Published:Updated:

வெளிநாட்டு வேலை பெறப்போகும் கன்னி ராசிக்காரர்களின் 2020 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்! #Video

தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும்போது, நிச்சயம் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஒரு மனிதனுக்கு நிகழவேண்டும் என்பது ஜோதிட விதி.

Virgo
Virgo

2020 ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில், கன்னி ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

``2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Virgo
Virgo

கன்னி ராசிக்காரர்களுக்குத் தொழில்துறையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரக்கூடிய ஆண்டாக 2020-ம் ஆண்டு பிறக்கிறது.

பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்தப் பதவி உயர்வு இப்போது கிடைக்கப்போகிறது. இப்போதிருக்கும் வேலையில் இருக்கலாமா, இன்னொரு வேலைக்கு மாறலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு, மாற்றம் தரக்கூடிய புதிய வேலை கிடைக்கும். உங்களுக்கான வாய்ப்புகள் வெளியில் மிகவும் அதிகம். அநேகமாக மார்ச் மாதத்தில் உங்களின் இந்த எண்ணம் நடந்தேறும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் மூன்றாம் இடத்திலிருந்து இத்தனை நாள்களாகப் பார்த்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெயர்ச்சியாகி நான்காமிடத்துக்கு வந்து சேர்ந்தார்.

4-ம் இடத்திலிருந்து உங்களின் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தை 7-ம் பார்வையாகப் பார்க்கிறார். 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும்போது, நிச்சயம் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஒரு மனிதனுக்கு நிகழ வேண்டும் என்பது ஜோதிட விதி.

New Year
New Year

வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை, தொழிலில் இருந்த பிரச்னைகள் இவை எல்லாம் தீர்ந்து புதிய மாற்றங்கள் நிகழும். ஒரு முன்னேற்றமான தகவல், தொழில் ரீதியாக இவர்களுக்கு வந்து சேரும்.

தொழில் ஸ்தானம் நல்லவிதமாக இருப்பதால் வருமானம் பெருகக்கூடிய அமைப்பு உருவாகும். இதனால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை இவர்கள் எளிதாகத் தீர்த்து விடுவார்கள்.

கன்னி ராசிக்கு 5-ம் இடமான மகரத்தில் சனி பகவான் இருக்கிறார். 5-ம் இடத்தில் சனி பகவான் இருப்பது நல்லதல்ல என்று சொல்லப்பட்டாலும், அவரின் சொந்த வீடான மகரத்தில் இருப்பதால் பெரிதாகக் கெடு பலன்கள் நிச்சயம் இருக்காது.

தனுசில் இருக்கும் குரு பகவான் 12-ம் பார்வையாக உங்களின் ராசிக்கு முந்தைய ராசியான சிம்ம ராசியைப் பார்க்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுநாள்வரை விசா, பாஸ்போர்ட் எடுக்காமல் இருந்தவர்கள் புதிதாக எடுத்து வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும் சுற்றுப் பயணமாகவும் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள். ஒரு சிலர் மலேசியா, சிங்கப்பூர் எனக் கீழ்த்திசை நாடுகளுக்குச் சுற்றுலா போய் வரக்கூடிய வாய்ப்பையும் பெறுவார்கள்.

signs
signs

கன்னி ராசி தாத்தா பாட்டிக்கு பேரன் பேத்தியைப் பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பணம் பல வகைகளில் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருந்துகொண்டே இருக்கும். செலவுகள் இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வருகிற காலத்தில் நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.

இதுநாள்வரை சாதாரண, வசதி குறைவான வீடுகளிலிருந்தவர்கள் நல்ல காற்றோட்டமும் சுகாதாரம் மிக்க வீடுகளுக்குக் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு அதில் கிரகப்பிரவேசம் செய்கிற வாய்ப்பையும் பெறுவார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

தாயாரின் உடல்நலம் சீரடையும். புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு இவர்களுக்குச் சிறப்பாக அமையும். சுகஸ்தானமான 4-ம் இடத்திலிருக்கும் குரு பகவான் இவற்றையெல்லாம் இவர்களுக்கு வழங்குவார்.

பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் யாவும் தீரும். உங்களுக்கான பங்கை எளிதாகப் பெறுவீர்கள். தாயாருடன் இருந்துவந்த பிணக்குகள் தீர்ந்து அவரின் ஆசிகளுடன் திருமணம் சிலருக்கு நடைபெறும்.

வெளியூரில் இருந்தால்கூட கன்னி ராசிக்காரர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று தாயாரின் ஆசீர்வாதத்தை, ஆண்டுப் பிறப்பின்போது பெறுவது மிகவும் சிறந்தது. அவர்களின் ஆசீர்வாதம், அவர்களை இந்த ஆண்டில் அவர்கள் ஈடுபடப் போகும் எல்லா செயல்களிலும் வெற்றி தருவதாக அமையும். தாய்வழிச் சொத்துகள் சிலருக்குத் தடையின்றி வந்து சேரும்.

பிள்ளைகளை நல்ல கல்லூரியில் சேர்க்கக்கூடிய வாய்ப்பும் அதற்கேற்ற பொருளாதார வசதியும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும்

கன்னி ராசிக்காரர்களுக்கு 2020-ம் ஆண்டு வருமானத்தையும் கொடுத்து செலவையும் கொடுத்து சந்தோஷத்தைத் தருவதாக அமையும்.

எடுத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே... 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! #Video
அவமானங்கள் மாறி வெகுமானங்கள் பெருக்கும் 2020... ரிஷப ராசிக்குரிய ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்! #Video