Published:Updated:

மாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology
மாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மாசி மாத ராசிபலன் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

துலாம் :

5 -ல் சூரியன்,  4, 3 -ல் கேது; 2-ல் குரு; 3, 4 -ல் சுக்கிரன்;  5-ல் புதன்;  7 -ல் செவ்வாய்; 3 -ல் சனி;  , 10, 9 -ல் ராகு

துலாராசி அன்பர்களே!

குரு, கேது (மாதப் பிற்பகுதியில்), சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமான பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்குப் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்குப் பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. மாத முற்பகுதியில் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். அவருடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு உங்களை உற்சாகப்படுத்தும். சக ஊழியர்களிடையே பெரிதும் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய அனுபவபூர்வமான ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் பெரிதும் பாராட்டப்படும். 
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்குப் பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளது.

மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
 

நல்ல நாள்: பிப்ரவரி 16,17,18,19,20,21,28, மார்ச் 1,2,8,9,10,
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 13,14 மார்ச்  12,13,14
அதிர்ஷ்ட எண்கள்: 3,4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.

விருச்சிகம்:

4 -ல் சூரியன்,  3, 2 -ல் கேது; 1-ல் குரு; 2, 3  -ல் சுக்கிரன்;  4-ல் புதன்;  6 -ல் செவ்வாய்; 2 -ல் சனி;    9, 8 -ல் ராகு

விருச்சிகராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், செவ்வாய், மாத முற்பகுதியில் கேது ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். உடல் நலனில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,20,21,22,23, மார்ச் 3,4,5,10,11,
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி  15,16
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி
பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

தனுசு

3 -ல் சூரியன்,  2, 1 -ல் கேது; 12-ல் குரு; 1, 2  -ல் சுக்கிரன்;  3-ல் புதன்;  5 -ல் செவ்வாய்; 1 -ல் சனி;   8, 7 -ல் ராகு

தனுசுராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன் ஆகியோர் மட்டுமே சாதகமாக உள்ளனர். அனைத்து விஷயங்களிலும் சற்றுப் பொறுமையாக இருப்பது அவசியம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். நவீன ரக மின்சார, மின்னணுப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர்களில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம்  உண்டாகும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். 
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவர்கள், மனத்தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,16,22,23,24, மார்ச் 5,6,7,13,14
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 17,18,19 
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

மகரம்:

2 -ல் சூரியன்,  1, 12 -ல் கேது; 11-ல் குரு; 12, 1 -ல் சுக்கிரன்;  2-ல் புதன்;  4 -ல் செவ்வாய்; 12 -ல் சனி;   7, 6 -ல் ராகு

மகரராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், புதன் (ஓரளவு), ராகு (மாதப் பிற்பகுதி) ஆகியோர் நன்மை செய்வார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால், திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல சம்பந்தம் அமைய வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பதுடன், அதனால் ஆதாயமும் அடைவீர்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் சில அனுகூலங்கள் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

நல்ல நாள்: பிப்ரவரி 15,16,17,18,19,23,24,25,26,27, மார்ச் 8, 9,
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 19, 20, 21,
அதிர்ஷ்ட எண்கள்: 6,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கும்பம்:

1 -ல் சூரியன்,  12, 11 -ல் கேது; 10 -ல் குரு; 11, 12 -ல் சுக்கிரன்;  1-ல் புதன்;  3 -ல் செவ்வாய்; 11 -ல் சனி;   6, 5  -ல் ராகு

கும்பராசி அன்பர்களே!

கேது (மாதப் பிற்பகுதி), ராகு (மாத முற்பகுதி), செவ்வாய், சுக்கிரன், சனி ஆகியோரால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பழகவும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, அன்னியோன்னியம் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்பத்தில் பிள்ளைகளால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடைய தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யவும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குத் தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,20,21,22,23,24,28, மார்ச் 1,2,3,10,11,12
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 22, 23
அதிர்ஷ்ட எண்கள்: 1,9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்
பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.

மீனம்:

12-ல் சூரியன்,  11, 10 -ல் கேது; 9 -ல் குரு; 10,11 -ல் சுக்கிரன்;  12-ல் புதன்;  2 -ல் செவ்வாய்; 10 -ல் சனி;   5, 4  -ல் ராகு

மீனராசி அன்பர்களே!

கேது (மாத முற்பகுதி), குரு, சுக்கிரன் (மாதப் பிற்பகுதி) ஆகியோரால் நன்மைகள் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், சூரியன் சாதகமாக இல்லாததால், குடும்பத்தில் தந்தை வழியில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.  

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்குப் பதவி மாற்றமும், இடமாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டுப் படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,20,22,27,28, மார்ச் 3,4,9,12,13,14
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 24,25
அதிர்ஷ்ட எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
 

அடுத்த கட்டுரைக்கு