிலும் லாபம் ஈட்டித் தருவார். 

ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. அவர், துலாம் லக்னத்துக்கு 6-ம் வீட்டிலும், ரிஷப லக்னத்துக்கு 8-ம் வீட்டிலும் அமர்ந்து, ஆட்சி பலம் பெற்று சுபகிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால், நல்ல பலன்களைத் தருவார். 
துலாம் லக்னத்துக்கு 11-ம் இடத்தில் இருப்பது நல்லது. ரிஷபத்துக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து ஆட்சி பலம் பெற்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தை வழங்கி செல்வம் செழிக்கச் செய்வார்.

அதேநேரத்தில் முழுச் சுபரான குரு எந்த ஒரு ஜாதகத்திலும் நமது ஞானிகள் சொன்ன விதிப்படி ஐந்து, ஒன்பது எனப்படும் திரிகோண இடங்களில் இருப்பது, அவருக்கும், அந்த ஜாதகத்துக்கும் மிகுந்த வலுவைத் தரும். மேற்கண்ட இடங்களில் இருக்கும் குரு வலிமையற்ற நிலையில் இருந்தால்கூடத் தீமைகளைச் செய்யமாட்டார். இவர் வலுவாக இருந்தால்தான் அவரது பார்வைக்கும் வலு இருக்கும். பலவீனம் அடைந்திருந் தால் அவரது பார்வை தரும் நன்மையின் அளவு குறையும். 

ஒருவரின் ஜாதகத்தில் குருவின் பார்வையைக் கணிக்கும்போது அந்தப் பார்வைக்கு வலு இருக்கிறதா என்பதை அளவிட வேண்டியது அவசியம். ஏனென்றால் 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்று கூறினார்.