மற்றவர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். குருபகவான், 14.4.22 முதல் 22.4.23 வரை 6-ம் வீட்டில் அமர்ந்து, சந்தோஷத்தையும் சங்கடங் களையும் கலந்துத் தரவுள்ளார்.

`சகட குருவாச்சே!’ என்று அச்சப் படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி மற்றும் புதனின் நட்சத் திரத்தில் குரு செல்வதால், அவ்வப்போது யோக பலன்களையும் அள்ளித் தருவார் குரு. எனினும் 6-ல் குரு அமர்வதால் வீண் செலவுகள் அதிகரிக் கும். காரியங்களில் அலைச்சல் குடும்பத்தில் சச்சரவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வேண்டாம். எவருக்கும் உறுதிமொழி தரவும் வேண்டாம். இரவுப் பயணங் களைத் தவிர்க்கவும். செலவுகள் கூடும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, புறநகர்ப் பகுதியில் குடியேறுவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் தடுமாற்றம் நீங்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் சந்தேகம் தீர்ந்து ஆரோக்கிய விவாதங்கள் வந்து நீங்கும். தடைப்பட்டிருந்த கட்டட வேலைகளை நிறைவு செய்வீர்கள்.
குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் முக்கிய பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சூழ்ச்சியின் காரணமாக தடைப்பட்ட பதவி-சம்பள உயர்வு இனி தேடி வரும். அலுவலக வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுக ளைக் கட்டுப்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவார்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் தைரிய ரோகாதிபதியான குரு, தனது பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்கிறார். சுபச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவர். எனினும் இனம் தெரியாத கவலைகள், வேலைச்சுமை, பொருள் இழப்பு, மருத்துவச் செலவு வந்து செல்லும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
30.4.2022 முதல் 24.2.23 வரை உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத் திரத்தில் குரு செல்வதால், மனஅமைதி கிட்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு- வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதியிலேயே குரு வக்ரத்தில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் பாக்ய விரயஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துத் தகராறு தீரும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில்
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்களும் அமையும். வாடிக்கையாளர்களிடம் இதமாகப் பேசுங்கள். மரவகைகள், உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
உத்தியோகத்தில்
வேலைப்பளு கூடும். அதேநேரம் அதிகாரிகளின் பாராட்டு, பதவி- சம்பள உயர்வு எல்லாம் மார்ச் மாதத்தில் அமையும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களின் முன்கோபத்தைக் குறைப்பதுடன், வளைந்துகொடுத்துச் செயல்படவைத்து, பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சிதம்பரத்தில் அருளும் ஶ்ரீநடராஜப் பெருமானையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். வாய் பேச இயலாத அன்பர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.