`இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மூத்த சகோதரிகள்மீது பாசமுள்ளவர், முகத்தில் மரு உள்ளவர், தேகபலமும் புத்திக்கூர்மையும் கொண்டவர், மற்றவர்களைக் கவர்பவர், வைராக்கியம் உள்ளவர், பிரபலங்களால் விரும்பப்படுபவர்’ என்கிறது ஜோதிட அலங்காரம். நட்சத்திர மாலை, `பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர், சிந்தனை செய்பவர், கற்றறிந்தவர்களுக்கு நண்பர், உத்தமர்’ என்கிறது. `நீங்கள் தர்மவான், வீரர், செய்நன்றி மறவாதவர், நல்ல மனைவி வாய்த்தவர், அழகர்’ என்கிறது யவன ஜாதகம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்டவர். நானிலத்தில் யாருக்கும் அஞ்சமாட்டீர்கள். பேச்சில் பதிலடி தரத் தயங்கமாட்டீர்கள். சமூக நலன் மீது அக்கறை கொண்டவர். விழிப்பு உணர்வு இயக்கங்களையும் சங்கங்களையும் தலைமை தாங்கி நடத்துவீர்கள். வயோதிக வயதிலும் இளமையான சிந்தனை உங்களுக்கு உண்டு. உங்களைச் சுற்றி இளைஞர் கூட்டம் அலைமோதும்.

நாட்டின் மீதும் அடித்தட்டு மக்கள் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள். எந்தத் துறையில் பணியாற்றினாலும் முதலிடம் பிடிப்பீர்கள். நிலையான கொள்கை உள்ளவர்கள். நீங்கள் உண்மையைப் பேசுவீர்கள் என்றும் கை வீசி வேகமாக நடப்பீர்கள் என்றும் அகலமான நெற்றி உடையவர்கள் என்றும் சிற்றம்பல சேகரம் என்ற நூல் கூறுகிறது. ‘உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும்’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, ஊருக்கருகில் சொத்து வாங்கும் யோகம் பலருக்கு அமைந்துள்ளது. நந்தி வாக்கியம், ‘பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவன், பிறர் மனை நோக்காதவன்’ என்று கூறுகிறது. கேரளச்சாரியம் எனும் நூல், ‘மனையாளைப் புகழ்பவன்’ என்று கூறுகிறது. சூடானதும், கொஞ்சம் காரமானதும், எண்ணெயில் பொரித்ததுமான உணவை உண்பீர்கள். தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர். 22 முதல் 26 வயதுவரை உங்களிடம் ஒரு தடுமாற்றமும் குழப்பமும் வந்து, பிறகு நீங்கும். 27 வயது முதல் எதிலும் வெற்றி பெறுவீர்கள். 40 வயது முதல் பொருளாதாரத்தில் அதிரடி முன்னேற்றம் வரும். வியாபாரத்திலும் புகழ்பெற்று விளங்குவீர்கள். மூடநம்பிக்கை இல்லாத, முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாக இருப்பீர்கள். உங்களில் பலர் மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம், கட்டடக் கலை, பூமியை ஆதாரமாகக்கொண்ட வியாபாரம், மந்திர தந்திரம், நாடகம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என்று பற்பல துறைகளில் மிளிர்வார்கள். ஆர்.கே.நாராயண், ஜான் மில்டன், பக்தவத்சலம் ஆகியோர் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைவீர்கள். கண், பல், முதுகெலும்பு, சிறுநீரகம் ஆகியவற்றில் கோளாறு அல்லது நோய் ஏற்பட்டு, பிறகு நீங்கிவிடும். வாழ்வாங்கு வாழ்வீர்கள். முதல் பாதம் (சூரியன் + குரு + குரு) முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சாஸ்திரம், வேதம் ஆகியவற்றை அறிந்த வித்தகர்களாக இருப்பார்கள். கடுமையான விரதம் இருக்கும் அளவுக்கு தெய்வ பக்தி இருக்கும். தடைகள் பல வந்தாலும் எடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவார்கள். தாங்கள் கற்றறிந்ததை மற்றவர்களுக்கும் வழங்கு வார்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். அன்னம், ஆடை ஆகியவற்றைத் தானம் செய்வார்கள். கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். சிறு வயதிலிருந்தே புராணக் கதை, காவியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கும். பல வருடங்களுக்கு முன் படித்த நூல்களிலிருந்து கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் அறிவாற்றலும் ஞாபக சக்தியும் இருக்கும். விசுவாசம் உள்ளவர்கள். பெரியோர், ஆசிரியர், சாது ஆகியோரைக் கண்டால் அடிபணிவார்கள். அடுத்தவர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டார்கள். தங்க ஆபரணம் அணிவதில் விருப்பமுள்ளவர்கள். அனுசரித்துப் போகும் குணம் பிறவியிலிருந்தே இருக்கும். வயதானாலும் குழந்தைப் பருவத்து நினைவுகளையும் பள்ளிப் பருவத்து நண்பர்களையும் மறக்கமாட்டார்கள். சொந்த விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்பமாட்டார்கள். சாதனைகள் பல செய்தாலும் தன்னடக்கத்துடன் வாழ நினைப்பார்கள். மறப்போம் மன்னிப்போம் என்ற வழியைப் பின்பற்று வார்கள். மனைவிக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்தவுடன் தோழனைப் போல் பழகுவார்கள். ஆசிரியர், மருத்துவர், வங்கி மேலாளர், போட்டோகிராஃபர், அமைச்சர் போன்ற பணியாளராக இருப்பார்கள். 40 வயதிலிருந்து அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள். பரிகாரம்: வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வருதல் நலம். இரண்டாம் பாதம் (சூரியன் + மகர சனி + மகர சனி) இரண்டாம் பாதத்துக்கு அதிபதி மகரச் சனி. இதில் பிறந்தவர்கள் கொடுத்த வாக்குறுதியைத் தாமதமாக நிறைவேற்றுவார்கள். படபடப்பாகப் பேசுவார்கள். இளைஞராகும்வரை யாரும் விஞ்சமுடியாத அளவுக்கு ஒரு சிற்றரசனைப் போல் சகல செல்வாக்குடன் இருப்பார்கள். சிலரைக் காப்பாற்றுவதற்காகச் சில நேரங்களில் பொய்யுரைக்கவும் தயங்கமாட்டார்கள். வாகனத்தில் சவாரி செய்ய மிகவும் பிடிக்கும். குடும்பத்தில் எந்தக் காரியமாக இருந்தாலும் முன்னின்று நடத்துவார்கள். மனதுக்குப் பிடித்தவர் களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். தாய்ப் பாசம் அதிகமுள்ளவர்கள். சில நேரங்களில் தந்தையுடன் வாக்குவாதம் செய்வார்கள். தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தந்திரமாக ஒதுக்குவார்கள். ஏதேனும் சாதிக்கவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே நினைப்பார்கள். ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிகல் மற்றும் சிவில் இன்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, பல் மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்களில் பலர் வானொலி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களாகவும், பட்டிமன்ற நடுவர்களாகவும் ஆன்மிகப் பேச்சாளர்களாகவும் திகழ்வார்கள். 26 வயது முதல் முன்னேற்றம் ஏற்படும். 46 வயதிலிருந்து எல்லா வளங்களும் உண்டாகும். பரிகாரம்: திருக்கோளூரில் அருள்புரியும் ஸ்ரீகுமுதவல்லி (கோளூர்வள்ளி) உடனுறை ஸ்ரீநிஷேபவித்தன் (வைத்தமாநிதிப்) பெருமாளை வணங்குதல் நலம். மூன்றாம் பாதம் (சூரியன் + மகர சனி + கும்ப சனி) மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி கும்பச் சனி. இதில் பிறந்தவர்கள் அறிவுரைகளை ஏற்கமாட்டார்கள். சில நேரங்களில் அதிகம் கோபப்படுவார்கள். இவர்களை `அகங்காரம் உடையவர்’ என்று சிலர் விமர்சிப்பார்கள். சாமர்த்தியமாகப் பேசுபவர்களாகவும், கேள்விகளுக்குத் தயக்கம் இல்லாமல் பதில் சொல்பவர்களாகவும், தவறுகளைத் திறமையாக மறைப்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பவர்களாகவும் சில நேரங்களில் மதில் மேல் பூனையாகவும் இருப்பார்கள். 