Published:Updated:

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டேயிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் முகம் மலரும்.

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி, சனிக்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.01 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறக்கிறது.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம் சுக்கிரனும் புதனும் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். சேமிக்க முடியாதபடி செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க சனி 10-ல் அமர்வதால் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். நல்ல வேலை கிடைக்கும் என்றாலும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த 2022-ம் ஆண்டு விடுபட்டுப்போன உறவுகளைப் புதுப்பிப்பதாகவும் கனவுகளை நனவாக்குவதாகவும் அமையும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம் உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டேயிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் முகம் மலரும். எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். உங்களின் புகழ், கௌரவம் உயரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்க லோன் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கணவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டுக்குள் காட்டுவார். உங்கள் கனிவான பேச்சால் மாற்றுவீர்கள். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். புண்ணியத்தலங்கள் சென்று வருவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். கடினமாக உழைத்து வருமானத்தை உயர்த்துவது பற்றி யோசிப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்தாலும் உயரதிகாரிகளால் உதவிகள் உண்டு. நிலுவையிலிருந்த தொகை கைக்கு வரும். இந்த 2022-ம் ஆண்டு ஓரளவு வருமானத்தையும் சமூக அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மிதுனம் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். கணவர் அவ்வப்போது கோபப்பட்டாலும் பாசம் குறையாது. அவரின் அலட்சியத்தால் சில இழப்புகளும், உறவினர்களுடன் மனக்கசப்புகளும் வந்து நீங்கும். மாமனார், நாத்தனார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு பயம் இருக்கும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. இந்த 2022-ம் ஆண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கடகம் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் கை ஓங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். சில நேரம் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கணவருடன் இருந்த கசப்பு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் இனி நடந்தேறும். மாமியாரின் ஆலோசனைகள் சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. இந்த ஆண்டு முழுக்க சனி 7-ல் நின்று கண்டகச் சனியாக வருவதால் வீண் சந்தேகத்தால் கணவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். இந்த 2022-ம் ஆண்டு நாவடக்கத்துடன் செயல்படுவதால் நாலாவிதங்களிலும் நன்மை அடையச் செய்யும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம் உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றும். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி கிடைக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் பக்குவத்தை அடைவீர்கள். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். உறவினர் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். மாமனார், நாத்தனார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் அலட்சியம் கூடாது. அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடியும். மாமனார், மாமியார் வலிய வந்து சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்னைகள் இருக்கும் என்றாலும் நிம்மதி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். இந்த 2022-ம் ஆண்டு ஆரம்பத்தில் உங்களை அலைக்கழித்தாலும், இறுதியில் திடீர் வளர்ச்சியைத் தரும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கன்னி உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த 2022-ம் ஆண்டு பிறப்பதால் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவர் உங்களை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். உங்களுடன் மனம்விட்டுப் பேசுவார். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார். மனோபலம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். நாத்தனாரின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சில நேரம் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் முற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் முன்னேறுவீர்கள் என்றாலும் மறைமுக அவமானம், சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். இந்த 2022-ம் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தரும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

துலாம் இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவு கூடும். சொத்து வாங்குவீர்கள். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை, வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். கணவருடன் பனிப்போர், மருத்துவச் செலவுகள், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து போகும். வழக்கில் அவசரம் வேண்டாம். சில நேரம் ஓய்வெடுக்க முடியாமல் போகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்திலும் வேலைச்சுமை இருக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் அமையும். இந்த 2022-ம் ஆண்டு திட்டங்களில் வெற்றியையும் அதிரடி முன்னேற்றங்களையும் தரும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம் சனி 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த 2022-ம் ஆண்டு பிறப்பதால் மனோபலம் அதிகரிக்கும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் சோர்வு, களைப்பு, ஏமாற்றம், வீண் பிடிவாதம் வந்து செல்லும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்கள் உண்டு. கணவரின் கோபம் குறையும். அவருடனான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால், கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த 2022-ம் ஆண்டு அதிகாரத்தையும் செல்வத்தையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தனுசு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகளும் பயணங்களும் தொடர்ந்துகொண்டே போகும். முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் தாமதமாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். நாத்தனார் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார். அயல்நாடு சென்று வருவீர்கள். இந்த ஆண்டு ஏழரைச் சனியும் தொடர்வதால் வீண் விவாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக ஏதேனும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மாற்றப்படுவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். இந்தப் புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களைச் சுறுசுறுப்பாக்குவதுடன் வசதி வாய்ப்பையும் தரும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மகரம் உங்கள் லாப வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாக எடுத்துச் செய்வீர்கள். அடிமனதிலிருந்த பயம் நீங்கும். கணவரின் கூடாப் பழக்க வழக்கங்களைச் சரி செய்வீர்கள். புது வீட்டில் குடிபுகுவீர்கள். மாமியாரின் மனம் மாறும். சகோதரர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். பணவரவு உண்டு. அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். அரசால் அனுகூலம் உண்டு. திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. வருடம் முழுக்க உங்கள் ராசி யிலேயே சனியும் தொடர்வதால் உடல் உபாதைகள் வந்து விலகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். இந்தப் புத்தாண்டு அரைகுறையாக இருந்த வேலைகளை முடிக்க வைப்பதுடன் ஓரளவு மகிழ்ச்சியையும் தரும்.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கும்பம் இந்த ஆண்டு உங்களுக்கு 10-வது ராசியில் பிறப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். பெரிய பதவிகளில் அமர்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதைவிட்டு அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் பாராமுகம் மாறும். தாம்பத்யம் இனிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். சேமிப்புகள் கரையும். ஆனால், ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் மனவலிமைக் கூடும். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். மாமியார், நாத்தனாரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஏழரைச் சனி தொடர்வதால் வீண் விரயம், ஏமாற்றம், திடீர்ப் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் இருக்கும். உங்களுக்கு இருந்துவந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள். உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். திட்டமிடுதல் மூலமாகவும் விட்டுக்கொடுத்துச் செல்வதாலும் வெற்றி பெறும் வருடமிது.

2022 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மீனம் உங்கள் ராசிக்கு சந்திரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கலங்கிப்போயிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவரின் கோபம் குறையும். அயல்நாடு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். சில நேரம் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவருடன் சச்சரவு வரும். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கு சாதகமாகும். லாப வீட்டில் சனி பகவான் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியம் துலங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள், முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கறாராக இருங்கள். புது ஏஜென்சியை எடுப்பதற்கு முன் யோசியுங்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகும். இந்த 2022-ம் ஆண்டு கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் சகிப்புத் தன்மையாலும் வெற்றி பெற வைக்கும்.