Published:Updated:

மாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology
மாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மாசி மாத ராசிபலன் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷம்

11-ல் சூரியன், 10,9-ல் கேது; 8-ல் குரு; 9,10-ல் சுக்கிரன்;  11-ல் புதன்;  1-ல் செவ்வாய்; 9-ல் சனி;  4, 3- ல் ராகு

மேஷ ராசி அன்பர்களே...

சூரியன், சுக்கிரன், புதன் மாதப் பிற்பகுதியில் ராகு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு புதிய சொத்துகளின் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்புத் தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: பிப்ரவரி: 16,17,22,23,24 மார்ச்: 2,3,4,5,6,14
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 25 பிற்பகல் முதல் 26,27 
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்
பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

ரிஷபம்: 

10-ல் சூரியன், 9, 8-ல் கேது; 7-ல் குரு; 8, 9-ல் சுக்கிரன்;  10-ல் புதன்;  12-ல் செவ்வாய்; 8-ல் சனி;   3, 2- ல் ராகு

ரிஷபராசி அன்பர்களே...

சூரியன், குரு, சுக்கிரன், செவ்வாய், மாத முற்பகுதியில் ராகு ஆகியோர் நன்மைகளைத் தருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது. 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் தோன்றினாலும், அதனால் பாதிப்பு இருக்காது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்: பிப்ரவரி: 18,19,20,23,24,25,27, மார்ச்: 4,5,6,7,8,9
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 28 மார்ச்: 1,2
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.

மிதுனம்:

9-ல் சூரியன், 8, 7 -ல் கேது; 6-ல் குரு; 7, 8-ல் சுக்கிரன்;  9-ல் புதன்;  11-ல் செவ்வாய்; 7-ல் சனி;   2, 1- ல் ராகு

மிதுன ராசி அன்பர்களே...

சுக்கிரன்,செவ்வாய் மட்டுமே நற்பலன்களைத் தருவார்கள். மற்ற கிரகங்களால் அவ்வளவாக நன்மைகள் ஏற்படுவதற்கில்லை. ஆனால், பெரிதாகப் பாதிப்பு இருக்காது. பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். அவருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குச் சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

நல்ல நாள்: பிப்ரவரி: 15,16,17,20,21,22,25,26,27, மார்ச்: 1,2,6,7,8,9,10,11,
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 3,4,5
அதிர்ஷ்ட எண்கள்: 5,7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்
பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய்யில் தீபம் ஏற்றி, அறுகம் புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.

கடகம்:

8-ல் சூரியன், 7, 6 -ல் கேது; 5-ல் குரு; 6, 7-ல் சுக்கிரன்;  8-ல் புதன்;  10-ல் செவ்வாய்; 6-ல் சனி;    1, 12- ல் ராகு

கடக ராசி அன்பர்களே...

குரு, புதன், சனி, செவ்வாய், மாதப் பிற்பகுதியில் கேது ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். எதிலும் வெற்றியே கிடைக்கும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு அனுகூலமாக இருப்பதால், திருமண முயற்சிகள் கை கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடப் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,22,23,24,28, மார்ச் 1,2,3,4,10,11,12,13,
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்  5 மாலை முதல், 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்
பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

சிம்மம்:

7-ல் சூரியன், 6, 5 -ல் கேது; 4-ல் குரு; 5, 6 -ல் சுக்கிரன்;  7-ல் புதன்;  9-ல் செவ்வாய்; 5 -ல் சனி;    12, 11-ல் ராகு

சிம்ம ராசி அன்பர்களே...

மாத முற்பகுதியில் கேது, பிற்பகுதியில் ராகு, மாத முற்பகுதியில் சுக்கிரன் ஆகிய கிரகங்களே சாதகமான நிலையில் உள்ளனர். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் ராகு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,16,23,24,25, மார்ச் 3,4,5,12,13,14
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்  8,9
அதிர்ஷ்ட எண்கள்: 3,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை
பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.  

கன்னி:

6 -ல் சூரியன், 5, 4 -ல் கேது; 3-ல் குரு; 4, 5 -ல் சுக்கிரன்;  6-ல் புதன்;  9-ல் செவ்வாய்; 4 -ல் சனி;    11, 10-ல் ராகு

கன்னி ராசி அன்பர்களே...

சூரியன், சுக்கிரன், புதன், மாத முற்பகுதியில் ராகு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும், குரு பலத்தால் சமாளித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையொப்பமாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

நல்ல நாள்: பிப்ரவரி 14,15,16,17,18,25,26,27, மார்ச் 5,6,7,8,
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்  10,11,
அதிர்ஷ்ட எண்கள்: 5,9

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.