22 வயது வரை சளித் தொந்தரவு, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வந்து நீங்கும். உயர்கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். ஆனால், பலருக்குக் கல்வி பாதியில் தடைப்பட்டுப் பிறகு தொடரும். கோழிச்சண்டை, மஞ்சுவிரட்டு, மல்யுத்தம் ஆகியவற்றை ரசிப்பார்கள். தோற்கும் அணியை ஆதரிப்பார்கள். ஆயில் மில், மண்டி, ரைஸ் மில், கிரானைட், டைல்ஸ் தயாரிப்பு, தோல் பதனிடுதல், மீன் பண்ணை, தீப்பெட்டி உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபடுவார்கள். 39 வயது முதல் வளங்கள் வந்து சேரும். பரிகாரம் திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரம்) வீற்றிருக்கும் ஸ்ரீநிலமங்கைத் தாயார் உடனுறை ஸ்ரீஸ்தலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்காம் பாதம் (சூரியன் + மகர சனி + மீன குரு) நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மீன குரு. இதில் பிறந்தவர்கள் எதிலும் தைரியமாக முடிவெடுப்பார்கள். எதையும் தாங்கும் மனோபலம் கொண்டவர்கள். உடன்பிறந்தவர்களையும் சுற்றத்தாரையும் அரவணைப்பார்கள். மகான், சித்தர் ஆகியோருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார்கள். கல்வி, வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வார்கள். இவர்களுக்குக் கடல் கடந்தும் நண்பர்கள் உண்டு. அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். எதிர்கட்சியிலும் தோழர்கள் இருப்பார்கள். எப்போதும் ஊக்கத்துடன் செயலாற்றுவார்கள். இவர்களின் முகத்தில் தெய்விகக் களை இருக்கும். பேச்சில் கனிவு இருக்கும். தாய், தந்தையைப் பேணிக் காப்பார்கள். தங்கள் செலவில் ஊருக்குக் குடிநீர் வசதி, நூலகம், தெரு விளக்கு ஆகியவற்றை அமைத்துத் தருவார்கள். உறவினர், நண்பர் ஆகியோரின் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற வைபவங்களை முன்னின்று நடத்துவார்கள். மனைவி, பிள்ளைகள் மீது அதிகம் பாசம் வைத்திருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் தலையிடமாட்டார்கள். 18 வயதிலிருந்தே பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். 37 வயதிலிருந்து நாடறியும் நல்ல பதவிகள் தேடி வரும். பரிகாரம்: புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள குடுமியான் மலையின் அடிவாரத்தில் அருளும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீசிகாநாதரையும், குன்றின் மீதுள்ள ஸ்ரீசுப்ர மணியரையும் வணங்குதல் நலம்.
உத்திராட நட்சத்திரத்தில் திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம், புதுமனைப் புகுதல், வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தையைத் தொட்டிலில் விடுதல், குழந்தைக்குச் சிகை நீக்கிக் காது குத்துதல், குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், முதன்முதலில் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல், வீடு கட்டத் தொடங்குதல், வங்கிச் சேமிப்புக் கணக்கு தொடங்குதல், வான், நில, நீர் வழிப் பயணங்கள், வியாபாரம், புது வேலையில் சேருதல், தாலிக்குப் பொன் உருக்குதல், நாட்டிய அரங்கேற்றம், பத்திரப் பதிவு, உயில் எழுதுதல் ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வேற்றியும் கிட்டும்.
பரிகார ஹோம மந்திரம் தந்நோ விச்வே உபச்ருண்வந்து தேவா: ததஷாடா அபிஸம்யந்து யஜ்ஞம் தந் நக்ஷத்ரம் ப்ரததாம் பசுப்ய: க்ருஷிர் வ்ருஷ்டிர் யஜமானாய கல்பதாம் சுப்ப்ரா: கன்யா யுவதய: ஸூபேசஸ: கர்மக்ருத: ஸூக்ருதோ வீர்யாவதீ: விச்வாந் தேவான் ஹவிஷா வர்த்தயந்த: அஷாடா: காமமுபயாந்து யஜ்ஞம்