Published:Updated:

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

புத்தாண்டு ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு ராசிபலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்-2021 - `புதனின் ஆதிக்கத்தில் புத்தாண்டு... மீண்டெழுமா உலகம்?’

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்-2021 - `புதனின் ஆதிக்கத்தில் புத்தாண்டு... மீண்டெழுமா உலகம்?’

Published:Updated:
புத்தாண்டு ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு ராசிபலன்கள்

நிகழும் சார்வரி வருடம், மார்கழி 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை (ஆங்கில முறைப்படி) கிருஷ்ண பட்சத்துத் துவிதியை திதி, பூசம் நட்சத்திரம், வைதிருதி நாமயோகம் - கரசை நாமகரணத்தில், கன்னி லக்னம் - அமிர்த யோகத்தில்... நேத்திரம் ஜுவனும் நிறைந்த நன்னாளில், பஞ்சபட்சியில் ஆந்தை ஊண் செய்யும் காலத்தில் 2021-ம் ஆண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி (1+1+2+0+2+1) தேதி, வருட எண் கூட்டுத்தொகை 7 என வருவதால், மக்களிடையே சேமிக்கும் எண்ணம் குறையும்.

2021 புத்தாண்டு புதனின் ஆதிக்கத்தில் பிறக்கிறது. ஆகவே, மக்களிடையே பயம், தயக்கம் ஆகியவை விலகும். முடங்கிக் கிடந்த தொழில்கள் எல்லாம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கும். கூண்டுக் கிளியாய் அடைப்பட்டுக் கிடந்த மக்கள் கோபுரக் கிளியாய் சுதந்திரமும் மகிழ்ச்சியும் பெறுவார்கள்.

ராஜ கிரகங்களான குருபகவானும், சனி பகவானும் 2021 - ம் ஆண்டு பிறந்த லக்னத்துக்கு 5-ம் வீட்டில் நிற்பதால், மக்களின் அடிப்படை வசதிகள் படிப்படியாக உயரும். கடந்த வருடம் இழந்த செல்வம், செல்வாக்கு, தன்னம்பிக்கை ஆகியவற்றை மீண்டும் பெறுவார்கள்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

அழகு, ஆரோக்கியம், புத்திசாலித்தனம், நிம்மதிக்கு உரிய கிரகமான சந்திரன், புத்தாண்டு பிறக்கும்போது ஆட்சி பெற்றுத் திகழ்கிறார். ஆகவே, உலகையே மிரட்டிய கொரோனா முதலான பல வைரஸ் கிருமி நோய்களுக்கான மருந்து பயன்பாட்டிற்கு வரும்.

சந்திரனைக் குருவும் புதனும் பார்ப்பதால் ஏழை-எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அரசாங்கத்தின் புதுத்திட்டங்களால் சலுகைகள் கிடைக்கும்.

கண்டகச் சனியில் இந்த வருடம் பிறந்திருப்ப தால், பழைய பிரச்னைகளுக்குரிய கவலைகள் அவ்வப்போது மக்களிடம் தலைதூக்கும். அதனால் செயல்பாடுகளில் மந்த நிலை நீடிக்கும்.

வருடப் பிறப்பு ராசிக்கு ஐந்தில் சுக்ரன் நிற்பதால், தடைப்பட்ட திருமணங்கள் இனி கூடி வரும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் அசுர வளர்ச்சி அடையும். விற்காமலும், வாடைக்குப் போகாமலும் கிடக்கும் வீடுகளுக்கு இனி மதிப்பு அதிகரிக்கும். பெண்கள், கலைத் துறையினர் அரசியலில் நுழைந்து அங்கீகாரம் பெறுவார்கள்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

ஆறாம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசாங்கங்களின் கை ஓங்கும். பதவியில் இருப்பவர்கள், விட்டுக்கொடுக்கும் போக்கினால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார்கள். தபால் ஓட்டுகள் பலரின் தலையெழுத்தை மாற்றும் வாய்ப்பு உண்டு.

2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் மத்தியப் பகுதி வரை உள்ள காலகட்டத்தில் வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் தலைதூக்கும்.

வருட லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நிற்பதால் துர் மரணங்கள் அதிகமாகும். ரியல் எஸ்டேட் மெள்ள வளரும். `பணப் புழக்கம் பரவாயில்லை’ என திருப்தி அடைவார்கள். ஷேர் மார்க்கெட்டில் நீண்ட கால முதலீட்டு வகையில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏப்ரல் முதல் தங்கம் விலை உயரும்.

புதன் வலுவாக இருப்பதால், மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியிலிருந்து இயல்பு நிலைக்கு மாறுவார்கள். கல்விக் கூடங்களும் களை கட்டும். ஆனால் ஆசிரியர்கள், மருந்து வர்கள் மற்றும் பல துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் பாதிப்படைவார்கள்.

சுற்றுலாத் தலங்கள் நிரம்பி வழியும். விளை யாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். ராணுவ தளவாடங்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்தியாவின் குரலும், கோரிக்கைகளும் உலக நாடுகளை உலுக்கும். ஏப்ரல் மாதம் முதல் அரசியலில் தந்திர நடவடிக்கைகள் அதிகரிக்கும். கூடு விட்டு கூடு பாய்வோர் அதிகரிப்பர்.

மொத்தத்தில் இந்த 2021 புத்தாண்டு, `கடந்த வருடத்துக்கு இந்த வருடம் பரவாயில்லை’ என நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் அமையும்.

மேஷம்

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

னித நேயம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குச் சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்; சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலெக்ட்ரானிஸ் சாதனங்கள், தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்க லோன் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

ஆண்டு தொடக்கம் முதல் 5.4.21 வரை குரு 10-வது வீட்டில் தொடர்வதால், வேலைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பழைய கடன் பிரச்னைகள் தொல்லை தரும். வங்கிக் காசோலையைக் கவனமாகக் கையாளவும். ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 14 வரை குரு லாப வீட்டில் சென்று அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் ஆதரவு தருவார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்து வீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்தியோகம் மற்றும் திருமணம் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். வேலை தேடும் அன்பர் களுக்கு நல்ல வேலை அமையும்.

இந்த வருடம் முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொத்துப் பிரச்னைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலேயே ராகு தொடர்வதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்து போகும். சேமிக்க இயலாமல் தவிப்பீர்கள். கேது 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். கை - காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் வரும் என்றாலும் ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. வழக்கில், வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

12.8.2021 முதல் 6.9.2021 வரை சுக்ரன் 6-ல் சென்று மறைவதால் அந்தக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6.12.2021 முதல் வருடம் முடியும் வரை 8-ல் மறைவதால், உடல் நிலை பாதிக்கும். சகோதரர்களுடன் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் ஏமாற்றங்கள் ஏற்படும். வி.ஐ.பிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

வியாபாரிகளே! அதிக முதலீடு செய்யவேண்டாம். புதிய சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். எவருக் கும் கடன் தரவேண்டாம். கூட்டுத் தொழிலில் பேச்சில் கவனம் தேவை. உணவு, இரும்பு, கட்டடப் பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! 10-ல் சனியும் குருவும் நிற்பதால், வேலை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். உழைப் புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்து வீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியிடம் அனுசரித்துப் போவது நல்லது.

விவசாயிகளே! சென்றாண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரிகட்டுவீர்கள். மரப் பயிர் களால் லாபம் உண்டு. கலைஞர்களுக்குப் புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். சமூக ஊடகங் களில் கவனம் தேவை.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உழைப்பால் உங்களை உயரவைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஏகாதசி அன்று சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வழிபடுங்கள். தாயில்லா பிள்ளை களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

ரிஷபம்

ன்சொல்லால் அனைவரையும் மகிழ்விப் பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும்.

உங்கள் ராசியை சுக்ரன் பார்த்துக் கொண் டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கல்யாண முயற்சிகள் கைகூடும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

குரு ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றுக் கடனை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் நடக்கும். வேலைகளில் இனி தடைகள் இருக்காது. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், வேலைச்சுமை உண்டு. எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டி வரும். அரசு வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். முக்கிய பணிகளை நீங்களே முடிப்பது நல்லது.

வருடம் முழுவதும் ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில நேரம் முன்கோபம் அதிகரிக்கும். 7-ம் வீட்டில் கேது அமர்வதால், கணவன்-மனைவிக்குள் பிரச்னை எழலாம். உங்களுக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

சனி பகவான் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், சாதிக்கும் எண்ணமும் புது நம்பிக்கையும் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் உயர் கல்வி, உத்தியோகம் அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

7.9.2021 முதல் 3.10.2021 வரை உங்கள் ராசி நாதன் சுக்ரன் பலவீனமடைவதால், சிறுசிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண் பழிச் சொல் வந்து நீங்கும். வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரிகளே! உங்களின் மாறுபட்ட அணுகு முறையால் லாபமீட்டுவீர்கள். பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பணிகளில் தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருட தொடக்கத்திலேயே பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங் களிலிருந்து அழைப்பு வரும்.

கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். விவசாயிகளே! இந்தப் புத்தாண்டில் நன்மைகள் நடக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.

கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி சமூகத்தில் அந்தஸ்தை தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சுவாமிமலை முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள். புகழடைவீர்கள்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மிதுனம்

ட்சியவாதி நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தடைப்பட்ட பல காரியங் களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.

ஆண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். திடீர் பணவரவும் உண்டு. வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

6.4.2021 முதல் 14.9.2021 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுக மாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தோல்வி மற்றும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடு படுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பணவரவு திருப்தி தரும்.

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

வருடப்பிறப்பு முதல் வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் விபத்துகள், ஏமாற்றங்கள், தம்பதிக்கு இடையே மனத் தாங்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே தினசரி நடைப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

ராசிக்கு 6-ம் வீட்டில் கேது சாதகமாக இருக் கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். அரைகுறை யாக நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகள் உதவு வார்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். வேற்றுமொழி பேசுவோரால் ஆதாயம் உண்டு.

ராகு12-ல் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்ரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். எனினும், கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

வியாபாரிகளே! பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவம் மிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளி கேஷன், உணவு, எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களே! வருட முற் பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறு களை மேலிடத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வருட மத்தியில் மன நிம்மதியுண்டு. சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.

விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிரிடுங்கள். நெல், கரும்பு, நிலக்கடலை மூலம் ஆதாயமடைவீர்கள்.

கணினித் துறையினரே, புதிய வாய்ப்புகளை ஏற்கும்போது கவனம் தேவை. கலைத் துறை யினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். சமூக வலைத்தளங்களில் கவனம் தேவை.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய அத்தியாத்தைப் படைக்கச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: பெளர்ணமி நாள்களில் பட்டீஸ்வரம் துர்கையை தரிசித்து வாருங்கள்; துப்புரவு தொழிலாளிக்கு உதவுங்கள்; மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

கடகம்

பொறுமையால் சாதிப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்ரன் நிற்கும்போது 2021 புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கனிவானப் பேச்சால் காரியம் முடிப்பீர்கள்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்குள்ளேயே 2021 புத்தாண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கி யத்தில் அக்கறை காட்டுங்கள். வெளியூர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவு களைத் தவிர்க்கப் பாருங்கள்.

ஆண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத் துங்கள். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம். வரிகளில் பாக்கி வைக்காதீர்கள்.

ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வ தால், பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆண்டின் தொடக்கம் முதல் 5.4.2021 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். சிலருக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும்.

6.4.2021 முதல் 14.9.2021 வரை குருபகவான் 8-ல் சென்று மறைவதால் தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம் எழும். திடீர் செலவுகள் வந்து போகும். அதிக வேலைகள், எதிர்பாராத பயணங்கள், அலைச்சல்கள் உண்டு.

வருடம் முழுக்க ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சில காரியங்கள் இழுபறியாகி முடியும். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் கவனத்துடன் பழக வேண்டும். 5.1.2021 முதல் 29.1.2021 வரை மற்றும் 31.10.2021 முதல் 10.12.2021 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப் போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிவழி உறவினருடன் மனக் கசப்புகள், வாகன விபத்து வரக்கூடும்.

வியாபாரிகளே! விளம்பரங்களுக் குச் செலவு செய்வீர்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். அரசாங்கக் கெடு பிடிகள் தளரும். பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழில் தொடங்குமுன் உரிய ஆலோசனைகளைப் பெறவும்.

விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். மாற்றுப் பயிரால் லாபம் வரும். உத்தியோகஸ்தர்களே! பதவி- சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் வந்துசேரும். விரும்பும் இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். உரிமைகளைப் பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.

கணினித் துறையினரே, அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப் புகள் தேடி வரும். கலைத்துறையினரே, தடைப் பட்ட வேலைகள் இனிதே நிறைவேறும். பழைய நிறுவனம் வாய்ப்பு தரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறந்த அனுபவங்களைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூருக்கு அருகில் திருக் கீழ்வேளூர் எனும் கீவலூரில் அருளும் அட்சய லிங்கேஸ்வரரைப் பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். ஆசைகள் நிறைவேறும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சிம்மம்

ரக்கம் மிகுந்தவர் நீங்கள். உங்களுக்குச் சுக ஸ்தானத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வீடு கட்டும் பணி விரைந்து முடியும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். எனினும், உங்களுக்கு 12-வது ராசியில் 2021 புத்தாண்டு பிறப்பதால் திடீர்ப் பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை, குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். காரியங்களில் அலைச்சல் உண்டு. எதிரிகளில் சிலர் நண்பர் களாவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள்.

ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள்.

ஆண்டு முழுக்க கேது 4-ம் வீட்டில் நிற்பதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடும்போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்து வழக்குகளில் உரிய ஆலோசனையை ஏற்றுச் செயல்படவும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்மாமன் வகையில் செலவுகள் வந்து போகும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். எவருக்காகவும் ஃபைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை வரக்கூடும். ஆனால் 10-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், மன தைரியம் பிறக்கும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் உதவியுண்டு.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டி லேயே வலுவாக இருக்கும்போது 2021 பிறப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வழக்குகளில் வெற்றியும் அதன் மூலம் அந்தஸ்தும் கிடைக்கும்.

29.1.2021 முதல் 21.2.2021 வரை மற்றும் 10.12.2021 முதல் வருடம் முடியும் வரை சுக்ரன் 6 -ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம்.

வியாபாரிகளே! சிக்கல்கள் நீங்கும். அரசியல் வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். வேலையாள்கள் ஒத்துழைப்பர். டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகை களால் ஆதாயம் அடைவீர்கள். சிலர் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். விவசாயிகளுக்கு விளைச் சல் ரெட்டிப்பாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! மன உளைச்சல் நீங்கும். பதவி, சம்பள உயர்வு உண்டு. கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக் கும். உங்களின் தனித்திறமையை அதிகப் படுத்திக்கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களை அறீவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினரே! பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத்திறன் வளரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பரிக்கலில் அருளும் லட்சுமிநரசிம்மரை சனிக்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; வெற்றி கிட்டும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

கன்னி

ண்மையை விரும்புபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது 2021 புத்தாண்டு பிறக்கிறது. வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். மூத்த சகோதரருக்குத் திருமணம் சிறப் பாக முடியும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

3-ம் வீட்டில் சுக்ரன் சாதகமாக இருக்கும் வேளையில், 2021 பிறப்பதால், பணவரவு திருப்தி கரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனைகள் நீங்கும்.

வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு 5-ல் குரு அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும். தாம்பத்தியம் இனிக்கும். செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிக்குக் குழந்தை வரம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை அமையும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். குல தெய்வ நேர்த்திக்கடனைச் செய்துமுடிப்பீர்கள்.

ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 6- ல் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரயம், விரக்தி, ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வேலைகள் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே வீண் ஈகோ பிரச்னைகள் தலைதூக்கும்.

வருடம் முழுக்க சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

வருடம் பிறக்கும் போது 3-ல் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். ஆனால் இளைய சகோதரரு டன் பனிப்போர் வந்து நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதில் தடைகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும்.

9-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். 22.2.2021 முதல் 18.3.2021 வரை உள்ள காலக் கட்டத்தில் சுக்ரன் 6-ல் மறைவதனால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். போனில் பேசியபடி வாகனங்களை இயக்கவேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப் பையில் நீர் கட்டிகள் வரக்கூடும்.

1.1.2021 முதல் 18.2.2021 வரை செவ்வாயின் போக்கு சரியில்லாததால், பூர்வீகச் சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். தூக்கம் குறையும்.

வியாபாரிகளே! பொறுப்பாக செயல் பட்டு லாபத்தைப் பெருக்கப்பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிசன், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். விவசாயிகளே! கடனில் பெரும்பகுதியை அடைக்கும் அளவுக்கு மகசூல் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரருடன் வீண் தகராறு வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களே! உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சி யம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு அரசின் பாராட்டு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு உங்களின் பொறுப்பை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம், வடவள்ளி எனும் ஊரில் அருளும் லட்சுமி விநாயகரை, சதுர்த்தி அன்று வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்; மகிழ்ச்சி தங்கும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

துலாம்

றைப் பக்தி மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப் பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்களும் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

சுக்ரன் சாதகமாக இருக்கும்போது 2021-ம் ஆண்டு பிறப்பதால், பெற்றோரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். ஆண்டின் தொடக்கம் முதல் 5.4.2021 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக் கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதப்படுத்த வேண்டாம். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் வீண்பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். வழக்குகளில் அவசரம் வேண்டாம்.

ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால், பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வீர்கள். பணவரவு உண்டு. தடைப் பட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். தாயா ருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான கருத்துமோதல்கள் விலகும். குழந்தை இல்லா தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்குத் திருமணம் கூடிவரும்.

இந்தாண்டு முழுக்க ராசிக்கு 2-ம் வீட்டில் கேது நிற்பதால் பேச்சில் காரம் வேண்டாம். தங்க நகைகளை யாரிடமும் இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ராசிக்கு 8-ம் வீட்டில் ராகு நிற்பதால், கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். உணவு, வாகனப் பயணத்தில் அதீத கவனம் தேவை.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் சுக ஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். தாயாருக்குச் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்று, புது சொத்து வாங்கு வீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

18.3.2021 முதல் 11.4.2021 வரை ராசிநாதன் சுக்ரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

18.2.2021 முதல் 13.4.2021 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் சகோதரர்களால் நிம்மதி இழப்பீர்கள். எந்த உறுதி மொழியும் யாருக்கும் தர வேண்டாம். செலவுகளால் திணறுவீர்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளே! சந்தை நிலவரங் களை அறிந்து, அதற்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடிகள் தளரும். வாடிக்கை யாளர்களைத் திருப்திபடுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது குடைச்சல் தருவார்கள். பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பணியிடத்தில் அவல நிலை மாறும். மதிப்பு கூடும். எனினும் சிலர் பழைய பிரச்னைகளைக் கிளறலாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். பதவி உயரும். விவசாயிகளே, நவீனரக உரங்களால் விளைச் சலை அதிகப்படுத்துவீர்கள். ஊரில் மரியாதை கூடும். கணினித் துறையினரே! அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினரே, சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மலை வையாவூரில் அருளும் நர்த்தன அனுமனைச் சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆடை தானம் செய்யுங்கள்; நல்லது நடக்கும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

விருச்சிகம்

புரிந்து கொண்ட நண்பர்களுக்குப் பக்க பலமாக இருப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் 2021 புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணப்புழக்கமும், உங்களின் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

சுக்ரன் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த வழி பிறக்கும். கடனாக அளித்தத் தொகை திரும்ப வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 5.4.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், கடினமாக உழைத்து இலக்கை அடைவீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். லேசான தலைச்சுற்றல், சலிப்பு, முன் கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துசெல்லும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள்.

ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். எனவே மனஉளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் வருடம் முடியும் வரை ராகு ராசிக்கு 7-ம் வீட்டில் தொடர்வதால் சாதிக்கும் வைராக்கியம் பிறக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வந்துபோகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப் பையில் கட்டி வரக்கூடும். சிலர், உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவர். சிக்கனம் அவசியம்.

ராசிக்குள் கேது நிற்பதால் எதிலும் ஒரு சலிப்பும் சோர்வும் ஏற்படும். கையிருப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

தைரிய ஸ்தானமான 3-ல் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் 2021 புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். புது வல்லமை பிறக்கும். குடும்பத்தில் மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வழக் கால் பணம் வரும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்களுடன் இணைந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

13.4.2021 முதல் 3.6.2021 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் மறைந்து பலவீனமாவதால், மன இறுக்கம் ஏற்படும்; எதிர் காலம் குறித்த பயம் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். 11.4.2021 முதல் 5.5.2021 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவுகள், தம்பதிக்குள் சிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளே! தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர் கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களைப் பகிர வேண்டாம். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி-இறக்குமதி, நீசப் பொருள்களால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே, மாற்றுப் பயிரால் வருமானம் கிடைக்கும்; வங்கிக் கடன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். கணினித் துறையினருக்குக் கூடுதல் சம்பளத் துடன் வேலை கிடைக்கும். கலைஞர்களின் படைப்புகள், பட்டிதொட்டியெங்கும் புகழடையும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, தடைகளை நீக்கி உங்களுக்கு முன்னேற்றம் தருவதாக அமையும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், கருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஐயப்பனைச் சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்; வாழ்வில் சுபிட்சங்கள் உண்டாகும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

