தூய்மையும் வாய்மையும் மிக்க மீனம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? #Astrology

12 ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும். ஆகவே, 12 ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். மீனம் ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

மீன ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதலில் உதவுபவர்கள் மீன ராசிக்காரர்கள்தாம். அப்படி உதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் பிற்காலத்தில் இவர்களை உதாசீனப் படுத்திச் சென்றாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் மீண்டும் உதவுவார்கள். இது மற்ற எந்த ராசிக்காரர்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சமாகும்.
12 ராசிகளில் நிறைவான ராசியாக மீன ராசி வருகிறது. குருவின் காரகத்துவம் பெற்ற ராசியென்பதால், தூய்மையும் வாய்மையும் மிக்க நல்லவர்களாக இவர்கள் இருப்பார்கள். மீனராசிக்காரர்களின் பலம் இவர்கள் நல்லவர்களாக இருப்பதுதான். பலவீனம் இவர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்களே ஒழிய வல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால் வாழ்க்கையில் பல விஷயங்களை இழப்பார்கள். இருந்தாலும், 'இதுநாள் வரைக்கும் இப்படியே இருந்துட்டேன், இனியும் இப்படியே இருந்துட்டுப் போயிடறேன்' என்று கூறிவிடுவார்கள்.

மீன ராசிக்காரர்கள் தன் நண்பர்கள், உறவினர்களுக்கு உதவுவதற்கென்றே பிறந்தவர்கள். மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவுபவர்கள், பெரும்பாலும் மீன ராசிக்காரர்களாக இருப்பார்கள். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். ஆசிரியர், யோகா மாஸ்டர், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பலரும் மீன ராசிக்காரர்கள்தாம். விவசாயம், கால்நடைப் பண்ணை, கல்வி நிலையம் ஆகியவற்றை வைத்து ஏற்ற நிலை அடைவார்கள். கலைத்துறையைப் பொறுத்தவரை திரைக் கதாசிரியர், கேமராமேன் போன்று பின்னணியிலிருந்து வெற்றிபெறுவார்கள்.
மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி. ஏற்ற நிறம் மஞ்சள். இவர்கள் தங்களின் 27 வது வயதிலிருந்து முன்னேறி 40 வயதுக்குள் வீடு, மனைவி, மக்கள் என செட்டிலாகிவிடுவார்கள்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.