Published:Updated:

ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்... மேஷம் முதல் கன்னிராசி வரை

ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்... மேஷம் முதல் கன்னிராசி வரை
ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்... மேஷம் முதல் கன்னிராசி வரை


ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்.


ராகு பகவான் அருளும் பலன்கள்:


பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாகச் செயல் படுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள். 
தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்; வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். போட்டியாளர்களே திகைக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். 
உத்தியோகத்தில், அலட்சியப்படுத்திய மேலதிகாரி, உங்களுக்கு இணக்கமாக இருந்து, ஆதரவு தருவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். 
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை, உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்தப் பணிகளையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேதுபகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார். சமயோசித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத்துணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பணப்பற்றாக் குறை நீங்கும். 


உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும். 
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒரு தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வை தருவதாகவும், உங் களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகலமும் நன்மையாகவே அமையும்.

ரிஷப ராசி அன்பர்களே, 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரம் பல நன்மைகளை வாரி வழங்கப்போகிறது. 

ராகு பகவான் அருளும் பலன்கள் 


ராசிக்கு 3-ல் இருந்தபடி புதிய திருப்பங்களுடன், பணவரவு, பிரபலங்களின் நட்பு என்று பலன்களைத் தந்த ராகு, தற்போது 2-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். ஆகவே, தடைப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாக முடியும். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மகனுக்கு உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். 
வியாபாரத்தில் பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். முன்பு போல் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புதுப் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட்,  கமிஷன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். 
உத்தியோகத்தில், உங்களுக்குத் தொல்லை தந்த மேலதிகாரி, இனி உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வார். அவரால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்களது பொறுப்பு உணர்ச்சியைக் கண்டு, சலுகைகளுடன் பதவி உயர்வும் தருவார். 

கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை ராசிக்கு 9-ல் இருந்த கேது, தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பைத் தந்த துடன், அவருடன் தேவையற்ற மனஸ்தாபங் களையும் ஏற்படுத்தினார். தற்போது கேது 8-ல் இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதிக்குக் குறைவிருக்காது. குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். 
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, அலைச்சலையும் வீண் அச்சத்தையும் ஏற்படுத்துவது போல் இருந்தாலும், அதீத ஆதாயத்தையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.
தினமும் விநாயகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள். அருகிலுள்ள ஆலயம் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; வாழ்க்கைச் செழிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு, கேது சஞ்சாரம் 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் மாறுபட்ட பலன்களை அருளப் போகிறார்கள். தெய்வ பலம் கைகூடும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அவரின் கல்யாணத்தை உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள். பண வரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். 
வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என நம்பி, எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அதேபோல், பெரிய முதலீடுகளையும்  தவிர்க்கவும். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். 
உத்தியோகத்தில், உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் இனி தாமதமின்றி கிடைக்கும். 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைக் குறை கூறியவர்கள் இனி புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். 
வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயரும். 
மொத்தத்தில் இந்த ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதார்த்தமான முடிவுகளால் முன்னேற வைப்ப தாக அமையும். 
உங்களுக்குப் பெருமாள் வழிபாடு துணை சேர்க்கும். எதிர்காலம் சிறக்க, திருவோண விரதம் இருந்து பலன் பெறுங்கள்.

கடகராசி அன்பர்களே!  13.2.19 முதல் 31.8.20 வரையிலான காலகட்டத்தில், ராகு-கேது சஞ்சாரம், பல நல்ல தீர்வுகளை உங்களுக்கு அளிக்கப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள் 

ராகு, இப்போது உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்கிறார். நிம்மதி பிறக்கும். முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியம் கூடும்.  எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். இனி நிம்மதியாக உறக்கம் வரும். குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் விலகி, சந்தோஷம் குடிகொள்ளும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோர் இனி ஒத்தாசை யாக நடந்துகொள்வார்கள். 
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பணம் வரும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வகையால் அதிக லாபம் கிடைக்கும். 
உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்போது கிடைக்கும். சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள். 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். 
வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கை யாளர்களின் தேவைகளை உணர்ந்து பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள்.
உத்தியோகத்தில், உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். 
மொத்தத்தில் இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி, உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்திச் செல்வதாக அமையும். 
உங்களுக்கு சிவ தரிசனமும் பிரதோஷ வழிபாடும் பலம் சேர்க்கும். பிரதோஷ தினத்தில் காப்பரிசி சமர்ப்பித்து, நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் எண்ணற்ற மாற்றங்களை அருளப்போகிறது.
ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் இருந்த  ராகு, இப்போது ராசிக்கு லாப வீட்டுக்கு வருகிறார். புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் இருக்கும். உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். குலதெய்வப் பிராத்தனையை நிறைவேற்றுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். 
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். 
உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த  மோதல் போக்குகள் விலகும். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

 கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.பிள்ளைகளால் உங்கள் புகழ் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். 
வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். தொழில்ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். 
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சில குழப்பங்களை அளித்தாலும், திடீர் யோகத்தை அளிப்பதாகவும் அமையும்.
அனுதினமும் துர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். துன்பங்களும் தடைகளும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

கன்னி ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் புதுப்பயணத்தை வழங்கப் போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடை வீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். பணவரவு உண்டு. சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். குடும்ப வருமானம் உயரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. 
வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பற்று-வரவை உயர்த்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை அழகுபடுத்துவீர்கள். புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். 
உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் பழியும் வரக்கூடும். 
சிலருக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கலாம். புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சிலருக்கு, மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.  வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 
வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களுக்கு வேலைச்சுமையை தந்தாலும், விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வழிபடுங்கள்; அன்னதானம் செய்யுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.