Published:Updated:

பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் கடக ராசி அன்பர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள்! #Video

Astrological Signs
Astrological Signs

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசிக்காரர்கள், தான் நன்றாக இல்லாவிட்டாலும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் கடக ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு கும்ப ராசியில் பிறக்கிறது. இது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால் சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Cancer
Cancer

கடக ராசிக்காரர்களுக்கு 2020-ம் ஆண்டில் சாதகமான பலன்களும் சாதகமற்ற பலன்களும் சரிசமமாக நடைபெறும். கடந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு 5-மிடத்தில் இருந்த குரு பகவான் பெரிய அளவில் நன்மையைச் செய்யவில்லை

6-ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் பெரிய அளவில் நன்மைகள் நடக்கும் என்று கூறியிருந்தாலும் அதில் ஓரளவு தடைகள் இருக்கவே செய்தன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே குருவும் செவ்வாயும் 9-ம் இடத்திலிருப்பதால் உங்களுக்கு மிக நல்ல பலன்கள் கைகூடிவரும்.

கடக ராசிக்காரர்களுக்கு ராஜயோகாதிபதியான குருவும் செவ்வாயும் 6-ம் இடத்திலிருப்பதால் வீடு, நிலம், மனை வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். 6-மிடம் என்பது மறைவுஸ்தானம் என்றாலும் குருவுக்கு, தனுசு ராசி ஆட்சி அதிகாரம் உள்ள இடம். இதனால் இவர்களுக்கு நற்பலன்களே மிகுதியாக நடக்கும்.

கடக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். ஆனால், அந்தக் கடன்கள் யாவும் சுபச் செலவுகளுக்கான கடன்களாக இருக்கும்.

Astrological Signs
Astrological Signs

குரு பகவான் 6-மிடத்திலிருப்பதால் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கும் புதிதாக வீடு கட்டுவதற்கும் இவர்கள் கடன் வாங்குவார்கள். கடக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு புதிதாகச் சில காரியங்களைத் தொடங்குவார்கள்.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடக ராசிக்காரர்களுக்கு 7-மிடத்துக்குச் சென்று சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் மனதில் குழப்பங்களை அவ்வப்போது ஏற்படுத்துவார்.

சந்திரனும் சனியும் ஒருவருக்கு ஒருவர் ஜன்ம விரோதிகள் என்பதால் அவரின் பார்வை உங்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி மன சஞ்சலங்களை உருவாக்கும். இதனால் நீங்கள் ஒரு பதற்றமான மனநிலையில் செயல்படுவீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு உணவு விடுதிக்கு உணவு உண்ணச் செல்லும்போது உங்களுக்குப் பிடிக்காத ஒருவர், எதிரில் அமர்ந்திருந்தால் என்ன மனநிலையோடு உணவைச் சாப்பிடுவீர்களோ அந்த மனநிலையே இப்போது நிலவும்.

சந்திரன் ஆட்சிபெற்ற கடக ராசிக்காரர்கள் பொதுவாகவே தூய்மையான மனநிலை உள்ளவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும். சிறு கஷ்டங்களைக்கூட சிறுதுன்பங்களைக்கூட பெரிதாக எண்ணிக் கொள்ளும் சுபாவம் உள்ளவர்கள்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், தான் நன்றாக இல்லாவிட்டாலும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கடக ராசிக்காரர்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் சின்னச் சின்ன தடைகள் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். 

இந்த ஆண்டைப் பொறுத்தவரை இவர்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும் வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்குவதாக இருந்தாலும் ஆண்டின் மையப்பகுதிக்குப் பிறகு, அதாவது ஜூலை மாதத்துக்கு மேல் இவர்கள் கடன் வாங்குவது நல்லது. அதற்கு முன்பாக வாங்கினால் இவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.

Cancer
Cancer

முதல் ஆறு மாதங்கள், ஒரு மந்தநிலையான போக்கு நிலவும். அததை அடுத்து வரும் ஆறு மாதங்கள் சிறப்பானதாக அமையும். 7-மிடத்தில் சனி பகவான் இருப்பதால், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். கூடவே மனைவியின் உடல்நலனில் கணவனும் கணவனின் உடல்நிலையில் மனைவியும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

2020-ம் ஆண்டைப் பொறுத்தவரை கடக ராசிக்காரர்கள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்துச் செய்யுங்கள். உங்களின் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்று அதன்படி செயல்பட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

முன்கோபத்தில் வார்த்தைகளை வீசிவிட்டு, பிறகு வருந்த வேண்டாம். இதற்குக் கடக ராசிக்காரர்கள் யோகா, தியானம் போன்றவற்றில் மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் சிறந்தது.

Rasi Signs
Rasi Signs

அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், விவசாயிகளென அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டில் புதுமையான நற்பலன்கள் நிகழும். பலன்கள் நிதானமாகக் கிடைக்குமே தவிர நிச்சயம் கிடைக்காமல் போகாது.

சாதகமும் பாதகமும் நிறைந்துள்ள இந்த 2020-ம் ஆண்டைத் தெய்வத்தின் துணைகொண்டு தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்தி, நீங்கள் கடந்தால் வெற்றியின் இலக்கை எட்டலாம்.

அடுத்த கட்டுரைக்கு