Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரை

ராசிபலன்

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரை

Published:Updated:

'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசிபலன்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆ
டியில் விதை போட்டால், கார்த்திகையில் காய் காய்க்கும்’ என்பதற்கேற்ப, எதிர்காலம் குறித்து காய் நகர்த்துவதில் வல்லவர் நீங்கள். செவ்வாய் 9-ஆம் வீட்டில் அமர்ந்ததால் முன்கோபம், வீண் அலைச்சல் குறையும். ஆனால், ராகுவுடன் சேர்வதால் கால்வலி, சிறுசிறு விபத்துகள், சொத்து விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட்டு நீங்கும். ராசிக்கு 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நீண்டநாட்களாக வராமல் இருந்த பணம் வந்துசேரும்; கடன் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டு. பயம், பதற்றம் நீங்கும். உங்களின் மதிப்பு உயரும்.

டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 6-ஆம் தேதி மாலை 7 மணி வரை சந்திராஷ்டமம்; எவரையும் விமர்சிக்கவேண்டாம். காரியத்தடைகள் ஏற்படலாம். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சூரியனும், புதனும் 8-ல் வலுவாக இருப்பதால் அரசு காரியங்களில் வெற்றி உண்டு. சில வேலைகளை முடிப்பதில் சரியான திட்டமிடல் தேவை. சொந்தபந்தங்களிடையே கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில், போட்டியாளர்களை சமாளிக்கப் போராடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். திறம்படச் செயல்பட்டு காரியங்களைச் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

'ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவன் ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்’ என்பதை அறிந்த நீங்கள், அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள். உங்களின் சுகாதிபதி சூரியனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் ஒன்று சேர்ந்திருப்பதால் பண வரவு, வீடு- மனை சேர்க்கை, நாடாளுபவர்களின் நட்பு எல்லாம் உண்டு. அரசு வேலைகள் பரபரப்பாக முடியும். செவ்வா யும் ராகுவும் 8-ல் நிற்பதால் தம்பதிக்கு இடையே பிணக்குகள் நேரலாம். சிறு சிறு விபத்து களும் ஏற்படக்கூடும்; மனைவியின் உடல்நிலை பாதிக்கும்.

டிசம்பர் 6-ஆம் தேதி மாலை 7 மணி முதல் 8-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம்; குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சுக்கிரன் 6-ல் தொடர்வதால் வீண் பழி, இனம்புரியாத பதற்றம் ஏற்படலாம். கோபத்தைத் தவிர்க்கவும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் திக்குமுக்காடுவீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் சொற்படி நடப்பது நல்லது. லாப வீட்டில் குரு வலுவாக இருப்பதால், மதிப்பு உயரும்; வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். கலைஞர்கள், நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சாமர்த்தியமாகச் சாதிக்க வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

'ஆற்றுப் பெருக்கும், அரச வாழ்வும் அரை நாழிகைதான்’ என்பதை அறிந்தவர் நீங்கள்; பணம் - காசுக்கு ஆசைப்படமாட்டீர்கள். ராசிக்கு 5-ல் சுக்கிரன் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் சுமுகமாக முடியும். கடன் பிரச்னைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். தம்பதிக்கு இடையே மனம்விட்டுப் பேசுவீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகும். ராசிக்கு 6-ல் சூரியன் வலுவாக இருப்பதால், அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு. உங்களின் ராசிநாதன் புதன் 6-ல் மறைந்திருப்பதால், அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆனாலும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், ஓரளவு பண வரவு உண்டு.

கன்னிப் பெண்கள், முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. ஆன்மிக காரியங்களுக்கு நன்கொடை அளிப்பீர்கள். செவ்வாய் 7-ல் சாதகமாக இருப்பதால், சகோதரர்கள் பாசமாக நடந்துகொள்வர். வீடு- மனை வாங்கவும் விற்கவும் சூழல் சாதகமாக அமையும். டிசம்பர் 9, 10 மற்றும் 11-ஆம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம்; காரியத்தடைகள், மன உளைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் சுமுகமான நிலை காணப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில், வேலை அதிகரித்தாலும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

'ஆபத்தில் அறியலாம் அருமை சிநேகிதனை’ என்ற முதுமொழிக்கேற்ப, நல்லவர்- கெட்டவரை அறிந்து வைத்திருப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபல யோகாதிபதியான செவ்வாயால், சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். என்றாலும் ராகுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் தொலைதூர பயணங்களைத் தவிர்க்கவும்.