தனுசு

பாசமும் நேசமும் நிறைந்தவர் நீங்கள். உங்களுக்குச் சுக்ரன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை உண்டா கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 5.4.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். `வாரிசு இல்லையே’ என வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக் கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால், சில காரியங் களைச் சிரமத்துடன் முடிக்கவேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள், இழுத் தடிப்பார்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தவறான நபர்களுடன்... அவர்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நட்பு கொள்ள வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க ராசிக்கு 6-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகள் அடங் கும்; மதிப்பு கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முழுமை அடையும். 12-ம் வீட்டில் கேது தொடர்வ தால் சுபச் செலவுகள் அதிகமாகும். கல்யாணம், சீமந்தம் என வீடு களை கட்டும். காரியங்களில் அலைச்சல் உண்டு. எவருக்கும் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க பாதச் சனி தொடர் வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் அறிவுபூர்வமாக முடிவு எடுங்கள். உழைப்பு அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். உங்கள் சூழல் தெரியாமல் உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.

4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், தம்பதிக்கு இடையே மனக் கசப்புகள் வரும். உங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுத்த சிலர் முயல்வார்கள்.

5.5.2021 முதல் 29.5.2021 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது; இல்லையேல் வீண் பழி சேரும்.

வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்யவேண்டாம். சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்யுங்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். மருந்து, என்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.

விவசாயிகளே! பயிரைக் காப்பாற்ற புது முயற்சியில் இறங்கி பலன் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களே, சம்பள உயர்வு தேடி வரும். அலுவல் சார்ந்தும் அதிகாரிகளின் சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவிகளில் அமர்வீர்கள். சிலருக்குப் புது வேலை கிடைக்கும்.

கணினித் துறையினரே! அந்நிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும். கலைஞர் களே! கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பணவரவைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் திருச் செந்தூர் முருகனை தரிசித்து வழிபட்டு வாருங்கள். பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவி செய்யுங்கள்; தடைகள் நீங்கி உங்களின் வாழ்க்கை செழிக்கும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மகரம்

பொறுமையால் சாதிப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்துள்ள நேரத்தில் 2021 புத்தாண்டு பிறக்கிறது. திட்ட மிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத் துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு தொடங்கும்போது உங்கள் ராசியைச் சந்திரன் பார்ப்பதால், எதிலும் ஆர்வம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 5.4.2021 வரை, ஜன்ம குரு நீடிப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில நேரங்களில் நிம்மதி இழந்து தவிப்பீர்கள். அவநம்பிக்கை எழும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும்.

ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் 2-ல் அமர்வதால், இங்கிதமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக் கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.தலைச்சுற்றல், வாந்தி, அடிவயிற்றில் வலி யாவும் விலகும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

வருடம் பிறக்கும் போது ராகு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை நன்கு விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். சந்தேக எண்ணங்கள் தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறு வீர்கள். பூர்வீகச் சொத்தைக் கவனமாகக் கையாளுங்கள்.

கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் வற்றிய பணப் பை நிரம்பும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர் களால் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள், நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இந்தாண்டு முழுக்க ஜன்மச் சனி தொடர்வ தால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்துபோகும். பெரிதாக்க வேண் டாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். பெரிய பதவியில் இருப்பவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் எவரையும் விமர்சிக்கவேண்டாம். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கைச் சரிபாருங்கள்.

30.5.2021 முதல் 23.6.2021 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். 22.7.2021 முதல் 7.9.2021 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், காரிய தாமதமும் ஏற்படும்.

வியாபாரிகளே! புதுப் புதுத் திட்டங்களால் போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணிக்குச் சேரும் புதியவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். வாடிக்கையாளர்களைக் கவர சலுகைத் திட்டங்களை அறிவிப் பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

விவசாயிகளே! நிலத்தில் நீர்வளம் செழிக்கும். டிராக்டர் போன்ற வாகனம் வாங்க லோன் கிடைக்கும். விளைசலை அதிகப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். எனினும் சக ஊழியர்களால் தர்மசங்கடத்துக்கு ஆளாக நேரிடலாம். அவர்கள் மேல் அதிகாரியிடம் உங்களைப் பற்றி புகார் வாசித்துக்கொண்டுதான் இருப்பார்கள். கணினித் துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கலைத் துறையினரே பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைத்த வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய வெற்றி களைத் தரும் விதமாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருளும் ஸ்ரீசரபேஸ்வரரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங் கள்; ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள்; உங்களின் பிரச்னைகள், தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

கும்பம்

டினமான அனுபவங்களையும் படிப்பினை யாக ஏற்றுக்கொள்ளும் பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந் திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.

காரியவாதிகளைக் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினரால் ஆதாயம் உண்டு. உங்கள் 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 5.4.21 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால், வீண் செலவுகள் அதிகரிக்கும். சில அத்தியாவசியங்களுக்காக வெளியில் கடன் பெற நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை ஜன்ம குருவாக அமர்வதால், உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். எவரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக் காதீர்கள். லாகிரி வஸ்துகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தரவேண்டாம்; யாருக் கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் வருடம் முடியும் வரை ராகு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து நீங்கும். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சகோதர வகையில் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர் கள். கேது 10-ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்தியோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, ஒற்றைத் தலைவலி வந்து போகும். அரசாங்க விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். வீண்பழி ஏற்பட வாய்ப்பு உண்டு.

சனிபகவான் ராசிக்கு 12-ல் அமர்கிறார். விரயச் சனி தொடர்வதால், பழைய கடனை எண்ணி கவலைப்படுவீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும். நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

23.6.2021 முதல் 18.7.2021 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையைத் தவிர்க்கப் பாருங்கள்.

8.9.2021 முதல் 23.10.2021 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதனால் கட்டுக்கடங்காத செலவுகள் வந்துக் கொண்டே யிருக்கும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வியாபாரிகளே! வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். அனுபவ அறிவால் வெல்வீர்கள்.மெடிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரரை மாற்றுவீர்கள்.

விவசாயிகளே! கடனுதவி கிடைக் கும். நெல், கரும்பு சாகுபடியால் நல்ல லாபம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் கஷ்டப் படுத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி - சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். அவ்வப்போது மற்றவர்களின் பணி களையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். அலுவலகத் தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். கணினித் துறையினரே! தலைமை அலுவலத்திற்கு இடமாற்றம் கிடைக்கலாம்.சம்பளம் உயரும். கலைஞர்களுக்கு வாய்ப்புத் தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் திருப்பங்கள் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை சோழிங்கநல்லூரில் அருளும் ஸ்ரீபிரத்யங்கராதேவியை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுங்கள்; எதிலும் வெற்றியுண்டு.

2021 புத்தாண்டு ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மீனம்

ர்மம் நம்மையும் வம்சத்தையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கைக் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சுக்ரன் வலுவாக நிற்கும் நேரத்தில் 2021 புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். வீடு கட்ட பல வழிகளில் உதவிகள் கிடைக்கும்.

உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில், இந்த ஆண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களுக்கு வேலை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 5.4.21 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலே வலுவாகக் காணப்படுவதால் திடீர்யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடி வரும்.

ஏப்ரல் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள், வேலைகள் அதிகரிக் கும். முன்பின் அறியாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். கோயில் விழாக்கள் மற்றும் சகோதரர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். 9-ம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள்.

புத்தாண்டு பிறக்கும்போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால், திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. விசேஷங்களில் உங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும். சொத்து வழக்குகள் வெற்றி பெறும்.

18.7.2021 முதல் 12.8.2021 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் அந்தக் காலகட்டத்தில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்துபோக வாய்ப்பிருக்கிறது.

24.10.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய் 8-ல் அமர்வதனால் சகோதரர்களுடன் பகை வரும். செலவினங்கள் அதிகமாகும். பழைய கடனை நினைத்தும் அவ்வப்போது அச்சப்படுவீர்கள்.

வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக்கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தை குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். எவரையும் நம்பி பெரிய தொகையைக் கடனாகத் தர வேண் டாம். உணவு, புரோக்கரேஜ், கமிசன், எலெக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். விவசாயிகளே! இயற்கை உரங் களால் பன்மடங்கு லாபம் பெறும் நேரம் இது; பிரச்னைகள் பனி போல் விலகும்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பணிகளை விரைந்து முடிக்கப்பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங் கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. வருட பிற்பகுதியில் பதவி உயரும். கலைஞர்களே! புதிய வாய்ப்புகள் வரும்; சாதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்கள் நிலையைத் தக்கவைக்கக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை உயர உதவுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.