Published:Updated:

குருபகவானால் ஏற்படும் ஹம்சயோகம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்? #Video #Astrology

குருபகவானால் ஏற்படும் ஹம்சயோகம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்? #Video #Astrology
குருபகவானால் ஏற்படும் ஹம்சயோகம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்? #Video #Astrology

" 'அவருக்கென்ன ? அவர் அம்சமான வாழ்க்கை வாழ்கிறார்' என்று கூறுகிறோமல்லவா? அதற்குக் காரனம் இந்த ஹம்ச யோகம்தான். எவருடைய ஜாதகத்தில் குரு பகவான் 1,4,7 மற்றும் 10 -ம் இடங்களில் இருந்து குரு தசையும் நடக்கிறதோ, அவருக்கு ஹம்சயோகம் சிறப்பாக வேலை செய்யும் " என்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி. 

ஹம்ஸ யோகம் என்றால் என்ன... அவை எந்த ராசிக்கு என்ன மாதிரி பலன்களை வழங்கும் என்று பார்க்கலாம்.    

நவகிரகங்களில்  ராகு, கேது, சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து, பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கப் பெறும் யோகங்கள், 'பஞ்ச மஹா புருஷ யோகங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 

இந்த ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்கினத்துக்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சி பலமோ, உச்ச பலமோ பெறுவதால்,  இந்த யோகங்கள் உருவாகின்றன. ஒருவரின் லக்கினத்தின் அதிபதி வலுவிழந்த நிலையில், அந்த ஜாதகத்தை ராசி வழியில் நடத்தும் நிலையில் சந்திரனுக்குக் கேந்திரங்களில் இந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் நிலையிலும் இந்த யோகம் செயலாற்றும். பஞ்ச மகா புருஷ யோகங்கள் மொத்தம் ஐந்து. 

1. குருவினால் உண்டாகும் ஹம்ச யோகம்

2. சுக்கிரனால் உண்டாகும் மாளவ்ய யோகம்.

3. புதனால் உண்டாகும் பத்ர யோகம்

4. செவ்வாயால் உண்டாகும் ருசக யோகம்.

5. சனியால் உண்டாகும் சச யோகம்.

கிரகங்களிலேயே மகா சுபகிரகமும், பணத்துக்கு அதிபதியும், புத்திரபாக்கியம் உள்ளிட்ட அனைத்து அதிர்ஷ்டங்களையும் அளிப்பவருமான குரு பகவானால் , ஒரு ஜாதகருக்குக் கிடைக்கும் ஹம்சயோகம் பற்றிப் பார்ப்போம். ஹம்ச யோகம் அமையப்பெற்றவர், தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வங்கி, நீதித்துறை, அரசு, நிதித்துறை, கோயில் பணி, அமைச்சர், ஃபைனான்ஸ், ஜுவல்லரி, கல்வி கற்பித்தல் போன்ற இனங்களில் ஜாதகரைப் பணிபுரியவைத்து மேம்படுத்துவார். மீனம் ஜலராசி என்பதால், வெளிநாட்டிலும், ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றிலும் பெரும்பொருள் சம்பாதிக்கத் துணைபுரிவார்.

மதிப்பு, மரியாதை மிக்க வாழ்க்கை மற்றும் அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றைத் தருவார். நல்ல அறிவும், அதிர்ஷ்டமும் உள்ள குழந்தைகளும், தன்னோடு ஒத்துப் போகும் வாழ்க்கைத் துணையும், வலிமையான பொருளாதார மேம்பாடும் குரு தசையில் கிடைக்கப் பெறுவார். அழகான வீடு, வாகனம், உயர்கல்வி, சுகம், தாயார் வழியில் நல்ல பலன்கள், நல்ல பதவி அல்லது நிரந்தர தொழில் ஆகியவற்றைத் தன் தசையில் குறைவின்றித் தருவார்'' என்ற ஆதித்ய குருஜி தொடர்ந்து, இத்தகைய பலன்களைத் தரும் ஹம்ஸயோகம் எந்த  ராசி, லக்கினக் காரர்களுக்கு சிறப்பாக அமையும் என்பது குறித்தும் விளக்கமாகக் கூறினார்.

" லக்கினத்தை சர லக்கினம், ஸ்திர லக்கினம், உபய லக்கினம் என மூன்று வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். சர லக்கினங்கள் மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம். உபய லக்கினங்கள் தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி. ஸ்திர லக்கினங்கள் ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் என வகைப்படுத்தியுள்ளனர்.

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள்தான் குரு பகவான் தரும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள். அதிலும் குருவின் நண்பர்களான, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியோரின் ஆட்சிக்குட்பட்ட மேஷம் மற்றும் கடக லக்கினக்கார்களுக்குதான் இந்த யோகம் கூடுதல் நற்பலன்களைத் தரும்.

உபய லக்கினங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னி ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களு

க்கு இந்த யோகம் அமையப் பெற்றாலும், அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. உபய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே குரு முழுயோகத்தை அளிப்பார். 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு குரு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7 மற்றும் 10  ஆகிய இடங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவதில்லை. இதனால், இந்த லக்கினங்களில் பிறந்தவர்கள் 'ஹம்ச யோகம்' பெறும் வாய்ப்பு இல்லை.

மேலும் குரு ஆட்சி, உச்சம் பெறும் நிலையில் அவருக்கு எதிர்த்தன்மையுடைய கிரகங்களான சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் அவருடன் சேருவது மற்றும் அவரைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்துவிடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் லக்கின சுபர்களாகி குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் வலுப்பெறும்.

ஹம்ச யோகம் தரும் நிலையில், குரு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்தால் யோகம் முற்றிலும் வலிமையிழந்துவிடும்.  

சர லக்கினங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்கினங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். குரு பலம் பெறுவதால் அவருடைய சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும்" என்றார்.