பன்னிரண்டு ராசிக்காரர்களில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, பன்னிரண்டு ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். துலாம் ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

துலாம் ராசியின் குறியீடு தராசு. துலாம் ராசிக்காரர்கள் சிறந்த தொழிலதிபர்களாகவும் வர்த்தகப் பிரமுகர்களாகவும் வியாபாரிகளாகவும் இருப்பார்கள். எவரையும் மிகச் சரியாக எடை போட்டு விடுவார்கள். நடுநிலை தவறாத சிறந்த நீதிமான்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்திலும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். சென்டிமென்ட் பார்க்கமாட்டார்கள். தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்கள் என்றால், அவர்கள் துலாம் ராசிக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துலாம் ராசிக்காரர்கள் மாதச் சம்பள வாழ்க்கையைவிட தொழில்துறையில் இறங்கி பெரும் பொருள் ஈட்டவே விரும்புவார்கள். பணத்தின் அருமையை மிகவும் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். தேவையென்றால் எத்தனை ஆயிரம் என்றாலும் செலவு செய்வார்கள். தேவையில்லையென்றால் ஒரு குண்டூசி செலவுக்கும் யோசிப்பார்கள். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்பதற்கு உதாரணமாக இருப்பார்கள். தான தர்மங்கள் நிறைய செய்வார்கள். ஆனால், யாருக்குச் செய்யவேண்டும், யாருக்குச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் கலைத்துறையில் ஈடுபடவே விரும்புவார்கள். பெண்கள் அதிகம் விரும்பும் பொருள்களான அழகுசாதனப் பொருள்கள், வெள்ளி, வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டால் பெரும் வெற்றிபெறுவார்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், வாகன யோகம் இவர்களுக்குச் சிறப்பாக இருக்கும். பல வகையான கார்கள் வாங்கி விற்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்களே டிரைவர்களாகி பல மைல்களுக்கு ஓட்டிச் செல்வார்கள்.
பெண்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் மிக்கவர்கள். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்றால், ஆக்ரோஷம் இல்லாத அனைத்துப் பெண்தெய்வங்களும் இவர்களின் வழிபாட்டுக்கு உரியவர்கள். தங்களது 23 -வது வயதிலிருந்தே படிப்படியாக வளர்ச்சியடைந்து உன்னதமான நிலையை அடைவார்கள்.