Published:Updated:

தொட்டதெல்லாம் துலங்குமா... வெற்றி வாய்ப்பு பெருகுமா?! தனுசு ராசிக்காரர்களின் புத்தாண்டுப் பலன்கள்

புத்தாண்டு விடியல்
புத்தாண்டு விடியல்

ஜன்மச்சனி விலகினாலே, மனத்திலிருக்கும் குழப்பங்கள் எல்லாம் விலகி, ஒளிமயமான எதிர்காலம் உங்களின் கண்களுக்குத் தெரியவரும் என்பது ஜோதிட விதி.

2020 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1- ம் தேதி புதன்கிழமை பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில், தனுசு ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

New Year Rasipalan 2020
New Year Rasipalan 2020

தனுசு ராசிக்காரர்களின் வேதனைகள் அனைத்தையும் தீர்க்கின்ற ஆண்டாக 2020 ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தனுசு ராசிக்காரர்களுக்கு, ஜாதகம் அத்தனை சாதகமாக இல்லை.

மூன்று ஆண்டுகளாக தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை. அதற்குக் காரணம், அதிர்ஷ்டம் வேலை செய்யாத ஒரு காலகட்டமாக இருந்து வந்ததுதான். ஏழரைச் சனியின் பிடியில் சிக்கியிருந்ததால், இவர்களின் மனம், உடல் யாவும் சுறுசுறுப்பற்றத் தன்மையில் சிக்கி, ஒரு மந்தநிலை நிலவிவந்தது.

ஜன்மச் சனி நடப்பிலிருந்ததால், சோம்பலான செயல்திறன் மற்றும் முன்னேற்றம் இல்லாத நிலையைத்தான் அனுபவித்து வந்தார்கள். குறிப்பாக, 40 வயதுக்கு உட்பட்ட தனுசு ராசிக்காரர்களுக்கு, அவர்களுடைய முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

2020-ம் ஆண்டு இந்தநிலை மாறி, அவர்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கலாம். இத்தனை நாள்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம், கன்னிப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் கைகூடி வரக்கூடிய காலகட்டமாக இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.

Sagittarius
Sagittarius

எதிர்காலத்தில் எந்தத் திசையில் பயணிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கூடிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு இருக்கும். உங்கள் வாழ்க்கையின் புதிய தடம் இப்போதே உங்களின் கண்களுக்குப் புலப்படும்.

ஜன்மச்சனி விலகினாலே, மனத்திலிருக்கும் குழப்பங்கள் எல்லாம் விலகி, ஒளிமயமான எதிர்காலம் உங்களின் கண்களுக்குத் தெரியவரும் என்பது ஜோதிட விதி.

மத்திய தர வயதிலிருப்பவர்களுக்கு, ஒரு தொழிலைத் தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தலாமா, மூடி விடலாமா எனும் குழப்பமான நிலை நிலவிவந்தது. அந்த நிலை மாறி, தொழிலில் ஒரு சுறுசுறுப்புத் தன்மையை இனி நீங்கள் காண்பீர்கள். தெளிவான முடிவுகளெடுத்து, உங்களை வெற்றிநடை போட வைக்கக்கூடிய ஆண்டாக 2020 இருக்கும்.

அதற்காக , 2020 - ம் ஆண்டு அவ்வளவையும் உங்களுக்கு கொட்டிக் கொடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. இதுவரை இருந்த பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுவது, எதை நோக்கிப் பயணிப்பது என்ற தெளிவான கண்ணோட்டம் இப்போது உங்களுக்கு நிச்சயம் கிடைத்துவிடும்.

மூல நட்சத்திரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் அனைவரும் அவர்கள் வயதுக்கேற்ற வளர்ச்சி அடைய முடியாமல், தேக்க நிலையிலேயே துன்பப்பட்டுவந்தனர். அவர்களுக்கெல்லாம் நல்லதொரு விடியலாக இந்த ஆண்டு அமையப்போகிறது.

Signs
Signs

12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழக்கூடிய, ராசிநாதன் ராசியிலேயே வந்து அமரும் பாக்கியம், இப்போது தனுசு ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது. குரு பகவான், தன் சொந்த ஆட்சி வீடான தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பதால், அவர்களுக்கு இனி ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மிகப்பெரிய யோகப் பலன்கள் நடைபெறும்.

ஜன்மச் சனியாக இருந்த சனி பகவான், ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திலேயே உங்களின் ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார். இது, மிகச் சிறந்த யோகபலனை உங்களுக்கு வழங்கும்.

எதிர்மறைச் சிந்தனைகள், முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள், பணப் பற்றாக்குறை இவையெல்லாம் உங்களை விட்டு விலகிச்செல்ல இருக்கின்றன.

சாதகமற்ற பலன்கள் நம்மை விட்டு விலகிச் சென்றாலே சாதகமானவை நம்மை நோக்கி வரப்போகின்றன என்று பொருள். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் தனுசு ராசி பெண்களுக்கு இனிவரும் காலம் மிகவும் நன்றாகவே அமையும்.

சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு, சொந்த ஊருக்கு எப்போது வரவேண்டும் என்கிற எண்ணம் மனத்தை வாட்டிக்கொண்டே இருந்துவந்தது. அவர்களெல்லாம் இப்போது சொந்த ஊரில் செட்டில் ஆவார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மையான விஷயங்கள் நடக்குமே தவிர, தீய பலன்கள் எதுவும் நடக்காது.

பாசிட்டிவ்வான விஷயங்கள் நடக்கக்கூடிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு