ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா?

ஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா?

ஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா?

? என் நெருங்கிய உறவினரின் மகன் - மருமகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.  இருவரும் ஒரே ராசி, ஒரே லக்னம், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் இப்படியான நிலைமையா, இந்தப் பிரச்னை தீர்வதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- ர.கௌசிகன், பெங்களூரு


!     ஒரே லக்னம், ஒரே மாதத்தில் பிறந்த ஜாதகர்களைச் சேர்க்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறவில்லை. நட்சத்திரப் பொருத்தம், தோஷ சாம்யம், மத்திம ரஜ்ஜு, செவ்வாய் தோஷம் ஆகிய விஷயங்களை நன்றாகப் பரிசீலித்து, தோஷம் இல்லையெனில், அந்த ஜாதகங்களைச் சேர்க்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நீங்கள் அனுப்பியுள்ளவற்றில், கணவர் ஜாதகத்தில் - ஐந்துக்கு உரிய சூரியன் 11-ல் இருக்கிறார். அங்கிருந்தபடி 7-ம் பார்வையால் தன்னுடைய வீட்டைப் பார்க்கிறார். மேலும் 5-க்கும் 11-க்கும் இடையில் சூரியனும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். அதேபோல், ஒரே லக்னமாகவும் ஒரே மாதமாகவும் இருப்பதால், பெண் ஜாதகத்திலும் 5-க்கு உரிய சூரியன், 11-ல் இருந்து 5-ம் வீட்டைப் பார்க்கிறார்.

ஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா?

ஜோதிட பிரமாணப்படி, பாவாதிபதி சுபராக இருப்பின் சுபத்தன்மை உடையவராகவும் அசுபராக இருப்பின் அசுபத்தன்மை உடையவராகவும் இருப்பார் என்று சாஸ்திரம் கூறுகிறது. இருவரின் ஜாதகத்திலும் சூரியன் 5-ம் வீட்டைப் பார்ப்பதாலும், ஆணின் ஜாதகத்தில் 5-ல் சூரியன் இருப்பதாலும்,  ஆண் வாரிசுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் பாவாதிபதியே பாவத்தைப் பார்ப்பதை `பாவ திருஷ்டி’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே உரிய பரிகாரங்கள் செய்தால், இருவருக்குமிடையே அந்நியோன்யம் ஏற்பட்டு, ஆண் வாரிசு உண்டாக வாய்ப்பு உண்டு. சூரியனுக்கு உரிய பரிகார பூஜைகளைச் செய்வது நல்லது.

? என் மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்று தெரிய வில்லை. மேலும், அவருடைய கல்வி மற்றும் எதிர்காலம் குறித்தும் அறிய விரும்புகிறேன்.

- சூரியரெங்கன், ஜெயங்கொண்டம்


!  ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் அமையப்பெற்றால் செவ்வாய் தோஷம். அதேநேரம், குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றாலோ, ராகு-கேதுவின் சேர்க்கை பெற்றாலோ... இந்த நிலையை `பரிகாரச் செவ்வாய்’ என்று கூறுவர்.

தங்கள் மகளின் ஜாதகத்தில், லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் தோஷம் இல்லை. அடுத்து லக்னாதிபதி சுக்கிரன் 2-ல் இருக்கிறார். லக்னத்துக்கு உரியவர் 2-ல் இருப்பது, `அயக்ன தனலாப’ யோகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிகம் சிரமப்படாமல் செல்வச்சேர்க்கை உண்டாகும். செல்வம் வந்துவிட்டால் பெயரும் புகழும் தானாகவே வந்துவிடும். கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருந்தால்தான் சேர்ந்த செல்வத்தை மேலும் பெருக்கிக் காப்பாற்ற முடியும். 2-ல் சுக்கிரன் இருப்பதால் சங்கீதத்தில் தேர்ச்சி, மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் ஏற்படும். முகத்தில் ஒரு தெய்விகக் களை தவழும். பெற்றவர்களுக்கும் புகுந்தவீட்டினருக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வார்.  அனைத்து வகைகளிலும் மிகச் சிறப்பான ஜாதகம் என்பதால் கவலை தேவையில்லை.

? என் பேரன் பி.டெக். ஆட்டோமொபைல் படித்திருக்கிறார். எனினும் சரியான வேலை அமையவில்லை. அவர் மேற்கொண்டு படிப்பாரா அல்லது படிப்புக்கேற்ற வேலையில் அமர்வாரா?

- டி.வி.பகவதி


!  தங்கள் பேரனின் ஜாதகம் சிறப்பான ஜாதகம்தான். இருப்பினும் சந்திரன் 6-ம் வீட்டில் இருப்பதால், மனநிறைவு என்பது இருக்காது. படித்தவுடன் வேலை கிடைப்பதை ஒரு யோகம் என்றே தற்காலத்தில் கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பல நிறுவனங்களில், நன்றாகப் படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்து, அவர்களுடைய ஒட்டுமொத்தத் திறமையையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு வேலையில்லை என்று அனுப்பிவிடுகிறார்கள். 

தங்கள் பேரனின் ஜாதகத்தில் மனோகாரகனாகிய சந்திரன் 6-ல் மறைந்திருக்கிறார். 2-ம் வீட்டில் சனியும் கேதுவும் குளிகனுடன் சேர்ந்து  அமர்ந்துள்ளனர். தன ஸ்தானம் சுமாராகவே இருக்கிறது. மேலும், 8-ல் இருந்தபடி செவ்வாயும் ராகுவும் தன ஸ்தானத்தைப் பார்க்கிறார்கள். பாபக் கோள்கள் தன ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் தனக் காரகராகிய குரு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதாலும், சற்றே சிரமமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனினும், சுக பாக்கியாதிபதியாகிய சுக்கிரன் 11-ம் வீட்டில் புதனுடன் சேர்ந்திருக்கிறார். தற்போது புதன் தசை நடைபெற்று வருகிறது. அவருக்கு 27 வயது முடிந்து ஆறு மாதங்கள் கடந்த பிறகு, செல்வந்தர் யோகம் ஏற்படும். அப்போது வேலை வாய்ப்புகளெல்லாம் பிரகாசமாக அமையும். இப்போதைக்கு, கிடைக்கும் வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, திறம்பட பணியாற்றச் சொல்லுங்கள். மற்றபடி வேறு பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

? என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும், தடைகள் நீங்க ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- டி.என்.சுவாமிநாதன், திருப்பூர்


!  தங்கள் மகனின் ஜாதகத்தைப் பார்த்தபோது நல்ல ஜாதகமாகத்தான் தெரிகிறது. மகா நட்சத்திரங்களாகிய மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகியவை அனைத்து நட்சத்திரங் களுக்கும் பொருந்தும். இவற்றில் ஒன்றைப் பிறந்த நட்சத்திரமாகப் பெறுவது, கடவுளின் அனுக்கிரகமே.

தங்கள் மகன் மகம் நட்சத்திரத்தில் பிறந்தும் அவருக்கு இன்னமும் கல்யாணம் நடக்கவில்லை என்றால், உரிய நேரத்தில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தற்போது அவருக்குச் சந்திர தசை நடந்து வருகிறது. சந்திர தசை நல்லதுதான். காரணம், லக்னத்துக்கு 9-க்கு உடைய சந்திரன், 10-ம் வீட்டில் அமையப் பெற்றுள்ளார்.

இருப்பினும் மகம் நட்சத்திரத்திலுள்ள சந்திரன், கேதுவின் அமைப்பைப் பெற்றிருப்பதால், குறைந்தது மூன்று லட்சம் முறை `சம்மோஹன ஜனவசிய சுயம்வர கலா பார்வதி’ மந்திரத்தை ஜபித்து, அதற்கு உகந்த ஹோமம், போஜனம் ஆகியவற்றை முறைப்படி செய்யவேண்டும். அதன் மூலம் தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் நடைபெறும்.

மேலும், கல்யாணக்காரகராகிய சுக்கிரன் லக்னத்தில் இருந்தபடி தன் வீட்டைப் பார்வை செய்கிறார். அதேபோல், கல்யாணத்துக்கு அடிப்படைக் காரணமாகிய வம்சவிருத்தியை ஏற்படச் செய்யும் புத்திரக் காரகர் குரு, களத்திர ஸ்தானத்தையும் புத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். எனவே சந்ததி உருவாவதற்கான வாய்ப்புகள் வலிமையாக உள்ளன. எனவே, தகுந்த வைதிக அந்தணர்களைக் கொண்டு, ‘சுயம்வர கலா பார்வதி ஹோமம்’ செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும்.

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com