பன்னிரண்டு ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பன்னிரண்டு ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். கன்னி ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் மிகப் பெரிய அறிவாளிகளாகவும் புதியவற்றைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை அத்தனை எளிதாக பேச்சில் வெல்லமுடியாது. ஏனென்றால், இவர்கள் அபார ஞாபக சக்தியுள்ளவர்கள். நீங்கள் பேசியவற்றிலிருந்தே உங்களுக்குப் பதிலடி கொடுத்துவிடுவார்கள். அதனால், 'நாம்தான் பெரியவர்' என்று இவர்களிடம் யாரும் வாதிட முடியாது. இவர்களின் வாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரன் என்பதால், வாக்கு சாமர்த்தியமுள்ளவர்கள். கனிவான உள்ளம் கொண்டவர்கள். கணக்குப் புலிகள்.

கணிதம், கம்ப்யூட்டர், ஆடிட்டிங் போன்ற துறைகளில் இறங்கி, கலக்கி எடுப்பார்கள்.
இன்றைக்கு உலகையே ஆட்சிசெய்யும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் புகழ்பெற்று விளங்குபவர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள்தான். சின்ன 'சிப்'தான் இன்று உலகையே ஆள்கிறது. இந்தத் துறையில் சாதனை புரிபவர்கள் பலரும் கன்னியில் புதன் அல்லது சந்திரன் இருக்கப் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களின் மனம், தெளிந்த நீரோடையைப் போலிக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு மனோபலம் அதிகமிருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நிலைகுலைந்து போய்விட மாட்டார்கள். அறிவாயுதம் ஏந்தியே எதிலும் வெற்றிபெறுவார்கள். இன்சொல் மிக்கவர்கள். பெண்களின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பதால், இவர்களிடம் பெண்கள் இயல்பிலேயே நட்பு பாராட்டுவார்கள்.
இவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், நாராயணனின் அவதாரங்களான கண்ணன், வேங்கடேசப் பெருமாள், பாண்டுரங்கன் ஆகியவை. இவர்கள், இளம்பருவத்தில் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அதிக நாள்களைச் செலவழிப்பதால், 42 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ஆனால், அது பெரிய அளவிலான அசுர வளர்ச்சியாக இருக்கும்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.