Published:Updated:

ராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்! #Astrology

ராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்! #Astrology
ராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்! #Astrology

''வலுப்பெற்ற ராகுவின் தசையில் ஒருவருக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாகும். எவராலும் எதிர்க்க முடியாத, வெல்ல முடியாத அமைப்பில் ஜாதகர் இருப்பார். இதுபோன்ற பலம் வாய்ந்த ராகுவின் தசை ஒருவரை சமுதாயத்தில் மிகவும் பிரபலமாக்கி உச்சத்தில் கொண்டு செல்லும்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி. அவரே தொடர்ந்து ராகு கிரகத்தைப் பற்றிக் கூறிய தகவல்கள் இங்கே உங்களுக்காக...

''உலக வாழ்க்கையில் எதையும் அனுபவிக்கக்கூடிய தன்மையைத் தருபவர் என்பதால், ராகு பகவானை 'போகங்களுக்குக் காரகன்' என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. 'சாயா கிரகம்' என்று சொல்லப்படும் இருள் கிரகமான ராகுதான் ஜோதிடத்தில் கணிப்பதற்கு மிகவும் சிக்கலான கிரகமாகும்.

குப்பையில் கிடக்கும் ஒருவரை, கோபுரத்தின் உச்சியில் வைப்பவர்அவர்தான். சுபத்துவம் அடைந்த ராகு தனது தசையில் ஒருவருக்கு அளவற்ற பணத்தைத் தந்து அவரைப் பிரபலப்படுத்தவும் செய்வார்.

ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலவீனம் அடைந்து கெட்டிருந்தாலும், ராகு ஒருவர் மட்டும் சுபமாக வலுவடைந்து, அந்த தசை நடந்தால் ஜாதகர் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும், வாழ்வில் நல்ல மேலான நிலைக்கு வந்தே தீருவார்.
ராகு பத்தாமிடமான தொழில் ஸ்தானாதிபதியோடு தொடர்பு கொள்ளும்போது  ஜாதகரை, சினிமா, தொலைக்காட்சி போன்ற மீடியாத் துறைகளில் ஈடுபடுத்துவார். ஒருவரை அரசியல்வாதியாக மேடைகளிலோ, நடிகராகத் தொலைக்காட்சி, சினிமாக்களிலோ பிரபலப்படுத்துபவார்.

ஆட்டோ டிரைவர்கள், டாக்சி ஓட்டுநர்கள் போன்ற ஓடிக்கொண்டே இருக்கும் தொழில் செய்பவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். ஓட்டுபவர்கள் மட்டுமின்றி ஒரு வாகனத்தில் பணியாற்றும் கண்டக்டர்கள், உதவியாளர்கள் போன்றவர்களும் தொழில் ஸ்தானத்தில் அவரின் தொடர்பைப் பெற்றவர்கள்தான்.

கெடுபலன் தரும் நிலையில் உள்ள ராகுவால் ஒருவருக்கு வெளியே சொல்ல முடியாத இனம் புரியாத மனக்கலக்கம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. பாபத்துவம் பெற்ற அந்த தசை நடக்கும்போது ஒருவர் குழப்பமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குழப்புவார்.

சுபத்துவமுள்ள ராகு கடலும், கடல் சார்ந்த இடங்களையும் குறிப்பவர் என்பதால்,அந்த  தசை புத்திகளில் ஒருவரை வெளிநாடுகளில் கடற்கரை ஓரமாக வேலை செய்ய வைப்பார். கடகத்தில்  இருக்கும் நிலையில் கடகம் ஜலராசி என்பதால் ஒருவருக்கு இந்தப் பலன் நடக்கும்.

பள்ளிப்பருவத்தில் நடக்கும் தசை, ஒருவருக்கு அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்து, படிப்பில் ஆர்வக் குறைவையோ அல்லது கல்வித் தடையையோ தரும். அவர், தனது தசை புக்திகளில் அந்நிய தேசம் சென்று பொருள் தேட வைப்பார். 

சர ராசி என்று சொல்லப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் வீடுகளில் வலுவாக அமர்ந்த ராகு, தங்களது தசை, புக்திகளில் ஜாதகரை வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பார். மேலும் ஒரு முக்கியமான காரகத்துவமாக பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளுதல், குறிப்பாக ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு, உருது கற்றுக்கொள்ள வைப்பார். 

 ராகு,கேதுக்களின் தசை,புக்தி நடக்கும்போது ஒருவருக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வரும். ஜோதிடம் கற்றுக் கொள்ள வாய்ப்பும் கிடைக்கும் இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு அமைப்பு, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகுவின் தசை நடப்பில் இருந்தால் அக் குடும்பத்தில் பிரிவு, துயரம், போன்ற பலன்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

ராகு, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், போன்ற ஸ்தானங்களில் இருப்பது மட்டுமே இந்த அமைப்புக்கு விதிவிலக்கு. ஸ்பெகுலேஷன் துறை எனப்படும் பங்குச்சந்தையிலும் பொருள் சேர்க்க வைப்பவர் இவர்தான்.

நிழல் கிரகமான ராகு, தான் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும், தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைத் தரும் கிரகம் என்பதால், பன்னிரண்டு லக்னத்தாருக்கும் பொதுவாக, அந்த லக்னத்துக்கு நண்பர்களின் வீடுகளில், நண்பர்கள் பார்வையில் மற்றும் நண்பர்களோடு இணைந்திருக்கும் அமைப்பில் தனது தசையில் நன்மைகளைத் தருவார்.

இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்போனால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகள் ஒருவரின் லக்னத்துக்கோ, ராசிக்கோ மூன்று, ஆறு, பத்து, பதினொன்று, பன்னிரண்டாமிடங்களாக அமைந்து அங்கு ராகு அமரும்போது ராஜயோகத்தைச் செய்வார்.
மேற்சொன்ன வீடுகளில் ஏதேனும் ஒன்றில் ராகு அமர்ந்து, ராகுவுக்கு வீடு கொடுத்தவன் சுபமாக வலுவடைந்து, ராகு சுபருடன் குறிப்பிட்ட டிகிரியில் இணைந்து, சுபரின் பார்வை பெற்று, நல்ல சார அமைப்புடனும், நவாம்சத்திலும் வலுப்பெற்றிருக்கும் நிலையில் ஒருவரை அரச நிலைக்கு உயர்த்துவார்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் ராகு இருந்து, அந்த பாவகம் லக்னத்துக்கு 3, 11 - ம் இடங்களாக அமைந்து, அந்த ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று, ஐந்து அல்லது ஒன்பதுக்குடையவன் சாரத்தில் இருக்கும் ராகுவின் தசை வருமானால் அந்த ஜாதகர் ஏழ்மையான நிலையில் பிறந்திருந்தாலும் மறைமுகமான வழியில் கோடிகளைச் சம்பாதிப்பார் என்பது உறுதி.
பன்னிரண்டு லக்னத்தவர்களுக்கும் ராகு நன்மை செய்ய வேண்டு மெனில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ராகு சுபரோடு சேர்ந்து, சுபர் வீட்டில் அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்தவரும் வலிமை பெற்று, செவ்வாய், சனியின் இணைவையோ, தொடர்பையோ, பார்வைகளையோ ராகு பெறாமல் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

ராகு, கேதுக்களிலும் ஒரு நுட்பமான வித்தியாசமாகச் சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ராகு நன்மைகளைச் செய்வார்.
செவ்வாயின் நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியோரின் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் மற்றும் மேஷம், விருச்சிகம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்குக் கேது நன்மைகளைச் செய்வார்.