Published:Updated:

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்... துலாம் முதல் மீனம் வரை

துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்... துலாம் முதல் மீனம் வரை
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்... துலாம் முதல் மீனம் வரை

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 


துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.

ராகு அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சுப காரியங்களால் வீடு களைகட்டும்.

குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய வழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம்  அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.  பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும்.  
வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத உதவியால் தொழில் லாபம் பெருகும். ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, மருந்துப் பொருள்களால் லாபம் அதிகரிக்கும். 


உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். வேலைச்சுமை குறையும்.  சிலருக்கு தகுதி, திறமைக்கேற்ற உத்தியோகம் புகழ் பெற்ற நிறுவனத்திலிருந்து கிடைக்கும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 4 - ல் இருந்த கேது, இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும்; சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சிலர் சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 
வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் நட்பு வலுப்படும். 
மொத்தத்தில் இந்த ராகு கேதுப் பெயர்ச்சி,  மனத்தாங்கலுடன் திகழ்ந்த உங்களை மகிழவைப்பதாக அமையும். 
அனுமன் வழிபாடு உங்களுக்கு உற்றத்துணையாகும். அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள் வெற்றி உண்டாகும்.


விருச்சிக ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்குச்  சவாலையும் சந்தோஷத்தையும் ஒருங்கே வழங்கப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

உங்கள் ராசிக்கு 9 - ல் இருந்த ராகு பகவான், இப்போது 8- ல் சென்று மறைகிறார். இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளை பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். தந்தையுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலை நீங்கும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும். வசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டை விட்டு, வேறு வீட்டுக்கு மாறுவீர்கள். 

வியாபாரத்தில், எதையும் யோசித்து முடிவெடுக்கவேண்டும். இருப்பதை வைத்து லாபத்தைப் பெருக்கவும். கமிஷன், ஷேர் மார்க்கெட் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கை யாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம். 
உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே உங்களை நம்பி இனி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வீண் குழப்பங்களுக்கு ஆட்படாமல் செம்மையாகச் செயல்படுவீர்கள். 

கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 3 - ல் இருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2 - ல் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். மகள் அல்லது மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பல சாதனைகளைச் செய்வீர்கள். சிலருக்கு அயல்நாட்டுப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். 
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரி அனுசரணையாக இருப்பார்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சிலநேரம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், ஓரளவு பணவரவையும், மகிழ்ச்சி யையும் தருவதாக அமையும்.
முருக வழிபாடு உங்களுக்குத் துணை நிற்கும். விசாகத்தன்று நெய்தீபம் ஏற்றி வைத்து வேலவனை வழிபட்டால், வெற்றிகள் கைகூடும்.


தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் நல்லபல அனுபவங்களைத் தரப்போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தெளிவு பெறுவீர்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். உற்சாகத்துடன் வலம்வருவீர்கள்.

குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் வாழ்க்கைத்துணையுடன் சின்னச் சின்ன விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.

பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். 
வியாபாரத்தில்  உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். அவரால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பதவி-சம்பள உயர்வுகளும் உண்டு. 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த கேது, இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்கிறார். சூழலுக்கு ஏற்ப பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்ததே, இனி அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, அவர்களின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை மற்றும் படிப்பு விஷயத்துக்காக அதிகம் போராட வேண்டியது வரும். உடல் நலத்தில் கவனம் 

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. 
மொத்தத்தில் இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி புது அனுபவங்களையும் அதன் மூலம் முன்னேற் றத்தையும் தருவதாக அமையும். 
ராம நாம பாராயணமும் ஸ்ரீராம வழிபாடும் நன்மைகளை அளிக்கும்.

மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டங்களையும் திடீர் திருப்பங்களையும் வழங்கப்போகிறார்கள்.'

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்து அமர்கிறார். இனி எல்லாவற்றிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்கள், உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கொடுப் பார்கள். திருமணம் கூடி வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
வியாபாரத்தில், பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். புது அணுகுமுறையால், விளம்பர யுக்தியால் லாபத்தைப் பெருக்குவீர்கள். மருந்து வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களின் யோசனைகளும், திட்டமிடலும் பாராட்டு பெறும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே இருந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். பேச்சில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சாந்தமாகப் பேசும் அளவுக்குப் பக்குவப்படுவீர்கள். இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். 

வியாபாரத்தில், பற்றுவரவு உயரும். வேலையாள்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். 
உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கித் தருவதாக அமையும். 
மாலவனை மனதால் பிரார்த்தித்துத் தொழ, வாழ்க்கை மலரும். சனிக் கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி அணிவித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.

கும்பராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் பல மாற்றங் களையும் மகத்துவங்களையும் அருளப் போகிறார்கள். 

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகுபகவான். இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன் - மனைவிக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். 5 -ம் வீட்டில் ராகு அமர்வதால், சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன், முன்கோபம் குறையும்.

குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 
வியாபாரத்தில், அனுபவ அறிவால் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். ஹோட்டல், இரும்பு, கமிஷன், எண்ணெய் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களுக்கு உதவியாகச் செயல்படுவார். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். 

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மூத்த சகோதரர் உதவுவார். வங்கியில் லோன் போட்டு வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள்.

பேச்சில் தெளிவு பிறக்கும். வெகுநாள்களாகப் போக நினைத்த வெளிமாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 
வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 
உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக் கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. 
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி காலத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டாலும், கேதுவால் உங்கள் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களைப் போக்கும்.  வெள்ளி-செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை வழிபடுவதால் சுபிட்சங்கள் பெருகும்.

மீன ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்கு, நீங்கள் எதிர்பாராத பலன்களை வாரி வழங்கப் போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த ராகுபகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்து அமர்வதால், மன நிம்மதியைத் தருவார்.  தடைப்பட்ட வேலைகளை இனி பக்குவமாய்ப் பேசி முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்; அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். உடன்பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் பாசமாக நடந்துகொள்வார்கள். 

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசிப் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. 
உத்தியோகத்தில், மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. தடைகள் நீங்கும்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு 11-ல் இருந்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் அமர்கிறார்.எந்த வேலையையும் திறம்படச் செய்து முடிக்கும் மனோபலத்தைத் தருவார். பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 

வியாபாரத்தில், அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். 
உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்; பொறுமையுடன் இருந்தால் பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்வை போராடிப் பெறுவீர்கள்.

மொத்தத்தில், இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். 
சிவ வழிபாடு, உங்களின் வாழ்க்கையைச் சிறக்கவைக்கும். கோயிலில் அன்னதானம் வழங்குங்கள்; வளம் பெருகும்.