சூரியன் சரியில்லாததால் டென்ஷன், கோபம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். டிசம்பர் 11-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் 12, 13 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். சில தருணங்களில், பங்குதாரர்கள் உங்களது ஆலோசனையை ஏற்க மறுப்பர். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு; மேலதிகாரிகளை விமர்சிக்கவேண்டாம். வேலைப்பளுவால் சோர்வு ஏற்படலாம். கலைத்துறையினரை குறிவைத்து வதந்திகள் வரக்கூடும். சிலரின் உள் மனதை உணர்ந்துகொள்ளும் நேரம் இது.

ராசிபலன்

'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு’ என்பதற்கேற்ப, எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரையில் ஓயாதவர் நீங்கள். ராசிக்கு 4-ஆம் வீட்டில் சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்- மனைவிக்கு இடையே பனிப்போர் நீங்கும். வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள், தேடிவந்து தருவார்கள்.

பாதச்சனி தொடர்வதால் வருங்காலம் குறித்த பயம், உடல் சோர்வு வந்துபோகும். 5-ல் ராகுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். அவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், திட்டமிட்டபடி சில வேலைகள் முடிவடையும். அரசு அதிகாரிகள் உதவுவர். கன்னிப் பெண்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கேது வலுவாக இருப்பதால், வேற்றுமொழிக்காரர்கள் உதவுவர். அயல்நாட்டு பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில், பெரிய மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கவும்; வீண் பணவிரயம் ஏற்படலாம். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், பணிகளை விரைவாக முடிக்கப்பாருங்கள். கலைஞர்களின் சம்பளப்பாக்கி கைக்கு வந்து சேரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் வாரம் இது.

ராசிபலன்

'ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கேற்ப, மனம் நினைக்கும் முன்னரே உங்கள் கை கொடுத்துதவும் குணமுடையவர் நீங்கள். ராசிக்கு 2-ஆம் வீட்டில் சுக்கிரன் தொடர்வதால், தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். வராது என்றிருந்த பணம் வந்துசேரும். குரு வலுவாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத்துக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.மகளின் கல்யாணம் சிறப்பாக முடியும். புதன் வலுவாக இருப்பதால், பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். பயணங்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

ராசிக்கு 3-ல் சூரியன் சாதகமாக இருப்பதால் நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 4-ல் செவ்வாய் மற்றும் ராகு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு வரும். அவருடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். சிறுசிறு விபத்துகள் நிகழலாம்; கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களுடனான பனிப்போர் விலகும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கலைத் துறையினரை பழைய நிறுவனங்கள் அழைத்து பேசும். சாதிப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்களை அமைத்துத் தரும் நேரம் இது.

ராசிபலன்

'ஆற்றில் நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்’ என்பதைப் போல், பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் தொடர்ந்து ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால், பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். புதன் சாதகமாக இருப்பதால், அயல்நாட்டு உறவினர்களும் நண்பர்களும் உதவுவர். விழா-வைபவங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு.

செவ்வாயும் ராகுவும் 3-ல் வலுவாக இருப்பதால், உடன்பிறந்தோர் பாசமாக இருப்பர். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். பழைய சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு, தாயாருடனான கோபம் நீங்கும். குரு சரியில்லாததால் வீண் பழி, மன உளைச்சல் வரக்கூடும். ஏழரைச்சனி தொடர்வதால், எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வாகனம் இயக்குவதில் கவனம் தேவை. வியாபாரத்தில், பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். மேலதிகாரியை அனுசரித்துச் செல்லவும். வீண் விமர்சனத்தைத் தவிர்க்கவும். கலைஞர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் குறையும். சிந்தனைத்திறனால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

'ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்’ என்பதற்கேற்ப, இடம்- பொருள்- ஏவல் அறிந்து செயல்படுபவர் நீங்கள். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், தடைப்பட்டிருந்த வேலைகளை செய்துமுடிப்பீர்கள். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கூச்சல்- குழப்பம் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குரு 5-ல் வலுவாக இருப்பதால் பிள்ளை பாக்கியம் உண்டு. மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமை யும். மூத்த சகோதரர், சில தருணங்களில் குறை கூறினாலும் உறுதுணையாக இருப்பார்.

ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச் சுமை, மறைமுக அவமானங்கள், சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். கன்னிப் பெண்கள் சிந்தித்துச் செயல்படுவர். சுக்கிரன் வலுவாக இருப்பதால், வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாளாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும்.  வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில், இதுவரையிலும் பணிகளில் இருந்துவந்த தேக்கநிலை மாறும். கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அனுபவ அறிவை பயன்படுத்தி வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

'ஆளறிந்து ஆசனம் போடு, பல்லறிந்து பாக்கு போடு’ என்றொரு முதுமொழி உண்டு. அதற்கேற்ப, யாருக்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் சரியான முறையில் செய்துகொடுப்பவர் நீங்கள். ராசிக்கு 12-ஆம் வீட்டில் சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால், எந்தவொரு விஷயத்திலும் திடமான முடிவெடுப்பீர்கள். அரசியல் செல்வாக்கும் வி.ஐ.பி-களின் நட்பும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடிவரும். கணவன்- மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பண வரவு திருப்தி தரும். ராகு- கேது சரியில்லாததால், வீண் கவலை, விரக்தி ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் அன்பு குறையாது. கன்னிப் பெண்கள், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி பெற்றிருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். ஆனால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அரசுக்காரியங்களில் அனுகூலம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் தேடி வருவர். அனுபவசாலிகளைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். கலைத் துறையினர் கிசுகிசுக்களை சந்திக்க நேரிடும். கோபதாபங்களை குறைத்துச் செயல்படவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

'ஆழம் தெரியாமல் காலை வைக்காதே’ என்பதற்கேற்ப, எந்தக் காரியத்திலும் கவனத்துடன் செயல்படுபவர் நீங்கள். சூரியனும், புதனும் ராசிக்கு 11-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், வரவேண்டிய பணம் வந்துசேரும். வி.ஐ.பி-களின் உதவி கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. மகளின் கல்யாண விஷயம் சுமூகமாக முடியும்.

செவ்வாய் சரியில்லாததால் வீண் செலவு, கவலை, உடல் உஷ்ணம், தூக்கமின்மை வந்துபோகும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். யோகாதிபதி சுக்கிரன் 10-ல் வலுவாக இருப்பதால், தடைப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கண் எரிச்சல், கனவுத் தொல்லை வரக்கூடும். கேது சாதகமாகத் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு- அந்தஸ்து உயரும். சித்தர்கள் மற்றும் மகான்களின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில், நம்பிக்கைக்கு உரியவர்களது ஆலோசனைப்படி தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்துவீர்கள். பாக்கிகள்  எளிதில் வசூலாகும். உத்தியோகத்தில், சக ஊழியர்கள் மத்தியில் ஈகோ பிரச்னை எழலாம். வேலையில் கவனம் செலுத்துங்கள். கலைஞர்களது எண்ணங்கள் பூர்த்தியாகும். அடி மேல் அடி வைத்து முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

'ஆறு மாத பயணத்துக்கு சோறு கட்ட முடியுமா?’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, நாளைய பொழுதுக்காக இன்றைய சந்தோஷத்தை வீணடிக்காதவர் நீங்கள். குரு சாதகமாக இருப்பதால், புத்துணர்ச்சி ததும்பும். பண வரவு உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மனைவி வழியில் உதவிகள் உண்டு. நவம்பர் 30, டிசம்பர் 1, 2-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; அவசர முடிவுகள் வேண்டாம். 5-ல் நிற்கும் கேதுவால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உதவுவர். பூர்வீகச் சொத்து பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.

அஷ்டமத்துச்சனி தொடர்வதால், எவரையும் முழுமையாக நம்பவேண்டாம். வாகனம் இயக்குவ திலும் கவனம் தேவை. சுக்கிரன் வலுவாக இருப்பதால், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் திருப்தி தரும். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். வெகுகாலமாக போக நினைத்த வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில், சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். கலைத் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் புது அனுபவம் உண்டாகும். புதிய சிந்தனைகள் மனதில் பூக்கும் தருணம் இது.

ராசிபலன்

'ஆணையிட்டவனெல்லாம் அரசனாகிவிட முடியுமா’ என்ற முதுமொழியை அடியற்றி வாழ்பவர் நீங்கள்; எவருடைய அதிகாரத்துக்கும் அஞ்சமாட்டீர்கள்! ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றிருப்பதால், மனம் பக்குவப்படும். மூத்த சகோதரர், உறுதுணையாக இருப்பார். மனைவியின் உடல்நிலை சீராகும். வீண் விவாதங்கள் வேண்டாம். வேற்று மாநிலத்தவரால், உங்கள் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர் சொல்லுக்கு முக்கியத்துவம் தாருங்கள். டிசம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி முதல் 4-ஆம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம்; காரியத்தடைகள், அலைச்சல் வரக்கூடும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மதிப்பு கூடும்; கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை, தந்தையுடன் கருத்துவேறுபாடு வந்துபோகும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால், பால்ய நண்பர்கள் உதவுவர். இஷ்ட தெய்வத்தை வழிபட வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில்,  மற்றவர்களைப் போல் லாபமில்லையே என வருந்தாதீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். உத்தியோகத்தில், உயரதிகாரி சில தருணங்களில் கடுமையாகப் பேசினாலும் உங்களின் மீது பரிவு காட்டுவார். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். அறிவார்ந்த சிந்தனைகளால் வெற்றி பெறும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism