Published:Updated:

2020 புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்...

2020 புத்தாண்டு பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
2020 புத்தாண்டு பலன்கள்!

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

2020 புத்தாண்டு பலன்கள்! - எளிய பரிகாரங்களுடன்...

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
2020 புத்தாண்டு பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
2020 புத்தாண்டு பலன்கள்!

மேஷம்

மேஷம்
மேஷம்

அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்

வாக்கு தவறாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். பங்குச்சந்தை, கமிஷன் வகைகளால் பணம் வரும். சகோதரர்களுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் வேலையை இனி விரைந்து முடிப்பீர்கள். திருமணம், புதுமனை புகுதல், மஞ்சள் நீராட்டு, சீமந்தம் எனப் பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், கறாராகத்தான் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்களைப் புதிதாக வாங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 26.12.20 வரை சனி பகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். மகளின் கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் பாக்கியாதிபதியும் விரயாதிபதியுமான குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பல முறை முயன்றும் முடிக்க முடியாத வேலைகளை முடித்துக்காட்டுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

2020 New Year Astrology Prediction Sakthi Jothidam
2020 New Year Astrology Prediction Sakthi Jothidam

13.11.20 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஆண்டு பிறக்கும்போது ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால் முன்கோபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வருடம் பிறக்கும்போது 3-ம் வீட்டில் ராகு நிற்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல்

உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

25.10.20 முதல் 17.11.20 வரை உள்ள கால கட்டத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் சென்று மறைவதால், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவேண்டிய காலம் இது. பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக்கொள்ளாதீர்கள். ரியல் எஸ்டேட், கமிஷன், அரிசி, எண்ணெய் ஆகியவற்றின் மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளால் பாராட்டப்படுவர். நவம்பர் மாதம் முதல் குரு 10-ம் வீட்டில் நுழைவதால் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் அரசால் பாராட்டப்படுவார்கள்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும். பிறந்த நாள், திருமண நாள் போன்ற இனிய நாள் களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குங்கள்; பிரச்னைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

பிறர் செய்யமுடியாத சவாலான காரியங்களைச் சாதித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், கடின உழைப்பால் எதையும் சாதிக்க வேண்டிவரும். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் கூடிவரும்.

ரிஷபம்
ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்களின் ராசிக்குச் சாதகமான வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்ப தால், வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பழைய நண்பர்கள், சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். புதிதாக வாகனம் வாங்கு வீர்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 26.12.20 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால், தேகநலனில் கவனம் செலுத்தவும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் அஷ்டம லாபாதிபதியான குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். திடீர்ப் பணவரவும் உண்டு; இயன்ற வரையிலும் சேமிக்கப் பாருங்கள்.

நவம்பர் 13-ம் தேதி முதல் குரு பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருடம் பிறக்கும்போது 2-ம் வீட்டில் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

10.2.20 முதல் 22.3.20 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். பெரியோர்களிடமும், சட்ட வல்லுநர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.

வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறும். சந்தை நிலவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு முதலீடு செய்வீர்கள். பர்னீச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. கணினித் துறையில் இருப்பவர்கள், அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் மறுக்காமல் ஏற்பது நல்லது. உத்தியோகத்தில், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். விவசாயிகள் நவீனரக உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துவார்கள். உறவுகள் மத்தியில் மதிப்பு கூடும்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். எந்த விஷயத்திலும் விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கவேண்டாம். கலைத்துறையினர், சிறு சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி, புகழ் பெறுவார்கள்.

பரிகாரம்: திருப்பதி வேங்கடவனை தரிசனம் செய்து வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள். உங்களின் சந்ததியரின் எதிர்காலம் சிறக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ன்றி மறவாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 9-ம் வீடான கும்பத்தில் 2020-ம் ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப வீடு அமையும். எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்
மிதுனம்

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியுமான குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

நவம்பர் 13-ம் தேதி முதல் குரு பகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். சித்தர் பீடங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். 26.12.20 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் கண்டகச் சனியாக நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் பார்த்துப் பழகுங்கள்.

வருடத்தின் தொடக்கத்திலிருந்தே ராசியில் ராகுவும் 7-ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு முடியும் வரை ராகு 12-ம் வீட்டிலும் கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால், ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வி.ஐ.பிக்களின் அறிமுகத்தால் உதவிகள் கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். 23.3.20 முதல் 4.5.20 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்வதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களை நினைத்துக் கவலைப்படுவீர்கள். அவர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

வியாபாரிகள், தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பார்கள். வாடிக்கை யாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னீச்சர், ஹோட்டல், ஏற்றுமதி இறக்குமதி பொருள்களால் ஆதாயம் அடைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகள், வருமானத்தை உயர்ந் தும்படி மாற்றுப் பயிர் மூலம் மகசூல் பெற முனைவார்கள். தேவையான நேரத்தில் வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில், தொல்லை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். கணினித் துறையினருக்குக் கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் பாராட்டு பெறும். சின்னத்திரை கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம்: அருகிலுள்ள அனுமன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அஞ்சனை மைந்தனின் அருளால் பிரச்னைகள் நீங்கும். முதியோர்களுக்கு உதவுவது சிறப்பு.

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

ம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாத அன்பர் நீங்கள். உங்களின் ராசியைச் சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன திருமணம் கைகூடும். செல்வாக்கு கூடும். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கடகம்
கடகம்

உங்களின் ராசிக்கு 8-ம் வீடான கும்ப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் கட்டுக்கடங் காமல் இருக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை வருமென்றாலும் சமாளித்துவிடுவீர்கள். 26.12.20 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்னைகளை சமாளிக்கக்கூடிய மனோபலம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

12.11.20 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், வேலைகளில் அலைச்சல் இருக்கும். உள்மனத்தில் ஒருவித போராட்டம் எழும்பும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்களுடன் இடைவெளிவிட்டுப் பழகுவது நல்லது. நவம்பர் 13-ம் தேதி முதல், குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். வீட்டில் தாமதமாகி வந்த சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல பெண் அமையும்.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் கேதுவும் 12-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால், சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் வாய்க்கும். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

செப்டம்பர் முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவும் 11-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் உங்களின் செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். இளைய சகோதரர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு. 5.5.20 முதல் 19.6.20 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால் சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத் தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரிகள், பெரிய அளவில் முதலீடுகள் செய்யவேண்டாம். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்யுங்கள். விவசாயிகள், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணிகளைத் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்கவைப்பீர்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். திரைத் துறையில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம்: பிரதோஷ வழிபாடு சுபிட்சம் அளிக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யுங்கள்; சந்தோஷம் பெருகும்.

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ல்லதோ, அல்லதோ முடிவெடுத்துவிட்டால், முடித்துக் காட்டுவதில் வல்லவரான உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் இனி முழுமையாக முடியும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும்.

சிம்மம்
சிம்மம்

26.12.20 வரை சனி பகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால், பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டியது வரும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். 12.11.20 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குரு பகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் மன அமைதி நிலவும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்யும் அளவுக்குப் பணம் வரும். சிலருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

நவம்பர் 13-ம் தேதி முதல் குரு பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் முன் எச்சரிக்கை அவசியம். வருடம் பிறக்கும்போது ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ராகு 11-ம் வீட்டில் தொடர்வதால் பங்குச்சந்தை மூலம் பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் கேதுவும் 10-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். 1.1.20 முதல் 8.1.20 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் வாகனத்தை வேகமாக இயக்கவேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் கவனமாகப் பழகுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வேண்டாம். 20.06.20 முதல் 15.8.20 வரை; 26.10.20 முதல் 12.12.20 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் சென்று மறைவதால், வீண் செலவுகளைக் குறையுங்கள். வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

வியாபாரிகள் புதுப்புது திட்டங்களால் போட்டியாளர்களைத் திணறடிப்பார்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பார்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். விலகிச்சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள். விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். கணிப்பொறித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் உத்வேகம் காட்டவேண்டிய தருணம் இது. கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

பரிகாரம்: துர்கை ஆலயங்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள். ஆதரவு இல்லாத குழந்தைகளின் வாழ்வுக்கு உதவி செய்யுங்கள். தடைகள் நீங்கி, முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

னசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 6-வது ராசியான கும்பத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வலிமை உண்டாகும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு.

கன்னி
கன்னி

26.12.20 வரை 4-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால், தாயார் உடல் நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வருமானம் அதிகரிக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் சுக ஸ்தனாதிபதியும் சப்தமாதிபதியான குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், இனம்புரியாத கவலைகள் வந்து போகும்.

வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். அரசு வகைக் காரியங்களை உடனுக்குடன் முடித்து விடுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடவேண்டாம்.

நவம்பர் 13 முதல் குரு பகவான் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால், பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். திடீர்ப் பணவரவு உண்டு. சிலருக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கைகூடிவரும். சிலர், சொந்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். வருடம் பிறக்கும்போது, கேது 4-ம் வீட்டில் நிற்பதால், தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரலாம். ராகு 10-ம் வீட்டில் தொடர்வதால், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் கேதுவும் 9-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் வழக்கு விரைந்து முடியும். வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவியுண்டு.

9.1.20 முதல் 2.2.20 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. 16.08.20 முதல் 26.10.20 வரை;13.12.20 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலும் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் பணப் பற்றாக்குறை ஏற்படும். முன்னெச்சரிக்கையாக சேமிக்கப் பழகுங்கள். பயணங்களின்போது கவனம் தேவை.

வியாபாரிகளே! பெரிய முதலீடுகளைச் செய்யும்போது கவனம் தேவை. வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்யுங்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். மெடிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. விவசாயிகள், பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துச் செல்வது நலம். கடனுதவி கிடைக்கும். நெல், கரும்பு சாகுபடியால் நல்ல லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதேநேரம் பதவி மற்றும் ஊதிய உயர்வு உண்டு. கணினித் துறையினர், தற்போது பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்துக்கு மாற்றப்படுவார்கள். மாணவர்கள், எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவார்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடிவரும். கலைஞர்களுக்கு, வாய்ப்பு கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

பரிகாரம்: வீட்டில் அனுதினமும் அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட்டு வாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்; பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கி, வாழ்வு வளம்பெறும்.

துலாம்

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

வருக்கும் தீங்கு நினைக்காத உங்களின் ராசிக்குச் சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்வேளையில் 2020-ம் ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும்.

துலாம்
துலாம்

சாதுர்யமான பேச்சாலும் சமயோஜித புத்தி யாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை மாற்றிக் கட்டுவீர்கள்.

26.12.20 வரை தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் சனி பகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரண மாக முடிக்கும் வலிமை பிறக்கும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றிபெற்றவர்களின் நட்பு கிடைக் கும். வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளிமாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 2-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சகோதர சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் எழும். முக்கிய பணிகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

12.11.20 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், இலக்கை எட்டிப்பிடிக்க கடுமையாகப் போராட வேண்டிவரும். சுபச் செலவுகளும், திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

13.11.20 முதல் வருடம் முடிய குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை.

ஆண்டு பிறக்கும்போது உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் புதிதாக சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களைச் சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பங்குச் சந்தையின் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 9-ம் வீட்டில் ராகு நிற்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கவலைகள் நீங்கும்.

3.2.20 முதல் 27.2.20 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள் உயர்கல்வியைப் போராடி முடிப்பீர்கள். மாணவர்கள், அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. கணிதம், அறிவியல் பாடத்துக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.

வியாபாரிகள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்யவேண்டி வரும். பெரிய தொகையைக் கடனாக தர வேண்டாம். உணவு, கமிஷன், எலெக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். விவசாயிகள், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களை நம்பித்தான் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்வாதி நட்சத்திர நாளில் நரசிம்மரை தரிசித்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும். மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத் தையும் அறிந்துவைத்திருப்பதுடன் நியாயத்தின் பக்கம் நிற்கும் உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்

சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். கடனுதவி எதிர்பார்த்த வகையில் வந்து சேரும். இந்த 12.11.20 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால், எதிர்பார்த்த வகையில் உதவிகளும் திடீர்ப் பணவரவும் உண்டு. ஆனால் செலவுகளும் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

வாரிசு இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் திருணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தங்களின் தவற்றை உணர்வார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

13.11.20 முதல் வருடம் முடியும் வரையுமே குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாத அளவுக்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது 2-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால், பேச்சில் அதிகம் கடுமை காட்டா தீர்கள். சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாகப் பேச, அது விபரீதமாக முடியும். ராகு 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் உண்டு.

செப்டம்பர் மாதம் முதல் உங்களின் ராசிக்குள் கேதுவும் 7-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 26.12.20 வரை சனி பகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாத சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர்ப் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணம், நகையைக் கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 28.2.20 முதல் 27.3.20 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

பெண்களுக்குப் புதிய இடத்தில் வேலை அமையும். மாணவர்களே! படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகள் அதிகமாக எதிலும் முதலீடு செய்யவேண்டாம். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்தச் சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, கட்டடப் பொருள்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். விவசாயிகள் சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரி கட்டுவார்கள். மரப்பயிர்களால் காசு, பணம் சேரும். வீட்டில் நல்லது நடக்கும்.

உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத் துறையினருக்குப் புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக் கும். உங்களின் வெற்றி தொடரும். சிலருக்கு அரசு விருது கிடைக்கும்.

பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். இயன்றால் பிள்ளையார்பட்டி பிள்ளையாரை தரிசித்து வாருங்கள். திருவிழாக்களில் அன்னதானம் செய்ய உதவுங்கள். சங்கடங்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும்.

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

சேமித்து வைப்பதில் தேனீக்களாகவும், செலவழிப்பதில் ஒட்டகமாகவும் இருக்கும் நீங்கள், சரியென மனத்தில் தோன்றியதையே செய்வீர்கள்.உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாள்களாக இழுபறியாகிக் கொண்டிருந்த வழக்குகள், இனி சாதகமாக முடியும்.

தனுசு
தனுசு

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் ராசிநாதனும் சுக ஸ்தானதிபதியுமான குரு, ராசியிலேயே அமர்ந்து ஜன்ம குருவாக நீடிப்பதால், முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

13.11.20 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் உங்களின் ராசியை விட்டு விலகி, 2-ம் வீட்டில் அமர்வதால் கடுமையாகப் பேசாமல் இங்கிதமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வருங்காலம் குறித்த பயமெல்லாம் விலகும். பிள்ளைகளை நீங்கள் எதிர்பார்த்த நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயன் உண்டு.

26.12.20 வரை ஜன்ம சனி தொடர்வதால் உடல்நலத்தில் கூடுதல் கவனம்செலுத்துங்கள். மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாழ்க்கைத்துணைவர் வழியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கணவன் மனைவிக்குள் வரும் சின்னச்சின்ன சச்சரவுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வருடம் பிறக்கும்போது ராசியில் கேது நிற்பதால் உடல்நலனில் கவனம் தேவை. செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகுவும் 12-ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் மன தைரியம் கூடும். இளைய சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர்ப் பணவரவு உண்டு.

28.3.20 முதல் 14.5.20 வரை மற்றும் 1.6.20 முதல் 27.7.20 வரை, சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் மற்றவர்களின் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கண்ணுக்கு அழகான கணவர் வந்து அமைவார். தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். மாணவர்கள் கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவார்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து, பெற்றோர் தலை நிமிரும்படியாகச் செய்வார்கள்.

வியாபாரிகள் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவார்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்துபோவார்கள். விவசாயிகள் மகசூல் பெருகி, அடகிலிருந்த பத்திரங்களை மீட்பார்கள்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருடத் தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைத்துறையினர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானை தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷம். வீட்டில் அனுதினமும் கோளறு பதிகம் படித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளில் கலந்து கொள்ளுங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

வால்களைச் சந்திப்பதில் தயக்கம் காட்டாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 2-ம் இடத்தில் இந்தப் புத்தாண்டுப் பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்களின் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். தடைப்பட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்தத் திட்டமிடுவீர்கள்.

மகரம்
மகரம்

26.12.20 வரை சனி பகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச் சனியின் ஒரு பகுதியான விரயச் சனியாகத் தொடர்வதால், வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுவதைவிட மாற்று வழியை யோசியுங்கள். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பி-களுடன் வீண் வாதங்களில் ஈடுபடவேண்டாம். வீடு கட்ட வங்கி களில் பணம் வாங்கியிருந்தவர்கள் தவணைகளைத் தள்ளிப்போடாதீர்கள்.

12.11.20 வரை உங்களின் விரயாதி பதியான குருபகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால், ஆக்கபூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்கவேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதமாக முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். முதல் முயற்சியிலேயே வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உதவுவார்கள்.

13.11.20 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்குள்ளேயே ஜன்ம குருவாக அமர்வதால் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் போக்கைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர்கள் வருகை அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்களை இரவல் தரவேண்டாம். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திடவேண்டாம்.

வருடம் பிறக்கும்போது, கேது 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. திடீர்ப் பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சொத்து வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். ராகு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவும் 5-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மகளின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள்.

பெண்கள் உயர்கல்வியில் அலட்சியப்போக்குடன் இருக்க வேண் டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

வியாபாரிகளே! பழைய வாடிக்கை யாளர்களை ஈர்க்க புது திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பெரிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம். அனுபவம் மிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளிக்கேஷன், உணவு, எலெக்ட்ரிகல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிரைத் தேர்வு செய்வார்கள். நெல், கரும்பு, நிலக்கடலை மூலம் ஆதாயம் அடைவார்கள். பூச்சித்தொல்லை விலகும். காய்கறி, பழ வகைகளால் லாபம் அடைவார்கள். தண்ணீர் வசதி பெருகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். கணினித் துறையினரே, புதிய வாய்ப்புகளை ஏற்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு வளம் சேர்க்கும். அனுதினமும் சஷ்டிக்கவசம் படித்து முருகனை வணங்கி வழிபட்டு வாருங்கள். இயன்றவர்கள் சுவாமிமலை முருகனை தரிசித்து வரலாம். திருக்கோயில் திருப்பணிகளுக்கும் ஆதரவற்ற முதியோர் பராமரிப்புக்கும் இயன்ற உதவியைச் செய்யுங்கள்; அனைத்து இன்னல்களும் நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் உங்களுக்கு, இந்த ஆண்டு தொடங்கும்போது சூரியனும் புதனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தைவழி சொத்தும் வந்து சேரும். வேலைச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்
கும்பம்

26.12.20 வரை சனி பகவான் உங்கள் ராசியின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப் புழக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

12.11.20 வரை உங்களின் லாப ஸ்தானாதிபதியும் தனாதிபதியுமான குரு பகவான் லாப வீட்டில் நிற்பதால், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர்யோகம், பணவரவு உண்டு. மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். மனத்தில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பெரிய பதவிகள் தேடி வரும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

13.11.20 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரேநேரத்தில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.

ராகு உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளை விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சொந்த விஷயங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.

கேது உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி தீர்த்துவைப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் ராகுவும் 10-வீட்டில் கேதுவும் நுழைவதால் தாயாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். 1.9.20 முதல் 28.9.20 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக் குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.

மாணவர்கள் தேர்வுக்கு முன் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பாருங்கள். விளையாடும்போது கவனமாக விளையாடுவது நல்லது. வியாபாரிகளுக்கு நேர்மையான பணியாளர்கள் அமைவார்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். மாற்றுப்பயிரால் லாபமும் வரும்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரி, உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும். சலுகைகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் உற்சாகமாகி, தடைப்பட்ட வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். பழைய நிறுவனங்கள் அவர்களை அழைத்துப் பேசும்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு ஆனந்தம் தரும். குடும்பத்துடன் சென்று சமயபுரம் மாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண் களுக்குப் புடவை தானம் அளியுங்கள்; தடைகள் யாவும் நீங்கி முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்பதை உணர்ந்தவரான உங்களின் ராசியின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.

மீனம்
மீனம்

குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

26.12.20 வரை சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

பொது விழாக்களைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்துப் பிரச்னை களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 12.11.20 வரை உங்களின் ராசிநாதனும் தொழில் ஸ்தானாதி பதியுமான குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைப்பளு உண்டு.நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்கவேண்டியது இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்கவேண்டாம்.

13.11.20 முதல் வருடம் முடிய குரு பகவான் உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

வங்கியில் கடன் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகனின் கல்யாணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள்.

வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் ராகு நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் ராகுவும் 9-ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரிகளுக்குச் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவார்கள். வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். கேட்ட இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக்கொள்வார்கள். கலைத்துறையினரைப் பெரிய நிறுவனங்கள் அழைத்துப்பேசும். படைப்புத் திறன் வளரும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும். பெருமாள் கோயில்களுக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் தாயாரை வழிபட்டு வாருங்கள். பசுக்களின் பராமரிப்புக்கு உதவி செய்யுங்கள். மனத்தில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism