Published:Updated:

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை!

மீன ராசி அன்பர்களே!... எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார்.

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை!
இந்த வார ராசிபலன் பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை!

மேஷராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார வசதிக்கு குறைவிருக்காது. புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.  உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களிடம் கண்டிப்புக் காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

வேலை இல்லாதவர்களுக்கு முயற்சியின் பேரில் நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். 

கலைத்துறையினருக்குக் கடுமையான முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று அக்கறையுடன் படிப்பீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 2,3,
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,5
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 25 பிற்பகல் முதல் 26, 27 

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் காலையில் பாராயணம் செய்யலாம்.

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டு விலகும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 25,27
அதிர்ஷ்ட எண்கள்: 1,4,6
சந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 28 மார்ச்: 1,2

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: உறவினர்களால் சங்கடங்கள் எதுவும் நேராமல் இருக்க கீழ்க்காணும் திருமறைக்காடு தேவாரப் பதிகத்தை தினமும் காலையில் பாராயணம் செய்யலாம்.

ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய் நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன்தானே

மிதுனராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். 

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும்.

வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிரத்தை எடுத்துப் படித்தால்தான்  சிறப்பான மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு  அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 25,26,27, மார்ச்: 1,2,
அதிர்ஷ்ட எண்கள்: 6,7,9
சந்திராஷ்டம நாள்: மார்ச் 3

வழிபடவேண்டிய தெய்வம்: நடராஜர்
பரிகாரம்: உடல் ஆரோக்கியம் மேம்பட, கோயில் என்று போற்றப்படும் சிதம்பரம் தலத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய கீழ்க்காணும் தேவாரப் பாடலை தினமும் காலையில் பாராயணம் செய்யலாம்.

பத்தனாய்ப் பாட மாட்டேன்  பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே

கடகராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும் கிடைத்துவிடும். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர்களின் அறிவுரையும் ஆலோசனையும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:  28, மார்ச் 1,2,3
அதிர்ஷ்ட எண்கள்:1,4,9

வழிபடவேண்டிய தெய்வம்: சரஸ்வதி 
பரிகாரம்: மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கவும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவும் கம்பர் இயற்றிய சரஸ்வதிஅந்தாதியில் கீழ்க்காணும் பாடலை தினமும் காலையில் பாராயணம் செய்யலாம்.

தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள் ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ்வெளுத்த
பூவரும் மாதின் அருள்கொண்டு ஞானம் புரிகின்றதே

சிம்மராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகி விடும்.

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.  வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ  நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிம்மதியும் தரும் வாரம். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 25, மார்ச் 3
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி 
பரிகாரம்: அலுவலகத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.

கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். சக வியாபாரிகள் சொல்வதைக் கேட்டு அதிக முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு  சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: 25,26,27
அதிர்ஷ்ட எண்கள்:2,5,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: வியாபாரத்தில் வியாபாரம் பெருகவும், தேவையற்ற நஷ்டங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் திருமங்கையாழ்வாரின்கீழ்க்காணும் திவ்யபிரபந்த பாசுரத்தைப் பாராயணம் செய்யலாம்.   

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

துலாராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.
மாணவர்கள்  தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் சற்று வேலைச்சுமை கூடினாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 28, மார்ச் 1,2
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
பரிகாரம்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள், வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க கச்சியப்ப சிவாசார்யர் இயற்றிய கந்த புரானத்தின் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.


மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! 
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! 
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! 
அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி!

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்தும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச் 3
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,4

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கவும், வருமானம் அதிகரிக்கவும் திருக்கஞ்சனூர் தலத்தில் நாவுக்கரசர் பெருமான் அருளிய பதிகத்தில் கீழ்க்காணும்  இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.


விண்ணவனை மேருவில்லாய் உடையான்றன்னை மெய்யாகிப் பொய்யாகி விதியானானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப் பிணமிடுகாடுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும் இருவிசும்பு இருநிலமுமாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே

தனுசுராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. 

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினர் எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கேற்ற வருமானமும் கிடைப்பதால் இதுவரை ஏற்பட்டிருந்த சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனை தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: பிப்ரவரி 27, 28, மார்ச் 2
அதிர்ஷ்ட எண்கள்: 1,4,5

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படவும், அதிகாரிகளின் ஆதரவு பெறவும் கம்பராமாயணத்தில் கீழ்க்காணும் பாடலைப் பாராயணம் செய்யலாம்.
அனுமனைப் போற்றும் கம்பரின் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.


அன்னை கை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலை நீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந் தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசிபெற்ற மாருதி பாதம் போற்றி

மகரராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தமுடியாது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். பயணங்களின்போது கொண்டு செல்லும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு முயற்சியின் பேரில் வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 25,26,27
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
பரிகாரம்: குடும்பத்தில் சகோதரர்களுடன் சுமுகமான உறவு மேம்பட கந்தசஷ்டிக் கவசத்தின் இந்தத் தொடக்கப் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்தசஷ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

கும்பராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழியில் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும். 

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.படிப்பு சம்பந்தமான செலவுகளுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 28, மார்ச் 1,2,3
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,5

வழிபடவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி

பரிகாரம்: உடல் ஆரோக்கியம் மேம்படவும் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகவும் அபிராமி அந்தாதியின் கீழ்க்காணும் பாடலைப் பாராயணம் செய்யலாம்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே!
பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலஙகளைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். 

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகள் கொள்முதல் செய்யவும் வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மாணவர்கள் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆசிரியரின் அறிவுரை கேட்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 27,28, மார்ச் 3
அதிர்ஷ்ட எண்கள்: 4,5,9
சந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 25

வழிபடவேண்டிய தெய்வம்: ராஜமாதங்கி 
பரிகாரம்: வரப்போகும் தேர்வுகளை சிறப்பாக எழுதவும், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும் சரஸ்வதி அந்தாதியின் கீழ்க்காணும் பாடலைப் பாராயணம் செய்யலாம்.

வைக்கும் பொருளும்இல் வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே